Friday, October 19, 2018

அந்த கண்கள் !!-பொன்.காந்தன்




குழந்தைகளின் மண்ணளையும் கரங்களை மிதித்த
தடங்களில் ஏறிவந்து
புறாக்களின் மேனியுரித்துப்போர்த்தியபடி
வெறி உலுப்பிய ஊழியில்
புரட்டிப்போடப்பட்ட சோலையின் வேர்களில்
அங்கலாய்த்துக்கிடக்கிறது
ஒரு தீர்க்கதரிசியின் கண்கள்
செங்காந்தள் மலர் சூடிய
தேவதைகளின் பொற்கிண்ணத்தில் நேற்றுவரை
அரசிளங்குமாரர்களின் பூஜைத்திருவொளியாய்
பூரித்த விழிகள்
திக்குகளில் தேடுகின்றன
விடாய்த்தீராப் பூர்வீகத்தின் இளவல்களின்
கீழ்த்திசை இருளில் அலையும் பாதங்களை

கண்களை பிளந்தெடுத்து வன்மங்களை இட்டுமூடி
விரகதாபத்தை தேடும் காதலனின் பார்வையால்
சோமபானம் வழியும் உதடுகள் கவ்வி
இருளப்பிய இமையுள்ளே செருகித்தவிக்கும்
சலன விழிகளை திறந்து
மயங்கித்தடுமாறும் எனது சாலையில் குத்திட்டு
வேல்முனையில் ஆயிரம் கேள்விகளை வீசுகின்ற
அந்தக் கண்கள் யாருடையது

காக்கைகளின் சண்டைகளுக்கு மத்தியில்
உப்பிப்பெருத்த தெருநாயின் பிணத்தின்
நெடில்கள்
பொத்திவைக்கப்பட்டுள்ள பூஜை அறையின்
கதவுகளுக்குள் நுழைந்து
தியானத்தில் கரைந்த முனிபுங்குவங்களின்
தவத்தின் முன்
ஆடைகள் களைத்தொழுகும்
நிர்வாண உச்சாடனங்களின் மீது
சிறைக்கூண்டுகளில் மூச்சுருகி வழிந்த
எரிமலைக்குழம்புகளை
கொப்பளிக்க காத்திருக்கும்
அந்தக் கண்கள் யாருடையது

ஏதேனும் ஒரு கனவின் நிஜமேந்திச் சொல்லுங்கள்
குட்டி மணியின் கண்கள்!!

டேவிட் டேவிட்  நில்லுங்கள்
சொல்லுங்கள்
என் கண்களில்
என் சாலையில் போகின்றவர்களின்
கண்களில்
அந்த சாயல்களில் ஏதேனும் ஒன்றுள்ளதா

-பொன்.காந்தன்

டேவிட் -இவர் ஒரு மூத்த காந்திய போராளி டேவிட் ஐயா என பின்னாளில் பலராலும் அறியப்பட்ட இவர் வெலிக்கடை படு கொலைகள் நடந்த வேளை சிறையில் இருந்த நேரடி சாட்சிகளில் ஒருவர் 91வயதில் கிளிநொச்சியில் சில ஆண்டுகளுக்கு முன் மறைந்தார்.

No comments:

Post a Comment

பிரசாதமே!!

  கொடிய போர் கண்ட நகரம் போலில்லை காலிழந்தவனுக்கு கால் முளைக்கும் உணர்ச்சியை கண்ணிழந்தவனுக்கு ஒளியூறும்  மனத்தை உண்டாக்கவில்லை யாரேனும் பறக்க...