Tuesday, November 6, 2018

2018 நவம்பர் 05 அநாரிக தர்மபாலவை கண்டேன்!-பொன்.காந்தன்



நேற்றும் அநாகரிக தர்மபாலவைக் கண்டேன்
இன்றும் அவர் அப்படியேதான் இருந்தார்
பௌத்தன் அல்லாதவன் எல்லாம்
செத்தே போகலாம் எனும் வெறித்தனம்
எச்சமாய் இன்னும் அப்படியே இருந்தது
இன்னமும்
சுபதேவியை சிங்கம் மணம் முடித்து
சிங்கபாகு சிங்கசீலி பிறந்து
அண்ணனும் தங்கையும் மணம் முடித்து
விஜயன் பிறந்த கதையை
நம்புகின்றீர்களா எனக்கேட்டேன்
உங்களுக்கு உள்ள கதையை
சரியாக ஒற்றுமையாக
சொல்லத்தெரியாத உங்களைப்போல் இருப்பதைவிட
இல்லாத ஒரு கதையையேனும்
ஒற்றுமையை நானும்
என் சுற்றமும் சொல்வதுமேல் என்றார்
என்னை பார்த்து அநாரிகதர்மபால

குவேனி செய்த தவறென
மனதுக்குள் குனிந்து கொண்டேன்
குவேனியில் தொடங்குகிறது எங்கள் ஏமாற்றம்
அவளை கொன்றால்
எல்லாம் முடிந்துவிடும் என்ற
இயக்கர்களின் முடிவின் மீதும்
எனக்கு அதிருப்தி
குவேனியின் ஏமாற்றத்தில் இருந்து
இயக்கர்கள் கட்டியெழுப்பாத
தமிழர் வன்மத்தை நினைத்தும் கவலைப்படுகின்றேன்
மகாநாமவின் திருத்தப்பட்ட பதிப்பை கொண்டுவர
அநாகரிக தர்மபால
ஒருபோதும் அனுமதிக்கப்போவதில்லை என்பதை
நேற்றைய அவரின் சந்திப்பு எனக்கு உணர்த்துகின்றது
ராணி அனுலவின் காதல் ரசத்தில் வீழ்ந்து
விசமுண்டு வீழ்ந்தவர்களை போல
நாமும் இன்று வீழ்ந்து கிடக்கிறோமா

சிங்கக்கொடி கூட எங்களதுதான்
தமிழர்களுடையது
இது இன்றைக்கு தமிழர்களுக்கு எதிரான
வன்மக்கொடியாயிற்று
கண்ணுச்சாமி எனும் ஸ்ரீ விக்கிரமராசசிங்கனின்
இராச்சியக்கொடி சிங்கம்
கண்ணுச்சாமி பண்டாரவன்னியரின் நண்பராயிற்றே
முல்லைத்தீவு கோட்டையை தகர்க்க
கண்ணுச்சாமியின் பீரங்கிகளை
பண்டாரவன்னியர் பயன்படுத்தினாராமே
அநாரிக தர்மபால அறியாத ஒன்றல்ல
எமது வரலாற்றையே எமக்கு எதிரிகள் ஆக்கிய
வன்மத்தில் இருந்து மீளவிரும்பவில்லையவர்
மகாநாம எனது மந்திரம்
எகலபொலவின் வஞ்சகம்தான் ராசதந்திரம்
தனது முதுசமென பயணிக்க இன்னுமவர் விரும்புகின்றார்

அநாரிக தர்மபாலவை நேற்றும் நான் கண்டேன்
இன்றைக்கும்
பொன் இராமநாதன் அருணாச்சலங்களை
தங்கள் தேவைக்காக அணைத்தெடுத்துவிட்டு
எட்டி உதைக்கவும் முடிகிறதை நினைத்து
மிக்க மகிழ்;ச்சியோடு தென்படுகின்றார்
வரலாற்று பக்கங்களை படபடவென்று
பதட்டத்துடன் புரட்டுகின்றேன்
துரோகத்தின் தருணத்தை உணர்ந்து
அருணாச்சலம் உருவாக்கிய தமிழர் அமைப்பு
அது கொண்டிருந்த தனி நாட்டுக்கோரிக்கை
ஒரு நூற்றாண்டு ஆகின்றது
இன்னும் இரண்டு ஆண்டுகள் கடந்தால்
தமிழர் தனித்து வாழ்வதே மேல் என்பதாய்
எடுத்துரைத்து ஒரு நூற்றாண்டு ஆகின்றது
எத்தனை நூற்றாண்டு பாடங்கள்
ஏன் நேற்று காலடியில் கடந்த பாடங்கள் இருந்தும்
அநாரிக தர்மபாலவை நாம் நம்பியிருக்கிறோமே இன்றும்!

