Friday, April 5, 2019

மின்வெட்டு இரவின் தேன்கிண்ணம்!-பொன்.காந்தன்

அப்பாவின் ஐந்து பற்றி டோச்சை நினைத்துப் பார்த்தேன்

மின்வெட்டு இரவில்
மெழுகு திரியின் ஒளியில்
அந்த டோச்சின் ஆவி உலவுவது போல பிரமை
மின்கம்பங்கள் இல்லாத எங்கள் தெருவில்
மின் மினிகள் மட்டுமே ஒளியாயிருந்த
அந்த நாட்களில்
அந்த டோச் பெருமையும் கூட
காடுவெட்டி குடியேறிய
அடிக்கட்டைகள் உக்காத காணியில்
மூன்று ஏக்கரின்
பின் வேலி முதிரை மரத்தில்
ஐந்து பற்றி டோச்சின் ஸ்பொட்படும்போது
அப்பாவின் முகத்தில்
ஒருபெருமிதத்தை பார்த்திருக்கிறேன்
ஒரு கிராமத்து வாசியின்
அதியுச்ச பெருமிதங்களில் அதுவும் ஒன்று
அந்த டோச்சின் சக்தி இழந்த பற்றரிகள்
எங்கள் வீட்டின்
பெரிய பனசொனிக் வானொலிப்பெட்டிக்கு போடப்படும்
அடுத்துவரும் இரவுகளில்
இரவின் நிசப்தத்தில் கலந்து
அடுத்த இரண்டு அயல்களுக்குமாக
அம்மாவின் விருப்பத்துக்குரிய தேன் கிண்ணம்
சற்று உரக்க ஒலிக்க ஆரம்பிக்கும்
மழைக்கு முன்பாக
முற்றத்தில் தென்னையில் வந்து குந்தி
அர்த்த சாமத்தில்
அமானுஷ்ய நினைவுகளை கொண்டுவரும்
ஊமத்தம் கூவையின் கண்கள்
டோச்சின் ஒளியில் பளபளக்கும்
பின் பறந்துபோய் விடும்
அடுத்து பொழியும் மழை இரவுகளில்
தாழ்வாரத் தூவானங்கள்
அப்பாவின் டோச்சில் மின்னும்
புது எவரெடி பற்றரி வாங்கும் நாட்களில்
சிவப்பான பற்றரியில் இருக்கும்
அந்த கறுத்த பூனைகளை கண்டு
இப்போது எவ்வளவு காலமாயிற்று
சோடி பற்றரிகளின் பொலித்தீன்களை
நகங்களால் கீறி உடைக்கும்போது
எழும் ஒலி
இன்றைய நாளில் நினைத்தால்
அது ஒரு சங்கீதம்
இப்போது எங்கேனும்
மூன்று நான்கு ஏக்கர் காணி முழுக்க
மிளகாய் வாழை கத்தரி மரவள்ளியென
வளவு முழுக்க வைத்துவிட்டு
நடுவில்
ஒரு ஓலையால் வேய்ந்த வீட்டில்
மார்பின் உரோமங்களில் காற்றுவருட
போர்வையின்றி
ஐந்து பற்றி டோச் தலைமாட்டில் வைத்து
தூங்கும் அப்பாவை கண்டால்
டோச்சின் ஆவியால் ஆட்கொள்ளப்பட்டவன்
கேட்டதாய் சொல்லிவிடுங்கள்!

No comments:

Post a Comment

பிரசாதமே!!

  கொடிய போர் கண்ட நகரம் போலில்லை காலிழந்தவனுக்கு கால் முளைக்கும் உணர்ச்சியை கண்ணிழந்தவனுக்கு ஒளியூறும்  மனத்தை உண்டாக்கவில்லை யாரேனும் பறக்க...