Thursday, August 22, 2019

காவியுடுக்கிறது நாவற்குழி தாயை விற்கிறது தமிழ்த் தேசியம்-பொன்.காந்தன்


பனைகளிடையே இருந்த பரவசரம் ஒன்று பறிபோகிறது
சரித்திர நிலம் சங்கிலியன் இராச்சிய வாசலில்
தரித்திரம் ஒன்று பற்றிக்கொள்கிறது
காவியுடுக்கிறது நாவற்குழி
கவிஞனின் கண்கள் கலங்குகின்றது
கண்ணுக்கு முன்னே தன்சல் உண்டு
தாயை விற்கிறது தமிழ்த்தேசிய மூதேவிகள்
அத்திபாரமிட்டு கட்டியெழுப்பி சம்புத்தி சுமண திறப்பென்று
அழைப்பிதழ் அடிக்கும்வரை
எட்டி உதைக்காத இழிகுலமாயிற்று தமிழர் நிலம்
கட்டிக்காத்து நாவற்குழிக்காக
எத்தனை மறவர்களின் இரத்தம் சிந்தின
பொன்னம்மான் கேடில்ஸ்கள் கொத்தாய் வீழ்ந்த புனிதர்கள் கதையை
அடிமனதில் தாங்கும் ஆன்ம நிலமல்லவா நாவற்குழி
ஆயிரம் விகாரைகள் அமைக்கும் பட்ஜட்டுக்கு
கை உயர்த்திவிட்டு வரும்
சூடு சுரணையற்றவரோடு வாழ்கிறது நல்லூர் இராசதானி
சந்திரசிறீ கூட்டி வந்து குந்தவைத்தான் சிங்களவர்களை
சஜித் காணி உறுதி குடுத்து கட்டி எழும்பி
தமிழர் பூர்வீகத்தை கபளீகரம் செய்து நிற்கிறது ஒரு விகாரை
சட்டதிட்டங்களுடன் கட்டப்பட்டதாம்
அக்கம் பக்கத் தமிழ்த் தேசியம்
அத்தனை ஓட்டைகளையும் பொத்திக்கொண்டிருக்கின்றது
முப்பது வருட புரட்சியை எந்தச்சட்டத்தை வைத்து
எழுச்சியாய் நடத்தினான் பிரபாகரன்
சிட்டுக்குருவிக்கேதடா சிறீலங்கா யாப்பு
உரிமையை விட்டுக்கொடுக்காதவனுக்கு சட்டங்கள்
சட்டையில் படும் புளுதியை தட்டுவதுபோன்றது
ஆரியகுளப் புத்தர் போதாதா
உல்லாசப்பயணியாய் வரும் தென்னிலங்கைக்காரன்
ஒண்டுக்கு இருக்கும் இடத்திலும்
ஒரு புத்தர் சிலையை வைக்க நினைக்கிறான்
கண்டி இராச்சியத்தின் கிளையாய் மாறுகிறது வடக்கு
கண்ணுச்சாமியிடமிருந்து பறித்தனர் கண்டியை
இன்று
சிங்களப்பேரினவாதிகளுக்கு முண்டு குடுக்கும்
பச்சோந்திகளால் பறிபோகிறது நாவற்குழி
இன்று நாவற்குழி இனி அடுத்து வட்டுக்கோட்டை
தொடர்ந்து கோப்பாய் உடுப்பிட்டி
இப்படியே நல்லிணக்கப்புத்தர்கள் முளைப்பர்
நாம் பேரினவாதம் தோற்று விடாமல் பார்க்கும்
அடிவருடலை அழகாய் செய்திருப்போம்
உதட்டு வருத்தத்தில்
அடிக்கடி போராட்டம் வெடிக்குமென புலம்பும்
தமிழ்த்தேசிய தரகரிடம்
அந்த தேதி இடத்தை கேட்டு சொல்லுங்கள்
அந்தப் பேரதிசயத்தை பார்க்க ஆசையாய் இருக்கிறது
நல்லூரடிச் செல்லப்பா செப்பியது போல
எல்லாம் எப்பவோ முடிந்த காரியம்
இனி என்ன நாவற்குழியில் இருந்து
பிரீத்தின் ஒலி கைதடி அரியாலை என்று காற்றிலேறிவரும்
வேறென்ன தமிழரால் இனி செய்யமுடியும்
எத்தனை கட்டை என்று பார்த்து
சுருதி பிடித்து நாமும் பாடக்கற்றுக்கொள்வோம்
அதுவும் ஒரு நல்லிணக்கப் பாடலாய் ஆகி
எங்கள் நாட்டுக்கூத்துக்களும் செத்து
செம்மணியில் எரியும் போது சம்புத்த சுமண விகாராதிபதியை
வெள்ளை விரித்து இருத்தி
நல்லபடியாய் மேலோகம் போக பிரார்த்திக்க கேட்போம்
இப்போதுதான் ஆயிரம் விகாரையில் ஐந்தாறு கட்டப்பட்டுள்ளது
இன்னும் தொள்ளாயிரத்துக்கு இடமுண்டு வடக்கிலும் கிழக்கிலும்!!

No comments:

Post a Comment

பிரசாதமே!!

  கொடிய போர் கண்ட நகரம் போலில்லை காலிழந்தவனுக்கு கால் முளைக்கும் உணர்ச்சியை கண்ணிழந்தவனுக்கு ஒளியூறும்  மனத்தை உண்டாக்கவில்லை யாரேனும் பறக்க...