புலுனி குஞ்சொன்றை
சிறுவயதில் பிடித்தேன்
பிறகு
கூட்டமாய்
அதுகள் பட்ட பாட்டில்
என் மனம் இரங்கி போயிற்று
புலுனிகளின் நிறத்தில்
ஒரு மாட்டீன் சேர்ட் வைத்திருந்தேன்
அதை விரும்பி அடிக்கடி அணிந்து
பதினாறு வயதுகளில்
ஒரு புலுனியாய் இருந்தேன்
புலுனிகளை நான் ஒரு போதும்
தனித்து கண்டதில்லை
கூட்டமாய் பிரிவற்று இருக்கும்
அவைகளில் தொலைந்த மனதை
தேட விரும்பிலேன்
புலுனிகளின் சத்தங்கள் அற்ற தனிமை
என்னை அதிகம் வருந்துவது
சிறுவயதில்
குஞ்சுக்காக அதுகள் பட்ட பாட்டை
பின் பல முறை
எங்கள் ஊர்
தங்கச்சிகள் அம்மாக்களிடம் கண்டேன்
புலுனியின் கண்ணீர் என்னை வருத்துகிறது
சிறு வயதில் நான் பிடித்த
புலுனிக்குஞ்சை
திரும்ப நிலத்தில் விட்டபோது
அவை அடைந்த ஆனந்தத்தை
சொல்ல முடியவில்லை
ஒப்புமை கூற முடியவில்லை
எல்லை இட முடியவில்லை
ஒரு புலுனியாய் வாழும்போது மட்டும்
அந்த வலியும் இன்பமும்
யாராவது
புலுனி குஞ்சுகளை வைத்திருக்கிறீர்களா
புலுனிகளின் ஆனந்தம்
என் நிலத்தை நிறைக்காதா
No comments:
Post a Comment