படம்-கமலா ஸ்ரூடியோ கிளிநொச்சி
ஆண்டு-1982
இதுவும் ஒரு சுயபுராணம்தான்.ரோம் மட்டுமல்ல உலகமே கொரோனாவால் பற்றி எரியும் போது.உனக்கு இந்த பிடில் தேவையா என்று யாரேனும் கேட்கக்கூடும்.ஆயினும் எனது புல்லாங்குழலை மீட்டுவதற்கு இந்த பூமியில் பேரமைதியான சாலை வாய்ப்பாக இருக்கிறது.இந்த நிசப்தத்தை விட்டால் எனது மெல்லிய இசை இனி எப்போதும் எனக்கு ஒரு பருவத்தில் சிநேகமாக இருந்த நாணல்களுக்கு கேட்கப்போதவில்லை.மீண்டும் இந்தச் சாலைகளில் தொடங்கிவிடும் பங்குச் சந்தைப் பரபரப்புகளிலும் நிரம்பிவழியும் அரங்குகளிலும் இலட்சம் மரண வலி மறக்கப்பட தொடங்கிவிடும்.பிறகு நான் யாரிடம் சொல்வேன்.எனது மனதின் ஊஞ்சல்களில் குந்திக்கொண்டிருக்கும் கதைகளை.
திரைப்படங்களுக்கு இடைக்கிடையில் போதை மறுப்பு விளம்பரங்களை போல முன்னதாயே இது முற்றிலும் சுயபுராணம் என்பதை அனைவருக்கும் விளம்பரப்படுத்திக்கொள்கிறேன்.இந்த சுயபுராணத்தின் நாயகன் குணேந்திரராஜன்.அநேகமாய் இப்போது உள்ள எனது நண்பர்கள் வட்டம் பலருக்கு தெரியாத பெயர்தான்.ஆனால் என் கிராமத்தை தாண்டி பட்டணத்தை ஆறுவயதில் எட்டிப்போர்த்தபோது பட்டணத்துச்சாலையில் என் கையை பற்றிக்கொண்ட என் முதல் நண்பன்.அவனை எங்கு சந்தித்தேன் என்பதற்காக கொஞ்சம் நான் மீண்டும் ஒடுங்கிய என் கிராமத்தின் புளுதிவீதியில் நாலைந்து கட்டைகள் பிஞ்சுப்பாதங்களால் நடக்கிறேன் இப்போது.
எண்பதாம் ஆண்டுகளில் எனது பள்ளிப்பருவம் தொடங்கிய நாட்களது.ஒரு நாள் கிளிநொச்சியில் குளத்தடிப்பாடசாலை ஒன்றில் சேர்க்கப்பட்டேன்.குளத்தடிப் பாடசாலையென கொஞ்சப்பேரும் இன்னும் கொஞ்சம் பேர் அதை கிளிநொச்சி கனிஸ்ட மகா வித்தியாலயம் என்று அழைத்தார்கள்.அங்கு என் வாழ்க்கையின் இன்னொரு அத்தியாம் தொடங்குகிறது.அந்த ஒரு நாளில் என்னைப்போலவே அந்தக் குளத்தடிபள்ளியில் அயலுள்ள பல சிறுவர்களுக்கும் சிறுமிகளுக்கும் இன்னொரு அத்தியாயம் தொடங்கியது.என்னை அவர்களும் நான் அவர்களையும் சந்திக்கின்ற ஒரு இனம்புரியாத இனிமையும் வாத்தியார்களின் பார்வை.பிரம்புகள் வகுப்புகள் மணியொலிகள்.பெரிய மாணவர்கள் அவர்களின் பரபரப்புக்கள் எல்லாவற்றையும் பார்க்கும்போது ஒரு பதட்டமும் ஒரு புல்லரிப்புமான ஒரு முதல்நாளது.வாழ்க்கையின் முதல் நாட்கள் எப்போதுமே நிச்சயமாக ஒரு கவிதைதான் என்பதை உணர்கிறேன்.சிலவற்றை எழுதமுடியும்.சில வற்றை நினைக்க மட்டுமே முடியும்.
