Monday, June 24, 2019

தனிநிலம்- பொன்.காந்தன்




இதை எழுதுதற்கு முதல் கெட் போனுக்கு தமிழை கூகுளில் தேடிக்கொண்டிருக்கின்றேன்.நானே அதற்கு ஒரு பெயரை வைத்துவிடலாமா எனத் தோன்றினாலும் கடைசியில் தலையணி என்று ஒரு அகராதியும் தலையணி ஒலிவாங்கி என்று இன்னொன்றும் அர்த்தம் சொல்கின்றது.பேருந்துப்பயணங்களில் போது இப்போது லக்ஸ்பிறே பெட்டிக்குள் வரும் மின்னிமின்னி பையை மாமுடிந்தவுடன் வெத்திலை சரையாகவும் காசுப்பையாகவும் கொண்டு திரியும் கிழவிகளை காண்பது அரிது.பனையோலை கைப்பைகளோடு ஏறும் கிழவர்களும் குறைவுதான்.ஆழியவளையில் இருந்து குறுக்கு கட்டும் வெற்றிலை குதப்பிய வாய்களும் மார்புக்கச்சைக்குள் பணத்தை செருகி வைக்கும் மீன் வியாபாரத்துக்காக நகரத்துக்கும் கடலுக்குமாய் பயணிக்கும் வாளிப்பான வாயை திறந்து பேரூந்து முழுக்கக் கேட்கும் பேசும் துணிச்சலான பெண்டுகளை கண்டு நீண்ட காலமாகிவிட்டது.அல்லது ஆழியவளை பேரூந்துகளை கொடிகாமம் தட்டி வான்களையும் தவறவிட்டுவிட்டு குளிரூட்டப்பட்ட பேரூந்தில் சாளரங்கள் இறுக மூடி தொலைபேசியும் அதிலிருந்து கூந்தலில் கலந்து காதினில் நுழையும் தலையணிகளோடு குத்துப்பாட்டு கேட்டபடி பயணிக்கும் பயணங்களின் நாகரிகம்தான் பல சுவாரஸ்யங்களை தொலைத்துவிட்டதா!
அநேகமான இளசுகள் பயணங்களை தொலைபேசியும் கையும் காதினில் நுழையும் தலையணிகளோடும் அனுபவிக்கின்றார்கள்.நீண்ட தூரப்பயணங்களில் சாளரங்கள் வழியே கிடைக்கும் நிலங்களின் மனிதர்களின் அழகை வாழ்க்கையை ரசிப்பதை தவறவிட்டு விடுகின்றார்கள்.விடியவிடிய தொடு திரைகளில் விரல்கள் நடனமாடுகின்றன.கண்கள் களைத்துவிடுகின்றது.இமைகள் சோர்;ந்துவிடுகின்றன.இதயம் சூடேறி ஆசுவாசமின்றி தவிக்கின்றது.ஒரு பத்துவருடங்களின் முன் நான் ஒரு தனி நிலத்தின் பயணியாகவிருந்தேன்.இன்றைக்கு இருக்கும் காட்சிகள் வார்த்தைகளில் இருந்து அது வேறாக இருந்தது.தனி நிலத்துக்காக போராடும் நாட்களில் கண்டவை அனுபவித்தவை ரசித்தவை எதிர்பார்த்தவை எனது ஆழ்மன நதிக்கரைகளில் உலாவிக்கொண்டிருக்கின்றன.எனது ஆழ் மனவானில் நிலவில் இருந்து நீண்ட நேரம் பேசிக்கொண்டிருக்கின்றன.
போர்முடிந்து தனிநிலத்துக்கான போராட்டம் வெல்லப்படாமல் மீண்டும் ஆக்கிரமிப்பாளர்களின் பிடியில் வீழ்ந்தபின் என்னை அந்த தனிநில வாழ்கையில் இருந்து கிள்ளி எடுத்து இந்த காலத்தில் ஒட்டமுடியாதபடியே வாழ்வின் பயணம் செல்கின்றது.தனிநிலம் என்பது எனக்குத் தேவையான ஒன்று என்பதை உணர்வதில் இருந்து நான் இன்று சந்திப்பவையோ எனக்கு திணிக்கப்படுகின்றவையோ பரிசளிக்கப்படுகின்றவையோ என்னை அன்னியப்படுத்த முடியவில்லை.எனது மடியில் ஒரு நொடியில் இந்த பூமியை தரிசிக்கும் வரமாய் ஒரு அதிநவீன கைத்தொலைபேசி உறங்கிக்கொண்டிருக்கின்றது பேரூந்துப்பயணத்தின்போது சிறுவயதில் வாந்தி எடுத்துவிட்டு அப்பாவின் மடியில் உறங்கிய என்னைப்போலவே.பேரூந்துச் சாளரத்தின் வழியே கடக்கும் தனி நிலத்தின் இயற்கை காற்று அக்காற்றில் பறக்கும் முன் இருக்கையில் இருக்கும் குமரியின் நீண்ட கூந்தல் வானம் பறவைகள் கடல் அலைகள் எல்லாமே தனி நிலத்தின் எழுதப்படாத பாடப்படாத தேசியகீதத்தை சுமந்து நிற்கின்றன.
