காலையில் நண்பன் ஒருவரின் தொலைபேசி அழைப்பை எடுத்தபோது யாழ்ப்பாணம் போகவேண்டியிருந்தது.சந்தியில்உள்ள பஸ் தரிப்புக்கு போனேன்.நான் போகவும் யாழ்ப்பாண பெயர் பலகையோடு ஒரு பேரூந்துவந்து நிறுத்தவும் சரியாக இருந்தது.ஆசனங்கள் உள்ளதா என வெளியில் நின்று கணநேரத்தில் நோட்டமிட்டபிறகு தொற்றிக்கொண்டேன் அதில் ஆசனம் இருந்தது.அமர்ந்துகொண்டேன்.பேரூந்தில் ஊதுபத்தி வாசனை மிதந்துகொண்டிருந்தது.சாரதி இருக்கைக்கு பின்புறம் பொருத்தப்பட்டுள்ள சிறிய தொலைக்காட்சியில் சிவகார்த்திகேயன் வாடி என் தமிழ்ச்செல்வி பாட்டுக்கு ஆடிக்கொண்டிருந்தார்.
யாழ்;பாணத்துக்குபலர்ஏறிக்கொண்டிருந்தனர்.
இன்று சுபநாள் போல அதிகமாக பட்டுச்சாறிகள்.சரிகைகள்.குங்குமப்பொட்டுக்களில் எழும் வாசமும்.காற்றுக்கு அலையும் சாம்பூக்களில் முக்குளித்த கூந்தல்களும் பேரூந்தை நிறைத்துக்கொண்டிருந்தன.புது வீடு கலியாணம் என இன்றைக்கு களைகட்டும்போல எண்ணிக்கொண்டேன்.
புறப்படுவதற்கு முன் அவிச்ச கச்சான் அவிச்ச கச்சான் என கண்டசாலாவின் குரலின் சாயலில் ஒருவர் கூவிக்கொண்டிருந்தார்.அவிச்ச கச்சான் எனக்கும் பிடிக்கும்.வாங்க முடியவில்லை.காசுப்பையில் பெரிய தாள் ஒன்று இருந்தது.மாற்றமுடியாதது.அதைக் குடுத்து கச்சான் கேட்டால்.நீ படிச்சமாதிரி இருக்கிறாய் ஜீன்ஸ் சேட் போட்டிருக்கிறாய் என ஒரு மாதிரி என்னை அவிச்ச கச்சான் கேக்க கூடும் என்பதால் வாயூறியபடியே இருந்துகொண்டேன்.
முன்பு பேருந்து பயணங்களின்போது முறிகண்டி கச்சான்தான் புகழ்வாய்ந்தது.வடக்கில் இருந்து போகிறவர்களும் வருகின்றவர்களும் முறிகண்டியில் நிறுத்தப்படும் பேரூந்தில் இறங்கி முறிகண்டியானிடம் தோப்புக்கரணம் போட்டு தாங்களும் பூசி வாகனத்துக்கும் பூசி வீட்டுக்கும் மிச்சத்தை ஒரு சின்ன கடதாசியில் சுத்திவைத்து சுடசுட பெண்களும் ஆண்களும் பெரிய இரும்புச்சட்டிகளில் வறுக்கும் பெரிய கச்சான்களை சிறிய கடதாசி பைகளில் வாங்கிச்செல்வது வழக்கம்.கச்சானும் கச்சான்தான்.உள்ள நல்ல பெரிசு.முறிகண்டிக்கச்சான் என்பது உண்மையில் உறவினர்களுக்கு வீட்டுக்குச்செல்லும்போது கொண்டு செல்லும் இன்றைய பொக்கே போன்றது.அப்பாக்கள் மாதக்கணக்கில் வெளியிடங்களில் வேலை செய்துவிட்டு வீடுவரும்போது பிள்ளைகளுக்காய் கொண்டு வரும் அன்பின் அடையாளம் முறிகண்டி கச்சான்.இன்று அவிச்ச கச்சான்.சொப்பிங் பையில்.எல்லாம் இருக்கைகளில் இருந்தபடியே வாங்கி இருக்கைகளிலேயே உண்டு.கண்டசாலாவின் குரலின் அவிச்சகச்சான் விற்ற சுமார் ஐம்பதுக்குமேல் வயது மதிக்கத்தக்கவர் பேரூந்தில் இறங்கவும் பேரூந்தும் புறப்பட்டது.பேரூந்திகளில் ஏறி கச்சான் விற்று தங்கள் வாழ்க்;கையை ஓட்டும் குறிப்பிட்ட சமுகம் இங்கிருக்கின்றது.அந்த சுயமுயற்சி வாழ்த்துக்குரியது.அவர்களின் வறுமை கவலைக்குரியது.