சிறுவர்களாகிய எங்களை கண்டு முதலில் அந்தப்பள்ளிக்கு முன் உயர்ந்து வளர்ந்திருந்த மலைவேம்புகள் நிச்சயமாக மகிழ்ச்சி அடைந்திருக்கும்.அந்த உயர்ந்த பசுமையான மரங்களுக்கு பம்பரக்காய் மரம் என்று மறுபெயர் வைத்ததும் அதற்காக அது பள்ளிவிட்டுப்போகும்போதும் வரும்போதும் நிறைய பம்பரக்காய்களை எங்களுக்காக கொட்டித்தள்ளியதுமானது அந்த மரத்துக்கும் எங்களுக்குமாக பிணைப்பு.மலைவேம்புகளின் இலையுதிர்காலங்கள் சாலைகளையும் வசந்தகாலங்கள் வானத்தை அழகுபடுத்தும்.முதல்நாள் குளத்தடிக்குப்பள்ளிக்கு நுழையும்போது குளிர்மையான நிழல்களால் ஏதோ சொல்லி அனுப்புவதுபோல ஒவ்வொரு முறையும் அது குளிர்மையாக மனதை ஆசுவாசுப்படுத்தி வகுப்பறையில் இருக்க வைத்தது.
குளத்தடிப்பள்ளிக்கு தினமும் பனி காயாத மெல்லிய வெயிலில் நடக்கத்தொடங்குவோம் நானும் கிராமங்களின் நண்பர்களும்.உண்மையில் பள்ளி பல கிலோமீற்றர்களுக்கு அப்பால் தூரத்தான் இருந்தது.தூரம் என்பதற்காக எந்த இரதமும் எங்கள் முன் வந்து நிற்கப்போவதில்லை.ஆனால் தூரம் தெரியாததற்கு அந்த புளுதிச்சாலைகள் தேர் உலாவரும் வீதியாக குளிர்மையும் அழகுமாய் இருந்தது.வீட்டில் இருந்து புறப்படும் போது வாசலில் பெரிய பாலை மரம்.எண்பதாம் ஆண்டிலியே அதற்கு வயது போய்விட்டது.நான் நினைக்கிறேன்.அது பண்டாரவன்னியின் கைலாய வன்னியனின் நண்பராக கூட இருந்திருக்கலாம்.ஆனால் மாரிகாலங்களில் வானம் இருண்டு இரவில் மழைக்கு முன் ஓர் அமைதியில் சாமத்தில் கூவைகளை இருத்தி அந்தப்பாலை அதை பாடச்சொல்லி கேட்கும்.பிறகு அதன் பாட்டு ஏதோ மயானத்தில் படுத்திருப்பதுபோல பீதியை கிளப்பும்.காலையில் அந்தப்பாலை ஒன்றுமறியாதது போல கிளிகளை கிளைகளில் அமர விட்டு அவற்றின் சத்தங்களையும் முத்தங்களையும் இரசித்துக்கொண்டிருக்கும்.