நேற்று அநாரிக தர்பாலவுக்காய்
ஜெனிவா சென்று வாதாடிய
எமது இராமநாதன்களுக்கு இருந்ததைபோல
சரியாக ஒரு நூற்றாண்டுக்கு முன்னிருந்த
இராமநாதனுக்கு பின்னால்
ஒரு முள்ளிவாய்க்கால் இனப்படுகொலை
இரத்த ஆறும் இருந்ததில்லை
ஏன் ஒரு ஐநா சபையும் ஜெனிவாவும் இருந்ததில்லை
நேற்று ஜெனிவா சென்ற இராமநாதன்கள்
அநாகரிக தர்பாலவால் எட்டி உதைக்கப்பட்ட
அருணாச்சலத்தையும் இராநாதனையும்
நினைத்துப்பார்த்ததில்லை
அநாகரிக தர்மபாலவுக்காய் வாதாடினர்
ஜெனிவாவில் நேற்றும் தமிழர்கள்
ராணி அனுலாவின் கண்களின் மிதக்கும்
காமத்தின் வரிகளுக்குள்
ஒரு விசக்கோப்பையை உணராதவர் வரலாறு
இன்றும் தொடர்கின்றது

அநாகரிக தர்மபால
1915 அக்டோபர் 15ல்
சிங்களவர்க்கும் பிரதிநிதியாய் இருந்த
படித்த இலங்கை மக்கள் பிரதிநிதி
சேர் பொன் இராமநாதனுக்கு நீர் எழுதிய கடிதத்தை
இன்றைய இராமநாதன்கள் சார்பாக அல்ல
ஏமாற்றப்படும் அப்பாவி தமிழர்கள் சார்பாக
மீண்டும் உமக்கு அஞ்சலிடுகின்றேன்
அக்கடிதத்தில் நீர் எழுதியவை இவைதான்

இலங்கை சட்ட மன்றத்தில் நீங்கள் நிகழ்த்திய வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த உரைக்காக தயவு செய்து எனது உளப்பூர்வமான பாராட்டுக்களை ஏற்றுக்கொள்ளுங்கள்.உங்களுக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டு இலங்கையில் இருந்து இந்தியாவுக்கு சென்றதில் இருந்து பாவப்பட்ட சிங்கள மக்களை பாதுகாக்க நாதியில்லாமல் போயிற்று.அவர்களுக்கு வழிகாட்ட ஆளில்லாமல் போயிற்று.அவர்களின் மகிழ்ச்சி காணாமல்போயிற்று.இந்தியாவுடன் இலங்கையை இணைக்கக்கோரி போராட்டம் நடத்த இதுதான் தருணம்.இந்தியாவின் பாதுகாப்பு நிழல் இல்லாவிட்டால் இலங்கை அழிந்துவிடும்.மதராஸ் மாநிலத்தோடு அல்லது வங்கமாநிலத்தோடு இலங்கையை இணைக்க வேண்டும்.அது உங்கள் முடிவு.பாவப்பட்ட புத்தமதத்தினை பாதுகாக்க உங்களால் முடிந்த அனைத்தையும் செய்வீர்கள் என நினைக்கின்றேன்!

அநாரிக தர்மபால இது நீங்களே தான் எழுதியது
நீங்களே இராமநாதனை
தோளில் தூக்கி சுமந்து கொண்டாடினீர்கள்
நீங்களே எங்களை எட்டி உதைத்தது
நீங்களே எங்களுக்கு துரோகமிழைத்தது
நீங்கள் எங்களோடு வாழவிரும்பவில்லை
அதனால் எதையும் நீங்கள் எதையும்
விட்டுக்கொடுக்க விரும்பவில்லை
நாங்களும்
எதையும் இனி விட்டுக்கொடுக்கபோவதில்லை
எங்களது சிங்கக்கொடியில்
எங்களையே ஒதுக்கினீர்கள்
விளிம்பில் சென்று வீழ்ந்தோம்
புலிகளாய் எழுந்தோம்!
புலிக்கொடியை ஏந்தினோம்!!

No comments:

Post a Comment

பிரசாதமே!!

  கொடிய போர் கண்ட நகரம் போலில்லை காலிழந்தவனுக்கு கால் முளைக்கும் உணர்ச்சியை கண்ணிழந்தவனுக்கு ஒளியூறும்  மனத்தை உண்டாக்கவில்லை யாரேனும் பறக்க...