நுளம்பு கடிக்காமல் இருக்க
வலை கட்டினேன்
முள் குத்தாதிருக்க
தரமான காலணி வாங்கிக் கொடுத்தேன்
முடிக்கு நல்ல எண்ணெய்
படிக்க பல புத்தகங்கள்
குடிக்க சத்துள்ள பானங்கள்
விளையாட கரம் செஸ் போல் டெனிஸ்
திருவிழாவில் கேட்டதெல்லாம்
தீபாவளி புதுவருசம் பூப்புனி நீராட்டு விழாக்களுக்கு
நாகரிக ஆடைகள்
யாவும் வாங்கிக்கொடுத்தேன்
எல்லாம் சுபம்
அடம்பிடிக்க
ஐபோன் வாங்கிக் கொடுத்தேன்
புளுவேல் என்றார்கள்
பிள்ளையை எட்டி எட்டி பார்க்கிறேன்
இடைவிடாது இராப்பகலாய்
சலக்கடுப்பில் பிள்ளை
அடிக்கடி எழுந்தாலும்
சந்தேகப்படுகிறேன்
என்னால் முடியாது
இன்றிரவு நாய்கள் குரைக்க
முகத்தை துணியால் மூடி
என் வீட்டுக்கூரை பிரித்து
ஐபோன் திருட தயாராகிறேன்
No comments:
Post a Comment