குளத்தடிப்பள்ளிக்கு அதுதான் கனிஸ்ட மகா வித்தியாலயத்திற்கு தினமும் நடக்கத்தொடங்க முதலில் சந்தியில் இருந்த இராசையா கடையின் ஊது பத்தி வாசமும் அப்போதே அடுக்கப்பட்டிருக்கும் சுடசுட பாணின் வாசமும் நாசியில் தொற்றிக்கொள்ளும்.பிறகு இரண்டு மூன்று நாவல்மரங்கள் அதில் ஒரு பருவத்தில் பூக்கள் இன்னொரு பருவத்தில் பழங்கள்.அந்த புளுதிவீதியின் ஓரங்களில் புற்களில் பனி காயாதிருக்கும்.இப்போது பனித்துளிகள் ஆவலாய் இருந்தாலும் புற்கள் ஓரங்களில் இயற்கையாக பார்ப்பது அரிது.பால்க்கார மணியண்ணையின் மாட்டுப்பட்டி வாசம்.கிளுவை வேலிகள் கிடுகு வேலிகள் வாழைச்சரை வேலிகள்வேலிகளுக்குள் இருக்கும் குடிசைகள்.மண் குடிசைகள் தட்டிப்படலைகள்.அரிதாக ஒன்றிரண்டு கல்வீடு.அதுவும் யன்னலுக்குப் பதிலாய் கிடுகு மறைப்பாய் இருக்கும்.வேலிகளின் இடையே ஈரமான தோட்டப்பாத்திகள்.அதில் செழித்திருக்கும் வாழை கீரை கத்தரி இப்படி வீட்டில் இருந்து பள்ளிக்கு நடக்கத் தொடங்கிய கொஞ்சத்தூரத்தில் இவற்றை கடக்கும்போது இன்பமில்லையென்று எவர் சொல்வார் இந்தவுலகில். இதை இழந்ததை துயர்கொள்ளாதவர் எவரிருப்பார் இவ்வுலகில்.
தினமும் காலையில் எப்படியும் ஒரு சீவல்காரர் கடப்பார்.தொடை தெரியும்படி சண்டிக்கட்டு.அரையில் சுரைக்கூடு.அதற்குள் தட்டுக்கட்டை. பளபளக்கும் ஒரு சீவல்கத்தி இரண்டு முட்டிகளுடன் அவரும். என் பள்ளிக்கும்போகும் முதல் காலத்தின் அடையாளங்களில் அவருமொன்று இப்போது வீட்டில் வந்து ஆட்டோ ஏத்திக்கொண்டுபோய் பள்ளியில் இறக்கும் ஏற்றும்.பிள்ளைகள் எந்த இயற்கையின் வாசத்தையும் சுவாசிக்க இரசிக்க வாய்ப்பில்லை.அன்றைக்கு எனது கிராமத்தில் மட்டுமல்ல கிளிநொச்சியிலேயே ஒரு ஆட்டோ இருந்ததில்லை.ஆனால் கார்கள் இருந்தன.அரிதாக.எப்போதாவது தெருவில் அவை எம்மைக் கடக்கும்போது அதன் பெற்றோல் வாசம் இனிது.அரிதாக மோட்டார் சைக்கிள் கடக்கும் அதன் சத்தம் இனிது.அதை ஓடுகின்றவர்தான் எங்கள் நாயகன்.
இப்போது பாலத்தடியில் நிற்கிறேன்.இரணைமடு குளத்தின் குளிர்ந்தநீர் கிளிநொச்சி குளத்துக்குப்போகும் அதன் இடைவெளியில் இந்தப் பாலம். முதன்முதலில் நான் கண்டபாலமது.முதன்முதல் நான் கண்ட வாய்க்காலது.பாலத்தடியில் இரண்டாவது கடை.அதை பாலத்தடிக்கடை என்றுதான் சொல்லுவோம்.ஒரு நாள் எனக்கு காய்ச்சல் அந்த பாலத்தடிக்கடையில்தான் அம்மா வந்து பிளேன்சோடா வாங்கினார்.பள்ளியை அடைவதற்கு முதல் இரண்டு கடைகளை கடப்பேன்.ஒரு அந்தோனியார் ஒரு பிள்ளையார் ஒரு வைரவரை கடப்பேன்.அந்தோனியார் வீட்டுக்கு முதல் சந்தியில் பிறகு நாவல் மரத்தடியில் பிள்ளையார்.குளத்தடியில் வைரவர்.என்னை நன்றாக தெரிந்தவர்களில் இந்த மூவருக்கும்தான் முதலிடம்.என்ன கணக்கை எனக்கு போட்டு வைத்துவிட்டு அன்று கொடுப்புக்குள் சிரித்தார்களோ தெரியவில்லை.
