Saturday, October 20, 2018

தங்கக் கூரையனே தமிழ் நல்லூர் வேலவனே!-பொன்.காந்தன்




வணக்கம் அப்பனே!
ஏன் சுணக்கம்
உன் கணக்கிற்கு கொந்தளித்து கொக்கரித்து
என் வள்ளி தெய்வானையை வறுத்தெடுத்து வசைபாடி
தங்கக்கூரையின்பால் வடியும் உன் கருணையுள்ளத்தை
பொங்கிச்சரித்து அடங்க வேண்டியதுதானே என
கந்தனே நீ என்னை தடுத்தாட்கொள்வதை அறிவேன்
என்னவோ தெரியவில்லை உன்மேல் ஊடலும் கூடலுமான
உன்னத உறவுண்டு
அவ்வளவு இலகுவாய் அறுத்தெறியமுடியவில்லை
காதல் களவொழுக்கம் கோபம்
தேவரைக்காத்த தேவசேனாதிபதியான உன் போர்க்குணம்
தந்தைதாயுடன் அடம்பிடிக்கும் பிள்ளைகுணம் எல்லாம்
மானுடப்பிறவிகளோடு நெருங்கியிருப்பதாய் என் நெஞ்சம் உணர்கிறது
கடவுள்களில் நீ கிட்ட இருப்பதாகவும்
என் அழுகை சிரிப்பு கோபம் மௌனம் சலனம் யாவும்
உன் நெஞ்சம் அறியுமெனவும் என் நம்பிக்கை
உன்னில் புத்தன் இயேசு நபிகளை கண்டுமகிழ்வதும் என் கடவுள்கொள்கை
கடந்துபோன நூற்றாண்டுகளில் அன்னியர்நடுவில்
வடக்கில் தமிழர் அடையாளமாய்
நின்றுநிலைத்த உன் ஆன்மீக சக்திக்கு நான் நன்றி சொல்வேன்
நீ இல்லையெனில்
நல்லூரடி நேற்றும் இன்றும் வேறுவடிவாய்த்தான் இருக்கும்
உன்னைச்சுற்றிய அரங்குகளில் பாடுகின்ற நாதங்களில்
ஆடுகின்ற சலங்கைகளில் எஞ்சியிருக்கின்ற தாய்தமிழ்
இனியும் ஏழுதலைமுறைக்கும் மங்காத்தங்கமாய் மனங்களில் பயணிக்கிறது
வரங்கிடைக்கிறதோ இல்லையோ
உன் திருவிழா நாட்களில்
பட்டுடுக்கும் பெண்களும் ஆண்களும்
என் தமிழ்நிலத்தை காவுகொள்ள நினைக்கும்
அன்னியங்களை தோற்கடிக்கும் அஸ்திரங்களாகவே எனக்குத்தோன்றுகின்றது
நிலவைத்தொடும்வரை உன் கோபுரம் உயர்ந்தாலும்
நான் கொதிக்கப்போவதில்லை
உன் உயரம் எதிரிகளை ஏங்கவைப்பதாய் இருக்கட்டும்
தமிழர் வல்லமையை வாழ வைப்பதாய் தோன்றட்டும்
காவடி ஆடென்றும் காசுதாவென்றும் கந்தசஸ்டிபிடியென்றும்
நீ என்றும் கட்டளையிட்டதில்லை
உன் கோவண எளிமை ஒரு தத்துவம்
அதை புரிந்துகொள்ளாதது எங்கள் தவறு
ஒவ்வொருவரும் பழனி முருகனாய் இருந்திருந்தால்
என்றைக்கோ ஏற்றத்தாழ்வற்ற சமுதாயம் பிறந்திருக்கும்
வாய்மொழியோடு நீ நிற்கவில்லை
வாழ்ந்தே காட்டியிருக்கிறாய் முருகா
உன் தங்கக்கூரையை கண்டவுடன்தான்
எனக்கு ஏழைகளை பார்க்கும் கண் திறக்கவில்லை
அது திறந்து நெடுங்காலம்
கூடப்படித்தவன் அத்தனைபேரும் கூலிக்காரன் பிள்ளைகள்
ஓட்டை காற்சட்டையை ஒன்றுக்கு பத்துமுறை
கிழியகிழிய தைத்துபோட்டு படித்துப்பட்டம் பெற்ற
தைரியசாலிகளுடன் நான் படித்தேன்
ஒரு சின்ன வட்ட ரொட்டியை பத்தாய் பங்கிட்டு
தின்றுவிட்டு வாழ்வில் வென்ற நட்புகள்
என் நெஞ்சில் நிறைந்திருக்கின்றார்கள்
குண்டுபட்ட தோழனின் குருதிபட்ட அரசியை
கழுவிப்போட்டு சோறுகாய்ச்சி உண்ட
போராட்ட வறுமையின் காவியத்தை படித்திருக்கின்றேன்
பட்டிணியோடு ஒட்டுத்துணியோடு அகதிமுகாமுக்குப்போன
மக்களோடு ஒருவனாய் நானுமிருந்தேன்
இத்தனைக்கும் பிறகும்
பட்டுக்கோவணம் கட்டி ஒன்றரைக்கோடி வாகனத்தில்
உல்லாசம் கண்டு கொண்டிருப்பவர்கள் நம்மில்பலர்
பத்தாயிரம் தொடக்கம்
பலலட்சம் பெறுமதியில் கைத்தொலைபேசியில்
காதல் லீலை செய்துகொண்டிருப்போரும் நம்மவரே
என்னிடம் இருப்பதுகூட ஆயிரங்களால் ஆன கைபேசிதானே
பாராளுமன்ற மாகாணசபை படியில் மனிசியையும்
மைத்துனியையும் குளிர்மைபடுத்தும்
மக்கள் சேவகர்களும் நம்மவரே
