Saturday, October 20, 2018

ராணி-பொன்.காந்தன்


கடந்த சில நாட்களுக்கு முன்பு கிளிநொச்சி பிரதான சாலையில் கடையொன்றில் குந்தி இருந்தேன்.உயர்தர தேர்வுக்கு செல்லும் மாணவர்கள் பேரூந்துகளில் இருந்து இறங்கி கூட்டம் கூட்டமாக ஏதோ ஒரு வகுப்புக்களுக்காக பயிற்சிகளுக்காக செல்லும் இளையவர்கள் என பரபரப்பாகஇருக்கிறது சாலை இது ஒரு அழகான பரபரப்பு.இதுவும் ஒரு மனதை ஈரப்படுத்தும் மழைதான்.அப்போது கடைக்குள் வந்த ஒரு தாயும் மகனும் முதலாளியோடு புன்னகை சொரிந்தனர்.தன் மகன் இன்னும் ஓரிரு நாட்களில் ஐந்தாம் தரம் புலமைப்பரிசில் தேர்வு எழுதப்போவதாக மிக்க பெருமிதத்துடனும் காற்றில் பறக்கப்போகும் அனுபவத்துடன் சொன்னார்.முதலாளி பையனை முதுகில் தட்டி சித்தியடைவான் என பாராட்டினார்.தன் மகனும் போர்க்காலத்தில் பின்தங்கிய கிராமப்புறப்பள்ளியொன்றில் 158 புள்ளிகள் பெற்றதாக பெருமைப்பட்டுக்கொண்டார்.
இப்போது தாயும் மகனும் விடைபெற்றுப்போக ஐயா அம்மா இரக்கும் குரல்கள்.இரண்டு சிறுவர்கள்.ஒருவர் ஆண் .ஐயா அம்மா ஊது பத்தி வாங்குங்க....அந்த பிஞ்சுகள் பிச்சைக்காரரா அல்லது ஊது பத்தி வியாபாரிகளா இரண்டையும் தீர்மானம் செய்யமுடியவில்லை ஒன்று மட்டும் சொல்லமுடியும் அவர்கள் படிக்கும் வயது உடையவர்கள்.ஏழ்மை இந்த சாலையில் நிர்பந்தித்திருக்கிறது.அன்பாக அவர்களிடம் விசாரித்தேன்.ஊர் சிதம்பரபுரம் என்றார்கள்.படிக்கும் பாடசாலையையும் சொன்னார்கள்.தங்கள் தாய் சந்தையில் விற்றுக்கொண்டிருக்கிறார்.அக்காவும் நானும் இந்த சாலை நெடுக திரிந்து விற்கிறோம் என்றான் அந்த அழகிய சிறுவன்.அவனுக்கு பன்னிரண்டு வயது அக்காவுக்கு பதின்மூன்றுவயது.தாய்க்கு உதவும் இந்தப்பிள்ளைகளை நினைத்து பெருமையாக இருந்தாலும் இவர்களுக்கு இந்த வயதில் நிர்ப்பந்தம் சுமை சுதந்திரத்தை பருவத்தை அனுபவிக்க முடியவில்லை நண்பர்களே உங்கள் வீட்டில் இந்த கணம் இந்த வயதுச்சிறுவர்கள் என்ன செய்து கொண்டிருக்கிறார்கள் இதை வாசிப்பதை ஒரு விநாடி நிறுத்தி நோட்டமிடுங்கள் நோட்டமிட்டதை சுமந்தபடி இங்கே மீண்டும் வாருங்கள் இந்த இரண்டு பிஞ்சுகளும் சுமந்திருக்கும் பாரம் நெஞ்சை அழுத்தவில்லையா
அவர்களிடம் ஒரு ஊது பத்தி வாங்கிக்கொண்டேன்.காலை சாப்பிட்டீர்களா என கேட்டுக்கொண்டேன்.நல்லா படிக்கவேணும் என இரண்டு வார்த்தை சொன்னேன்.அவர்கள் அந்த சாலை வழியே இரந்தபடி என் கண்ணில் இருந்து மறைந்து கொண்டிருந்தார்கள்.
அந்த இரண்டு பிஞ்சுகளின் தாயின் பெயர் இராணி
ராஜா இறந்துவிட்டார்.
மாடங்களில் ஊது பத்தி வாசமின்றி பரவுகின்றது

No comments:

Post a Comment

பிரசாதமே!!

  கொடிய போர் கண்ட நகரம் போலில்லை காலிழந்தவனுக்கு கால் முளைக்கும் உணர்ச்சியை கண்ணிழந்தவனுக்கு ஒளியூறும்  மனத்தை உண்டாக்கவில்லை யாரேனும் பறக்க...