உலகில் தனி நிலத்துக்கான விடுதலைப்போராட்டங்கள் தோற்கடிக்கப்பட்ட பின் மீண்டும் ஆக்கிரமிப்பாளர்களிடம் சிக்கி அல்லது அகப்பட்டு வாழ நிர்ப்பந்திக்கப்படுகின்றபோது.தனி நிலத்தின் கதையை தனி நிலத்தில் வாழ்ந்த ஒவ்வொருவரும் ஒவ்வொரு மாதிரியாய் எழுதுகின்றார்கள்.பலர் எது தனிநிலம் என்று தடுமாறுகின்றார்கள்.சிலர் ஆக்கிரமிப்பாளரிடம் ஆபத்பாந்தவர்களை தேடுகின்றார்கள்.சிலர் ஆக்கிரமிப்பாளர்களின் பாடல்களை தனி நிலத்தின் பாடல்களாக பாடுகின்றார்கள்.நான் இங்கே தனி நிலம் பற்றி ஆழமான தத்துவசாரத்துள் நான் செல்ல விரும்பவில்லை.தனி நிலத்துக்காக போராடி பின் ஆக்கிரமிப்பாளர்களால் சிறைப்பிடிக்கபட்டு புனர்வாழ்வு அளிக்கபட்ட காலத்தில் வாழ்ந்த தனி நிலத்துக்காக வீழ்ந்த சக தோழர்களின் நினைவுகளில் இருந்தும் அவர்கள் வீழ்ந்தமைக்கான மனச்சாட்சியில் இருந்தும் விடுபடமுடியாத போராளியின் அனுபவத்தையும் இணைத்துக்கொள்கின்றேன்.
தனிநிலத்துக்காக போராடிய ஆக்கிரமிப்பாளர்களால் சிறைப்பிடிக்கப்பட்ட போராளிகள் தனிநிலத்துக்கான எண்ணங்களில் விடுபட்டு ஆக்கிரமிப்பாளர்களும் தனிநிலத்துக்கான வேட்கையாளர்களும் கலந்து வாழும் ஒரு நாடு ஒரே குரல் கோட்பாட்டுக்குள் வாழ்வதற்கும் இயைபதற்குமாக அளிக்கப்படுகின்ற அனைத்திலும் முக்கியமானது தேசிய கீதம்.தனி நிலத்துக்கான ஒரு போராளி தன் வாழ்நாளில் பாடியிராத உச்சரித்திராத ஒரு பாடலை பாட அணிவகுத்து நிற்க வைக்கப்படுகின்றான்.தனது தாய் மொழியில் அல்லாத தனது இதயத்தை சொல்லாத ஒரு பாடலை வாயசைத்து பாடும்படியும் ஆக்கிரமிப்பாளர்களால் கேட்கப்படுகின்றான்.ஒரு கடதாசியில் அந்த தேசிய கீதத்தை எழுதி பார்த்து பாடும் படியும் அறிவுறுத்தப்படுகிறான்.என்ன செய்வான் ஆக்கிரமிப்பாளர்களின் சிறையில் தனி நிலத்துக்காக போராடிய போராளி.சொன்னதன்படியே எழுதப்பட்ட கடதாசியுடன் மறுநாட்களில் அணிவகுத்து நிற்கிறான் தனி நிலப்போராளி. தேசிய கீதம் இசைக்கப்படுகின்றது.இவனும் வாயசைக்கின்றான்.தனது தாயார் தனக்கு எழுதிய கடித்தை பார்த்தபடியே.ஆக்கிரமிப்பாளன் நினைக்கிறான் தேசிய கீதத்தை தனிநிலப்போராளிகள் பாடுகின்றார்கள்.இவர்கள் தனி நிலத்தை மறக்க ஆரம்பித்து விட்டார்கள் என்று.மறக்க நினைத்தாலும் சாளரங்களும் காட்சிகளும் இயற்கையும் மறக்கவிடுவதில்லை.
இப்போது மாலை நேரங்களில் வெதுப்பகங்களின் பாண்களை சுமந்து வரும் சிற்றூர்திகள் எழுப்புகின்ற ஒலிகள் தனி நில போராட்டம் தோற்றதன் பின்னர் இசைபாகிவிட்டது.என் வீட்டு நாய்களுக்கு கூட பாண்பெட்டிகளை சுமந்துவரும் சிற்றூர்திகள் எழுப்பும் இசை பரீட்சயமாவிட்டது.மாலை வேளையில் தூரத்தில் இருந்து காற்றில் மிதந்து நெருங்கும் பாண் காவும் சிற்றூர்திகள் இசைக்கும் ஓசை தரும் உணர்ச்சிகளை விட எனது தனி நிலத்தில் இன்னொருவனால் இசைக்கப்படும் தேசிய கீதம் எதையும் எனக்கு தருவதில்லை.

No comments:

Post a Comment

பிரசாதமே!!

  கொடிய போர் கண்ட நகரம் போலில்லை காலிழந்தவனுக்கு கால் முளைக்கும் உணர்ச்சியை கண்ணிழந்தவனுக்கு ஒளியூறும்  மனத்தை உண்டாக்கவில்லை யாரேனும் பறக்க...