பேருந்து புறப்பட்டது.சாளரக்கதவை சற்று இழுத்துவிட்டேன்.நித்தியானந்தாவின் கதவைத்திற காற்று வரட்டும்.சிறுவயதில் இருந்து சாளரத்தினூடே ஆனையிறவு வெளியை இரசிப்பதில் எனக்கு அலாதிப்பிரியம் இப்போதும் கூட.இப்போதும் ரசிப்பதும் அதன் நினைவுகளில் மூழ்குவதும் ஓரக்கண்ணில் நீர் துளிர்ப்பதுமான நாட்கள் ஆகிறது.இப்பொழுது சிறிய திரையில் நடிகர் சூரியா ஆடிக்கொண்டிருக்கின்றார்
முன் அந்திச்சாரல் நீ முன் ஜென்ம தேடல் நீ பூப்பூத்த சாலை நீ புலராத காலைநீ விடிந்தாலும் விழியோரத்தில் வரும் கனவு நீ....கூடவே ஒரு மெல்லிடையழகி.
இயக்கச்சியை கடந்து பேரூந்து ஒரு தரிப்பிடத்தில் நின்றது.அங்கு ஒரு பிரம்புடன் ஒருவர் ஏறினார்.அவர் பார்வை புலன் இழந்தவர்.அவர் ஏறி பேரூந்தின் மேல் கம்பியை பிடித்து பிடித்து சாரதி பக்கம் பேரூந்தின் முன்பக்கம் சென்றார்.சாளரத்தினூடே இயக்கச்சி தென்னஞ்சோலைகளை இரசித்தபோது பேரூந்துக்குள் பாடல் கேட்கிறது.தூளியிலே ஆடவந்த வானத்து மின் விளக்கே ஆழியிலே கண்டெடுத்த அற்புத ஆணிமுத்தே....குரலை திறந்து அந்த பார்வை புலனற்றவர் பாடிக்கொண்டிருந்தார்.பாடியபடி பின்னே வந்து கொண்டிருந்தார்.பேரூந்தில் இருந்தவர்கள் தங்கள் பணப்பையை துளாவிக்கொண்டிருந்தனர்.சில்லறைகள் அல்லது பத்து இருபது ரூபா தாள்கள்....இப்பொழுது அடுத்த பாட்டு பேரூந்தின் நடுவில் நின்று...பெத்து எடுத்தவதான் என்ன தத்து கொடுத்துப்புட்டா..பெத்த கடனுக்குத்தான் என்ன வித்து வட்டியை கட்டிப்புட்டா....பாடிமுடித்த பொழுது அவரின் கையை பிடித்து காசுகளை செருகினார்கள் பயணிகள் பலர் ஒரு இளைஞர் நூறு ரூபா கொடுத்தான். ஒற்றைக்காதில் அவன் தோடு அணிந்திருந்தான்.....சிலர் அவரது பாட்டு சுருதியுடன் இருப்பதாக அவர் காதுக்கு உரத்துக்கேட்கும்படி கூறினர்.பின்னிருக்கையில் இருந்த ஒருவர் ஒரு வானொலியின் பேரை சொல்லி அதற்கு உங்களை பற்றி தெரிவித்தால் உங்களுக்கு நிதியுதவி நிறையக் கிடைக்கும் நீங்கள் இப்படி சிரமப்பட தேவையில்லை.இருந்த இடத்திலேயே ஒரு தொழில் செய்யலாம்.
