Wednesday, April 15, 2020

முட்டாத விளையாட்டு-பொன்.காந்தன்,


ஊரடங்கு சட்டம்
உள்ளுக்குள் இருந்து
உளையுது காலென்று
மெள்ள எழும்பி
மேல சூரியன் தாழ
சள்ளை விழாமலிருக்க
சட்டிபானைப் பந்தல் தொட்டு
சரிந்த தென்னம்பிள்ளை வரை
அன்ன நடையொன்று
அங்கங்க கிடக்கும் பிஞ்சை
ஆய்ஞ்சு வாய்க்குள் போட்டு
கண்ணை
தென்னை பக்கம் திருப்பி
தேங்காய் முத்தினதை தேடி
தின்ன தேன்போல
நல்ல சுளை என்றொரு
நாதாரி தந்த பிலாவில்
இன்றுவரையொரு
பூ பிஞ்சில்லையென்று
பிதற்றி புலம்பியப்பால்
கட்டையினமென்ற விளாட்டை
கயிலாச நாதராய்
சுத்தி வந்தொருக்கால்
ஆத்திரத்தை விழுங்கிமென்று
சீக்கிரம் பூக்குமென
சாத்திரமும் சொல்லி தேற்றி
கொட்டையில் முளைத்த
கொடித்தோடையிலேனும்
விற்றமின் சிக்கேதும்
வீங்கிக்கிடக்கோவென பாத்து
பட்டை கழரும் வேம்பில்
பறந்து வந்து காக்கா
சொப்பிங் பையை வைத்து
குத்தி இழுத்து கிழிக்க
அக்கம் பக்க வளவில்
அடுத்ததொன்று காகா
அப்பிடியே விட்டுவிட்டு
அதுவும் பறந்து போக
எப்படி கொரொனா வருமென்று
இடிவிழுந்திருக்கும் நேரம்
சொப்பிங் பையாலும் இன்று
சூழ்ந்திடுமோ
வினையென்றெண்ணி
எட்டி தடியால் தட்டி
எடடி நெருப்பையென்று
குப்பையோடு போட்டு
கொழுத்தியபின் தான் ஏதோ
கொஞ்சமோர் மனதிலின்பம்
எத்தினை மணித்தியாலம்தான்
நவக்கிரகம் போலக் குந்தி
நாலைஞ்சு சணல்கள் மாத்தி
கத்திக் குழறுகின்ற
கண்டறாவி தொடர்பார்க்க
மொத்தமும் வீட்டில் நிற்கும் வேளை
முனகும் சத்தத்தோடு
முதலிரவுப் பாட்டும் வேற
பகலில் ஒரு சணலில்
படுக்கை அறை லீலை
சேலை நீக்கும் பாடம்
சிலபர்சில் இல்லையென்று
சொல்லவும் முடியவில்லை
கண்ணை அயர்வதுபோல்
நடிப்பும்
கண்டும் காணாதவோர் இருப்பும்
பாழாய்ப்போன கொரானா
வேறு ஏதும் வியாதியென்றால்
வெளிக்கிட்டும்
ஓடலாம் தெருவால்
ஆனால்
ஆளையாள் பாத்துக் கொண்டு
அடக்கிக்கொண்டிருவென்று
வேலிக்கு வெளியிலின்று
வில்லங்கம் வைரஸ் வடிவில்
காலியாய் கிடக்கு முற்றம்
ஜாலியாய் சேர்ந்து ஒருக்கால்
கிட்டிப் புள்ளு அடிக்கலாமே
வாறியே கணேசு என்று
வாயிலொரு வார்த்தை வந்து
ஓடிப்போய் புள்ளை தூக்க
ஒட்டிக்கொண்டு கொரோனா வந்தால்
கூடியே கோடு கீறி
கிளித்தட்டு விளையாடலாம்தான்
எட்டி கிளி அடிக்கும்போது
பட்டுவிடும் கையிலிருந்து
பாழாய்ப்போன கொரோனா வந்தால்
முற்றத்தை விட்டுவிட்டு
கட்டை காய் அடுக்கி வைத்து
செஸ் கரத்தில் இறங்குவோமா
தொட்டுத்தானே சுண்டவேண்டும்
கெட்டகாலம் அதிலும் வரும்
எல்லாத்திலும் சந்தேகம்
இப்போதைக்கு வீட்டுக்குள்ளும்
முட்டாத விளையாட்டொன்றை
முக்கியமாய் காண வேண்டும்.

No comments:

Post a Comment

பிரசாதமே!!

  கொடிய போர் கண்ட நகரம் போலில்லை காலிழந்தவனுக்கு கால் முளைக்கும் உணர்ச்சியை கண்ணிழந்தவனுக்கு ஒளியூறும்  மனத்தை உண்டாக்கவில்லை யாரேனும் பறக்க...