Friday, November 9, 2018

கந்தர்வ மேனி படர்வேன் கதவு திறக்கப்பாயும் கலவிச்சிணுங்கல்!- -பொன் காந்தன்



நிலமும் வானும் கொண்ட நீண்ட காதலினால்
இம்முறையும் உண்டாகி
நிறைமாதக்காரியாய் நிற்கிறாள் இரணைமடு
அவள் மசக்கையில்
சுத்துபட்டியும் எட்டிப்பார்த்து மகிழும்
அவளை ஈழ நிலத்துக்கு கட்டிவைத்த
கலியாணத்தரகனை கண்ணிலொற்றத்தான் வேண்டும்
பத்தரைமாத்தென்று அவனுரைக்கும்
பலநூறு பொய்கள் எதுவும்
இரணைமடுவின் சம்மந்தத்தில் இல்லை
அவளின் குளிர்மடி தந்துவிடும் குதூகலத்தில்
கட்டுக்கரையும் கல்மடுவும் முத்தையன்கட்டும்
புதுமுறிப்பும் அக்கராயனும்
சித்தப்பன் மாமன் மச்சினி குஞ்சியப்பு
கொள்ளுப்பாட்டன் வழி சொந்தமாகிவிடும்
பச்சையுடுக்க வைக்கும் அவள் பார்வையில்
மருதகர் மரங்கள் மஞ்சள் அரைத்துப்பூசும்
முரசுமோட்டை சாமத்தியப்பட்டு
திருநிறை செல்வியாகிவிடும்
வட்டக்கச்சி வளைகாப்பு நடத்தும்
கண்டாவளை சேலைதலைப்பிழுத்து
மூலைகூடத்தெரியாமல் மூடி
செழித்துக்கிடக்க சிலுமிசங்கள் செய்திருக்கும்
ஊரியான் கொம்படிவரை இரணைமடுவாளின்
கொலுச்சுச் சத்தம் பரவிக்கிடக்கும்
கூழாவடிவரை கூந்தல் விரிந்துகிடக்கும்
கோவிந்தன் கடைச்சந்தியில்
குத்திக்கரணம் அடிக்கும் சிறுவர்களை
பத்திரமாய் ஏந்தி ஏந்தி
தத்தெடுத்து குளிப்பாட்டி தருவாள்
எங்கள் குளிர்விச்சி இரணைமடு
அவள் முலைகளை கடைக்கண்ணால் ரசிக்கும்
காவாலிக்கவிஞன் நான்
ஆயிரம் குழந்தைகளை அணைத்து
பாலூட்டும் பரமனின் வரமிவள்
எம்மாம் பெரிது
அவள் கச்சை அவிழ்த்தாலே
கண்கொள்ளாக்காட்சிதான்
அம்மாளாச்சியின் அடியினில்
நித்தியமும் அபிசேகம் செய்யும்
சத்தியவிரதையாம் இவளை
எவரும் எச்சில் படுத்த எம் மனம் ஒப்புவதில்லை
கனகராயனின் கனவுக் கன்னியிவள்
பாலைகளின் இலைகளிலும் முதிரைகளின் மேனியிலும்
அம்பகாம புல்வெளிகளிலும்
அந்தக் காதலின் தீரா மயக்கம்
மான்கூட்டங்களும் மயில்தோகையும்
ஆனைகளின் தந்தங்களும்
இரணைமடுவாளின் இதயவேட்கைளை நன்கறியும்
ஐந்தடிவானில் அடியடியாய்  தூண்டிலிடும்
மீன்கொத்திகளுக்கு நீர்ப்பாசையின்
நெளிவுசுளிவுகள் தெரியும்
பாலத்திற்குப்பிறகு பாறிவிழுந்துவிட்ட
ஐந்தடிவான் பழம்புளிக்கு பரமரகசியங்கள் பலது தெரியும்
கிளிநொச்சி  குளக்கட்டில் குந்தியிருந்த கறுப்பையா
இரணைமடுவாளின் முகக்குறிப்பை
அச்சொட்டாய் பொழிப்புரைக்கத்தெரிந்த ஒரு ஊர்குறிப்பு
இராமநாதபுரத்தில்
ஓலை ஊறப்போட்டுக்காத்திருக்கும் கனகவல்லி
இரணைமடுவாளின் பசிய நினைவை
பின்னியபடியே பெருங்கதையாக்கிவிடுவாள்
நான் வாண்டாய் இருந்தபோது
எங்கள் கூட்டோடு இப்படி ஓர் மாரியில் எடுபட்டுபோய்
