அன்புள்ள அலெக்சாண்டர் கிரகம்பெல்
அழைப்பது கரணவாயிருந்து காங்கேசு
இங்குளோரெலாம் இயங்குவதெல்லாம்
அன்றுநீர் தந்த அற்புத படைப்பில்
நன்றுதான்
கனாவினில் வந்து கைகளை பற்றும்
கன்னியை அடைய
புறாவிலே கட்டி புன்னகை அனுப்ப
இடையிலே மறித்து
அறுத்துப்பொரித்து
உண்டேப்பம் விட்டால் என்னதான் முடிவு
வராத பதிலால் வதங்கி உள்ளம்
வாடிப்போயிருக்கும்
கொடாத வரமாய்
கொடுத்தீர் தொலைபேசி
நிண்டபடி நிறுத்தாமல்
கண்டபடி மணிக்கணக்காய்
வண்டவாளம் அத்தனையும்
வாயுழைய சொல்லி
தொண்டைகாய
தொடர்ந்துபேச காசின்றி
நிலுவையில்லையென
வலுவை அறிவிக்க
கலோ கலோ என்று
கத்தி நிறுத்துவதும்
தங்கள் உன்னத படைப்பின் ஒருகதை
சம்மந்தம் சாத்திரம் சாவீட்டு இரங்கல்
மந்திரம் மாந்தீரிகம் மளிகைகடை
கட்டையிலேற்றும்வரை
காவும் சவப்பெட்டிக்கடை
பழக்கடை பார்மசி உரக்கடை
உல்லாசவிடுதிகள் ஊர்கோயில்கள்
மதுக்கடை எதுக்கிலக்கமில்லை
ஏதோ ஒன்றை அழுத்த
எங்கோ போகிறது
மறுமுனையில் சங்கக்கடையோ சவாரி வண்டியோ
தங்கக்கடையோ தயிர்வண்டிலோதான்
கேட்டீரோ கிரகம்பெல்
பண்டைக்காலத்தில் ஓரிரண்டாய்
கண்டவரும் தொடாத கனவுப்பெட்டகமாய்
மண்டைபெருத்தோரிடம் மட்டும்
மணியடித்ததின்று ஊருப்பட்டதாகி
நல்லதங்காளின் பிள்ளைகள் போல
ஆறேழு அளவில்
ஆளுக்கொன்றாய் இருக்கிறது
இருந்த இடத்திலேயே எல்லாம் முடிக்க
படைத்த உங்கள் காரியத்தால்
சிலது கொளுத்த பன்றிகளாகி
கொலஸ்ரோல் தொந்தி வாதமென்று
அந்திம காலத்தையும் அழைக்குது
கண்டாவளையில் நின்று கண்டி என்றும்
கழிப்பறையில் இருந்து கொண்டு
கடைத்தெருவில் என்றும்
பெண்டாட்டியிடம் கொடுத்து
அலுவலாய் அவர் வெளியிலென்றும்
அண்டமா பொய்களை அவிழ்த்துவிட
வாய்க்குமும் படைப்பென்று
நினைத்தீரோ அப்போது
சித்திரைக்குப்பிறகு சீக்கிரம் சோதனை
பத்தரைவரையேனும் பிள்ளாய்
படித்திடு என்றால்
நித்திரையென்று
சாட்டுரைத்து தொட்டுத்திரைவிலக்கி
துளாவும் தொலைபேசியில்
பத்தரைக்குப்பின்னும் பலமணிநேரமாய்
படுத்தபடி கெட்டுத்தொலைகிறது
எங்கள் குலக்கொழுந்துகள்
கேட்டால் கூகுளில் தேடலாம்
குறுந்தொகை பாடலாம்
பாரும் கிரகம் பெல்
பாழ்படும் சீவியத்தை
நாலுபேரைப்போல் நானுமொரு
உரசும் தொலைபேசிவாங்கி
உடைப்பையில் செருகி
தடுமாறிகைபட்டு யாரோவொரு
சரசுவின் இலக்கத்துக்கு
ஐ லவ் யு ஸ்ரிக்கர்போய்
மறுகணமே வந்த மாயஇலக்கத்தை
அழுத்தி காதில்வைக்க
மூதேவி சனியன்தொடங்கி நாதாரி ஈறாக
நடுவீதியில் வைத்துன்னை
நார்நாராய் கிழிப்பேன் துவைப்பேன்வரை
மொழித்துவத்தின் உச்சத்தை
உண்டு அடைத்தது என் செவிகள்
எடுக்க எடுக்க எடுக்காத
எடுத்தாலும் வைக்காத
தவறவிட்ட அழைப்பும்
தவறாத அழைப்புமாய்
அடுத்தவர் இணைப்பிலென
அதிகம் பதிலுரைப்பதுமாய்
தொடருதும் படைப்பு
நன்று கிரகம்பெல்
விசுவாமித்திரர் முன்
ரதி ரம்மை ஊர்வசியின் கூட்டுக்கலவையாய்
தங்கள் கண்டுபிடிப்பை
வண்டு மலருக்கு அழைப்பெடுத்து
வரவாவென்று
சொண்டுக்குள் முனகும்
சொர்க்கமாய் ஆக்கினர் பாரும் நம்மாள்
No comments:
Post a Comment