பாலத்தடியை கடந்தால் குளத்தடி அதில் இறக்கப்பாதை அதன் பேர் ஐந்தடிவான்.மழைகாலங்களில் நீர் நிரம்பி பொங்கி பரவி பாயும்.அழகுதான் அது.ஒரு கரையில் இருந்து மறுகரையை இரசிப்பது ஐந்தடிவானில் பேரழகு.சில மழைக்காலங்களில் காற்சட்டை நனைய நனைய புத்தகங்களை தலைக்குமேல் பிடித்தபடி சிறுவர்கள் நாங்கள் கைகோர்த்தபடி தண்ணீர் இழுத்துச்செல்லலாதபடி கரையை அடைவோம்.பள்ளிக்கு போகாமல் இந்த ஐந்தடிவானும் வீட்டில் இருந்து மகிழவும் விடுமுறை வாங்கித்தருவதுண்டு.கிளிநொச்சியில் வாழ்ந்தவர்களுக்கு இந்த ஐந்தடிவானோடு உறவின்றி இருக்காது.எல்லோரிடம் ஐந்தடிவான் பற்றிய ஒரு மழைக்கால கதையிருக்கும்.
ஐந்தடி வானின் ஓரமாய் ஒரு பெரிய புளியமரம் இருந்தது.அதுவும் பல தலைமுறைகளின் கதைகளை தன்னுள்ளே வைத்திருந்தது.புளியோடு அண்டியதாய் ஒரு பெரிய மண்புட்டி சிறிய குன்றுத்தொடர்கள்போல. மலைவாழ் குடிகள் போல காலங்காலமாய் அதில் பலர் வாழ்ந்தார்கள் தலைமுறை தலைமுறையாய்.அதில் எங்களுக்கென்று நண்பர்களாக குழந்தைகளும் பிறந்திருந்தார்கள்.இன்று அந்த மண்புட்டியின் மைந்தர்கள் பள்ளி அதிபர்கள் வரை உயர்ந்த இடங்களில் இருக்கிறார்கள்.புளியமரமும் ஐந்தடிவானும் இருந்துபேசினால் இவர்களை பெருமையோடு பேசிக்கொள்ளும்.
குளத்தின் அணைக்கட்டு வழியே பள்ளிக்குப்போகும் அனுபவமும் எனக்குக்கிடைத்தது.குளத்துக்குள் பட்டமரங்கள் அதில் சிறகுலர்த்தும் நீர்க்காகங்கள்.அல்லியும் தாமரைகளும் பூத்துக்குலுங்கும் ஒவ்வொரு காலையும்.துருசுகள் வழியே நீர் சின்ன வாய்க்கால்களுக்கு பாயும் சத்தங்கள்.நீச்சலடிப்பவர்கள்.கரையில் இருந்து தூண்டில் போடுகின்றவர்கள்.தாமரை இலை பிடுங்குகின்றவர்கள்.தூரத்தில் தெரியும் முதலைகள்.ஓரத்தில் இருக்கும் சம்புகள்.காணாங்கோழிகள்.இந்த அழகை தினமும் நடந்து கடக்கும் ஒரு வாழ்க்கை பள்ளி முதற்காலங்களில் எனக்கு கிடைத்தது.அப்போது தொடங்கி இப்போதுவரை ஒரு நப்பாசை இருந்து கொண்டேயிருக்கிறது.தாமரை குளத்தருகே ஒரு சிறுகுடில்.அதில் நான் அந்த குளத்தின் குளிர்ந்த காற்று.இப்படி ஓர் பயணத்தை அன்றாடம் வரமாய்ப்பெற்ற ஒருவனுக்குள் ஒரு கவிஞன் பிறக்கவில்லை என்றால் அபத்தம்தான்.