இந்தக்கதைகளுக்கு இடையில் அந்த பார்வை புலனற்ற பேரூந்துப்பாடகர் திருக்கோணமலையை சேர்ந்தவர் என்பதையும் அவருக்கு மனைவி பிள்ளகைள் உண்டென்பதையும் புரிந்துகொள்ள முடிந்தது.இன்னொருவர் தானும் ஏதேனும் சொல்ல வேணும் என்றோ என்னவோ....பாடுகின்றபோது எச்சில் பறக்கும் அது மற்றவர்களில் படும் அப்போது வருத்தம் வரும் என்று வியாக்கினங்களை நீட்டினர்.எனக்கு பக்கத்தில் இருந்த பெண் அவரை திரும்பிப்பார்த்துவிட்டு கோபத்துடன் புறுறுத்துக்கொண்டாள்.எச்சில் பறக்கும் என்றவர் மனைவி இன்றி பிள்ளை பெற்றவராக இருக்கக்கூடும் என நினைத்தேன்.ஏனெனில் கலவியில் உதட்டில் முத்தம் இன்னும் எங்கோ.....அப்போதெல்லாம் எச்சில் படாமலா....எல்லோர் கதைகளையும் ஒன்றும் பேசாமல் எதுவும் சொல்லாமல் கேட்டபடி இருந்த அந்த பார்வை புலனற்ற பாடகர்..பளை பஸ் தரிப்பில் இறங்கி சென்றுவிட்டார்.பளையில் இருந்து போய்கொண்டிருந்த பேரூந்தில் சிந்தனையில் ஆழ்ந்தேன்.ஒரு பயணியாவது அந்த பார்வை புலனற்ற பாடகருக்கு நீங்கள் யாராவது ஒரு மக்கள் பிரதிநிதிகளின் பெயரை சொல்லி அவரிடம் போங்கள் உங்கள் வறுமை நீங்கும் என சொல்லவில்லை....பொன்மனச்செம்மல் எம்ஜிஆர் நினைவுக்கு வந்தார் எனக்கு....
இப்பொழுது யாழ்ப்பாணத்தில் திரும்பிக்கொண்டிருந்தேன்.நாவற்குழி பாலத்தருகில் பேரூந்து மெதுவாக போனபோது சிலர் ஏறிக்கொண்டனர்.அதில் ஏறிக்கொண்டவரில் ஒருவர் புத்தக வியாபாரி.அவரை பலமுறையும் யாழப்பாணம் சென்றுவருகின்றபோது பேரூந்தில் சந்திப்பேன்.அவர் பேரூந்தில் உள்ள பயணிகளிடம் வர்ண முகப்பு அட்டையுடைய வர்ண்ணப்படங்கள் அடங்கிய சின்ன பிள்ளைகள் படிக்கக்கூடிய புத்தகங்களை அதன் விலை விபரத்துடன் கொடுப்பார்.பயணிகள் அதை புரட்டிப்பார்த்து பிடித்தால் வாங்கலாம் என்பதுதான் அவரின் புத்தக வியாபாரம்.ஒருமுறை யாழ்ப்பாணம் போய்வருகின்றபோது எனது மடியில் புத்தகம் ஒன்றை வைத்தார்.புரட்டிப்பார்த்தேன் வீட்டில் உள்ள சிறுவர்கள் நினைவுக்கு வர ஒன்றை வாங்கிக்கொண்டேன்.அவருக்கு புத்தகங்களை விக்கிறாரோ இல்லையோ அவர் எங்கள் மடிகளில் வர்ணங்கள் எழுத்துக்கள் சொற்கள் அடங்கிய புத்தகத்தை வைக்கின்றபோது வீட்டில் உள்ள உறவினர் வீடுகளில் உள்ள சின்னகுழந்தைகளின் முகங்கள் நினைவுக்கு வந்துவிடுகின்றது.ஓ இந்த பேரூந்துப்புத்தகங்கள் வேறொன்றையும் செய்கின்றது எங்களுக்கு நன்றி சிங்களசோதரா...புத்தகங்களை அவரிடம் பேரூந்தில் வாங்கினோமோ இல்லையோ...புத்தகங்கள் நினைவுபடுத்திய குழந்தைகளுக்காய் ஆப்பிள் ஓரேஞ் வாங்கிச்செல்கின்றோம் மறக்காமல்