எத்தனைபேர் பிச்சைக்காரரரை கண்டவுடன்
இனி பிச்சையெடுக்காதே
இந்தாபிடி தாலிக்கொடி இதை வைத்து
ஒரு சொந்த தொழில் செய் என்று கொடுத்துவிட்டு
வெற்றுக்கழுத்தில் ஒரு மஞ்சள்கயிறோடு வாழத்தயார்
ஏழைவீடு தேடிப்போய்
கையிலுள்ள மோதிரத்தை கழற்றிக்கொடுத்து
சைக்கிள் சப்பாத்துக்கள் சீருடைகள் வாங்குங்கள் என்று
எத்தனைபேர் கருணை பொழிந்தீர்கள் மனச்சாட்சியை தொட்டுப்பாருங்கள்
எத்தனைபேர் வெறுங்காதோடு வேப்பங்குச்சியை செருகிக்கொண்டு
சாப்பாட்டுக்கு வழியற்றவனை வாழவைக்கத்தயார்
எழுத்தில் இரங்குவதும் எழுத்தில் சோறுபோடுவதும்
எழுத்தில் சீருடை வழங்குவதும் மிகச்சுலபம்
நிலத்தில் இறங்கி
நித்தியம் அந்த வீடுகளை தரிசித்துப்பார் தெரியும்
மாற்று உபாயங்கள் என்னவென்று
முருகா உன் தங்கக்கூரைக்காய் விசனங்கள் எழுகையில்
வடக்கிலுள்ள வெற்று மதுப்போத்தல்கள் அத்தனையையும்
கூட்டி அள்ளிக்குவித்தேன்
பத்துத் தங்கக்கூரை பணம் புலம்பி தள்ளாடி சரிந்திருக்கின்றது
வெட்டிப்பொழுதுகள் தவிர்த்து வேண்டாச்சிந்தனை தவிர்த்து
சந்தணம் கமழ ஓரிடத்தில் ஒட்டிஉறவாடி
உறவுகள் வளர்த்து புத்தியை கொஞ்சம் சலவை செய்ய
வாய்த்தது நல்லூரான் சந்நிதி
போதையும் வாள்வெட்டும் விதைக்கப்பட்ட நிலத்தில்
அர்ச்சனைத் தட்டேந்திய முகங்கள் ஆறுதல் தருகின்றது
போற்றுதற்கு ஏதுமில்லா பூமியை படைக்கமுடியாது
சத்தியமாய்ச் சொல்கிறேன்
இத்தனை நாட்களில் நல்லூரான் உண்டியலில்
ஒரு குற்றியை கூட நான் போட்டதில்லை
போட்டவர்களை பார்த்து பொறாமை கொள்ளவும் இல்லை
அதில் பல பேர் விளம்பரமின்றி
பலரை வாழ வைக்கும் கருணை உள்ளவர்களாகவும் இருக்கலாம்
முகநூலுக்கும் வராமல்
முடிச்சுக்களை கொடுத்து படமும் எடுக்காமல்
வறியோருக்கு உதவும் உத்தமர்கள் பலரை நான் அறிவேன்
அவர்களைபோல என்னை பக்குவப்படுத்தவேண்டுமென
முருகனிடம் வரம் கேட்கிறேன்.
ஏழைப்பிள்ளைகளுக்கு உணவு கொடுத்துவிட்டு
அவர்கள் வரிசையில் குந்தியிருந்து சாப்பிடும்
படங்களை போட்டு பட்டிணி கருணை காட்டாமல்
நித்தியமும் ஏழைகளுக்கு சோறூட்டிவிட்டு
எதுவும் தெரியாததுபோல் இருக்கும் தங்கங்களை
நினைக்கும் போது நாம் என்ன மாத்திரமென தோன்றும்
தங்கங்கக்கூரை தரித்து பலரின் கண்ணைத்திறந்தாய்
தமிழ்க்கடவுளே
மாறுவேடத்தில் போய் உன் காதலியை
கரக்ற் கண்ணியதும்
நாவல்மரத்தில் ஏறி கிழவியின் தமிழை கிண்டிப்பார்த்ததும்
கோவணத்தோடு நின்ற ரூபங்களும் விளையாட்டும்
இன்னும் தீரவில்லைப்போலும்
தங்கக்கூரை தரித்தாய்
உன்னை வசைபாடவைத்து
ஊருக்குள் இருக்கும் கருணையாளர்களை காட்டிவைத்தாய்
இனி ஏழைகளுக்கு உதவ ஏராளம் பேர் உண்டு
வாரி வழங்குவார்கள்
ஏழைகளை காணும்போது ஓடி ஒளிய மாட்டார்கள்
உன் கோவண எளிமை தரிப்பார்கள்
எதையும் மனதில் வைக்காதே கந்தா
மிடுக்குடன் தேர்ஏறு அடக்குவோர் மீது உன் பார்வையை செலுத்து
வேறோருவன் போராடவும் உயிர்கொடுக்கவும்
விலத்தி நின்று விசிலடிக்கும் சமுதாயத்தின் வேர்களை அறுத்தெறி
வாளோடலையும் வாலிபர்களை ஆட்டிவைக்கும் சக்திகளை
உன் வேலால் சங்கரி
நாலாபுறமும் வாழும் எல்லா தமிழரையும் இணைக்கும்
ஒரு வல்லமையை படைத்தருள்க!

No comments:

Post a Comment

பிரசாதமே!!

  கொடிய போர் கண்ட நகரம் போலில்லை காலிழந்தவனுக்கு கால் முளைக்கும் உணர்ச்சியை கண்ணிழந்தவனுக்கு ஒளியூறும்  மனத்தை உண்டாக்கவில்லை யாரேனும் பறக்க...