இவையெல்லாம் கடந்த குளத்தடிப்பள்ளியில் நுழைந்த முதல் நாட்களில் எனது கிராமத்தை கடந்து ஒரு பட்டணத்து குண்டுப்பையன் என்னோடு நட்பாகினான்.நானும் அவனோடு நட்பாகினேன்.அவன்தான் முதலிலே நான் சொன்ன அந்த குணேந்திரராஜன்.கெட்டிக்காரன்.ஏ வகுப்பில் நாங்கள் இருந்தோம்.அவன் படிப்பில் முதல்மாணவன்.என் மீது அவனுக்கு பிரியம் இருந்தது.அதனால் அவன் என்னை பரவிப்பாஞ்சானின் வெண்புளுதி வீதிகளில் கைகோர்த்து பட்டணத்தில் இருந்த தன் வீட்டுக்கு அழைத்துச்சென்றான்.அது நீல வர்ணம் தடவிய மாடிவீடு.கிளிநொச்சியில் இன்று பலமாடிகள்.எண்பதில் கிளிநொச்சியில் இருந்த ஒன்றிரண்டு மாடிகளில் குணேந்திரனின் வீடும் ஒன்று.சிறுவயதில் தந்தையை இழந்த குணேந்திரனுக்கும் அவனுடைய தங்கைக்கும் தாயே எல்லாமும்.நான் போனபிறகு அதிகம் தாயாரின் மடியில் இருந்து சாப்பிட்டது நான்தான் அதிகம்.ஏழை பணக்காரர் ஏற்றழ்தாழ்வற்ற ஒரு மனத்தை அங்கே கண்டேன்.இன்றைக்கு குணேந்திரனை பற்றி இதிலே எழுதுவதற்கு அந்த வீட்டின் அன்பும் பண்புமே காரணம்.குளத்தடிப்பள்ளி இப்படி பல அன்புக்கடல்களையும் அறிமுகம் செய்தது.அதில் குணேந்திரன் தொடக்கம்.
குளத்தடிப்பள்ளியில் தொடங்கிய அந்த முதல்நாளின் இனிமைகளை ஐந்து வருடங்களில் போர்க்காலங்கள் பறித்தது.86ல் போராளிகளுக்கும் குளத்தடிப்பள்ளிக்கு அருகில் இருந்து படைமுகாமுக்கும் மோதல்.மலைவேம்பின் சாலை இவ்வாறு இப்போது கொரானாக் காலத்தை போலவே வெறிச்சோடியது.நண்பர்கள் நாங்களும் அச்சிறிய வயதிலும் திக்கொன்றாய் ஆனோம்.பிறகு சில வருடங்கள் நான் பிறந்த நிலமான நெல்லியடி கரவெட்டியில் மாணிக்கவாசகரில் படித்தேன்.மீண்டும் கிளிநொச்சிக்கு திரும்பியபோது இன்றைக்கு கிளிநொச்சி மத்திய கல்லூரியாகி தேசிய பாடசாலையாகியிருக்கிற கிளிநொச்சி மத்திய மகா வித்தியாலயத்தில் சேர்ந்தேன்.பிறகு குளத்தடிப்பாடசாலை நண்பர்களோடு எதிர்எதிர் அணியில் நின்று துடுப்பாட்டம் முத்தமிழ் விளையாட்டுக்களில் மோதவேண்டியிருந்தது.அப்போதெல்லாம் குளத்தடிப்பள்ளிதானடா என் அத்திபாரம் என்று புன்கையோடு சொன்னேன்.அவர்களும் மகிழ்ந்தார்கள்.
எண்பதில் முதல்நாள் பள்ளிக்குப்போனபோது நான் கண்ட முதல் அதிபர் ஏ.கே.இராஜேந்திரம்.நீண்ட மூக்கு.கண்டிப்பானவர்.வெள்ளை ஜிப்பா அணிவார்.ஒரு போர் வேளையில் அவரும் சிக்குண்டு அன்று மறைந்தார்.ஒவ்வொரு பாதங்களுக்கும் பயணங்கள் உண்டு.சாலைகளில் மலர்களும் முட்களும் உண்டு.

No comments:
Post a Comment