பேரூந்தில் பரந்தன் சந்தியில் தரிப்பிடத்தில் நின்றபோது சிலர் ஏறினர்.முன்வாசலில் ஏறிய ஒரு இளைஞன் இருபது வயதிருக்கும் கறுத்த பை ஒன்றை தோளின் குறுக்காக கொழுவி இருந்தான்.வணக்கம் என்று கதையை தொடங்கினான்..முன் ஆசனத்தில் நாம் அமர்ந்திருந்த காரணத்தால் அவனை மிக நெருக்கமாக பார்த்தேன்.கையில் குப்பி ஒன்று வைத்திருந்தான்.ஓ...அந்த குப்பியல்ல.....இது சிறிய விளம்பரம் ஒட்டிய குப்பி அதற்குள் ஏதோ திரவம் இருந்தது....அவன் இது புதிய கண்டுபிடிப்பு என்றான் இதை நீங்களும் அறியுங்கள் என்றான்...அதை பற்றி நான் உங்களுக்கு சொல்கின்றேன் என்றான்....அது கறைகளை போக்குமாம்....ரத்தக்கறை வாழைப்பூக்கறை கறுப்புக்கறை வெற்றிலைக்கறை பேனாக்கறை வியர்வைக்கறை இத்தனைகறைகளையும் அந்த திராவகம் ஒரு நொடியில் அகற்றும் என்கிறான்.தன் சேட்டில் ஒரு பேனாவால் கிறுக்கினான்..பிறகு தன் பையில் இருந்து ஒரு பற்தூரிகையை எடுத்து அதில் குப்பியில் இருந்த திராவகத்தை தடவி அந்த பேனாக் கிறுக்கல்கள் மீது தடவுகின்றான்.அவை அவன் சொன்னதுபோல் ஒரு நொடியில் காணோம்.பின் பையில் இருந்துவெற்றிலை கறைபடிந்த வெள்ளைத்துணியை எடுக்கின்றான்...மீண்டும் தூரிகையில் திரவம் தடவி கறையின் மீது தடவுகின்றான் கறை மறைகின்றது கண்முன்னே....
அவனது கழுத்தில் தொங்கிக்கொண்டிருந்த அடையாள அடையாள அட்டையை அப்போதுதான் பார்த்தேன்.அவனுடைய பெயர் அனுர அவன் ஒரு சிங்கள இளைஞன்.ஆனால் அதுவரை அவன் பேசிய தமிழ் தமிழர்களும் பேச முடியாத இனிய உச்சரிப்புடன் கூடிய தெளிந்த தமிழ்.ஆச்சரியமாக இருந்தது.அவனுக்கு மொழி கைகொடுக்கின்றது.அவனுடைய தமிழ்...மகிந்த சகோதறி கல்யாணங் தமிழ் ஆட்கள் தானேஅப்ப மகிந்த உங்களுக்கு மச்சாங் தானே...என்ற தமிழ் அல்ல. இந்த சிங்கள இளைஞனின் தமிழ் தமிழ்தொலைக்காட்சிகளில் பத்து ஆங்கில வார்த்தைகளுக்கு இரண்டு தமிழ் உச்சரிப்பு செய்யும் தொகுப்பாளர்கள் பார்க்கவேண்டிய தமிழ்.இவனும் ஒரு தொகுப்பாளர்தான் பேரூந்தில் தன் விற்பனை பொருள் பற்றி வாடிக்கையாளருக்கு அதுவும் வேற்று மொழி வாடிக்கையாளருக்கு சிறப்பாக அவர்களது மொழியில் தொகுப்பை செய்கின்றான்.நானும் ஒரு குப்பி வாங்கிக்கொண்டேன் என் மொழியை அழகாக உச்சரித்ததுக்காக. பலரும் வாங்கிக்கொண்டார்கள்.
பேரூந்து போகிறது சிந்தனையில் ஆழ்கின்றேன்.ஓ இனிய சிங்கள இளைஞனே...பல இலட்சம் பேர் எங்கள்மீது காலாதிகாலமாய் படிந்துள்ள இரத்தக்கறையை எவ்வாறு போக்கலாம்!!'
No comments:
Post a Comment