இளங்கோவின் வன் ரென் கமராவில்
வகைவகையாய் இந்தக்குமரியோடு பிடித்தபடங்கள்தான்
இப்போதும் இதய இனிப்புக்களில் ஒன்று
யோகர்சுவாமிக்கு  பிடித்த ஞானபீடமாயும்
வெள்ளையரையும் கவர்ந்த
இடையும் நடையும் கொண்ட இன்பவல்லியாயும்
எப்பக்கத்திலும் கத்தைகத்தையாய்
உலாக்கதை சொல்ல உவந்தவளாயும்
தன்னைவைத்திருக்கும் தாளாத தவச்செல்வி இவள்
ஒருவேளை காரைக்கால் அம்மையாராய்
தங்கம்மா அப்பாக்குட்டியாய்
தண்மை வழமையாய் வந்தவரை வருடும் இவள்
மங்கம்மா சபதமாயும்
பாஞ்சாலியின் கோபமாயும்
அங்கம் மாறுபட இழுத்துப்பலியெடுப்பதும் உண்டு
ஆண்டுக்கொருமுறை ஒருவரை அழைத்து
அவர் ஆன்மாவை தன்னில் கரைப்பதும்
அடியடியாய் நிகழ்வதாய் ஒரு ஐதீகம்
யானும் ஓரிருமுறை மாண்டுபோனவர்களை
இவள் மடியில் கண்டிருக்கின்றேன்
என்னதான் இருந்தாலும்
இவள் மீது இனம்புரியாத பிரியம் எல்லோருக்கும்
இரணைமடு இல்லையென்றால்
நாளை நம்மூரும் சகாராதான்
நம்மூர் சிறுவர்களுக்கு
இவளின் அணைகள்தான் அதியுயர் மலைகள்
பசியமேனியிருந்த பாயும் பன்னீர்தான்
எங்கள் ஊரின் குற்றாலம்
காதலர்களின் கையருகில் இருக்கும்
அழகிய ஆக்ராவும் இரணைமடுதான்
கனிமூன் சோடிகள் பல கால் நனைத்துப்போகும்
இனிய தேவதையும் இவள்தாள்
சாந்தபுரத்தாருக்கு சாப்பாடுபோட்டு
காப்பாற்றும் அட்சயபாத்திரம்
எப்போதும் பறவைகளுக்கும் மனிதர்களுக்கும்
விலங்குகளுக்கும் கொடுத்துக்கொண்டிருக்கும்
வாழ்விப்பவள் வளமகள்
இவள் வறட்சி வானிலில்லை
தன்னை சூழ உள்ளோரில் உள்ளது
ஒரு முறை ஆனையிறவில் இருந்து
சத்ஜய வந்தபோது விக்கித்துப்போனாள்
வேதனையுற்று வறண்டிருந்தாள்
தானை ஓயாத அலைகளில்
ஊரை உய்வித்தபோது பூரித்துப்போனாள்
ஏதாவது பெரிதாய் பிரதியுபகாரம் செய்ய
பெரிய மனதுடையாள் நினைத்தாள்
தமிழ் தந்திரி அன்ரன் பாலசிங்கம்
பறந்துவந்திறங்க பாய்விரித்தாள்
கரையில்
பிரபாகரன் எனும் பெருவீரன் காத்திருந்து கைகுலுக்க
ஏவலாளாய் மாறி பணிவிடை செய்தாள்
பண்டாரவன்னியன் காலத்துக்குப்பிறகு
ஒரு காவிய மகிழ்ச்சி இரணைமடுவாளுக்கு
எப்போதும் அது நிலைத்திருக்கவேண்டுமென
நித்தியமும் கனவும் கண்டாள்
அவள் நீள் விழியில் மீண்டும் கண்ணீர்
தண்ணீரின் தேவதையாய் தளதளத்திருக்கும்
அவன் அடிமனதில் ஏக்கம் தீரும்போது
பன்னீரை நிரப்பும் ஒரு மாரி
அவள் கந்தர்வ மேனியில் நானும் படர்வேன்
கலவிச்சிணுங்கலாய்
கதவுதிறக்கப்பாயும் இரணைமடுவாளின் இதயவெள்ளம்


No comments:

Post a Comment

பிரசாதமே!!

  கொடிய போர் கண்ட நகரம் போலில்லை காலிழந்தவனுக்கு கால் முளைக்கும் உணர்ச்சியை கண்ணிழந்தவனுக்கு ஒளியூறும்  மனத்தை உண்டாக்கவில்லை யாரேனும் பறக்க...