கண்டாவளையில்
விமானக்குண்டுகளில்
நான் கொல்லப்பட்டிருந்தால்
எனது பிணம்
பனைகள் இடையே
வயல்கள் இடையே கிடந்திருக்கும்
எனது அருகே
ஒரு பெரிய உடமைப்பொதி
ஒரு பழைய சைக்கிள்
குடும்ப அட்டை காணி உறுதி
மாடுகளின் சடலங்களும் கிடந்திருக்கும்
மூங்கிலாற்றில்
பல் குழல் எறிகணை வீச்சில்
நான் மரணித்திருந்தால்
எனது பிணத்தில்
கால்களோ கைகளோ தலையோ
இல்லாதிருக்கலாம்
எனது அருகே
காலம்தப்பிய மழையில்
கலந்த குருதி
ஒரு சிறிய உடமைப்பொதி
குடும்ப அட்டை
ஒரு சிறிய மண் வெட்டி
ஒரு தறப்பால்
நிவாரண துண்டு
ஒரு பேனா
சில கொப்பித்தாள்கள்
நண்பர்களில் விம்மல்
வேறும் சில பிணங்கள் இருந்திருக்கும்
சுதந்திரபுரத்தில்
விமானக்குண்டுகள்
எறிகணை மழை
சன்னங்களில்
நான் வீழ்ந்திருந்தால்
எனது பிணம் உருக்குலைந்து
முறிந்து கிழிந்த தென்னைகளிடையே
பதுங்கு குழி வாசலில்
குருதி தெறித்தபடி கிடந்திருக்கும்
எனது பிணத்தின் அருகே
ஒரு சிறிய பொதி
யாரோ தந்த உணவு தட்டு
யார் யாரோ யாருக்காகவோ
இடும் ஓலங்கள்
ஓரிரு நாணயக்குற்றிகள்
ஏராளம் பிணங்கள்
ஆட்கள் உயிர்தப்பியோடிய
எரிந்த கிழிந்த கொட்டகைகள்
மரணம் மனிதர்களை துரத்தும் ஓசை
இழத்தலின் வார்த்தைகள்
ஒரு மண் வெட்டி இருந்திருக்கும்
பொக்கணையில் வலைஞர் மடத்தில்
இரட்டைவாய்க்காலில்
முள்ளிவாய்க்காலில்
உலகின் மோசமான குரூரர்கள்
விதைத்த கந்தக வெளியில்
நான் மரணித்திருப்பின்
எனது பிணம்
சிதறுண்ட குழந்தைகள்
கர்ப்பிணிகள்
முதியவர்கள் இடையே
தசைக்குவியலாய் கிடந்திருக்கும்
எனது பிணத்தருகே
உவர் படர்ந்த உணவுத்தட்டு
உருகிய பொம்மைகள்
குடும்ப அட்டைகள்
குருதிச் சேறு
சிவந்த மண்
சிவந்த கடதாசி
வாழ்க்கை முடியாத முகங்கள்
கனவு தேங்கிய விழிகள்
துப்பாக்கிகள்
உலக அதிகார வெறிகளின் மகிழ்ச்சி
ஆபத்பாந்தவர்களை
தேடி காத்திருந்து
ஏமாந்த நிலம் இருந்திருக்கும்
தொலைவில்
எனது பிணத்தின்
போஸ்மோட்டம் ரிப்போட்
ஒலிவ் மரங்களின் கீழ்
தயாரிக்கப்படிருக்கும்
அதை சுற்றி இலையான்களாய்
எவர் எவரோ நலன்கள்
மொய்த்தபடி இருக்கும்
No comments:
Post a Comment