நொந்து பெற்று நூறு கனவு சுமந்து
வந்துதித்த செல்லப்பிள்ளை எழுந்து
பந்தடித்து பாவப்பிள்ளைக்கடம்பிடித்துப்
பூனைப்பொந்து செய்து புங்கடி புளியடி
பூங்கன்றுக்குள் ஒளித்துப்பிடித்து களைத்து
புளுதிவாரியடித்து மேனி புரண்டெழுந்து
அங்கதம்பலசெய்து அழுதுசிரித்துமகிழ்ந்து
திங்களென திசையெலாம் ஒளிபரப்பமலர்ந்து
பிறையென மெல்ல மெல்ல வளர்ந்துநிதம்
பூபிஞ்சுகாயென புத்துணர்ச்சி தரும்படிபதம்
தொடும்படியாகத் துள்ளிப்பாய்ந்துநதியென
தூரம்பலகரைவரைகடந்து வெல்லும்படியாக
விளையும் பயிர்களுக்கிடையில் புலமைச்
சோதனையென குறுக்கிடு மொருபடை
கொக்கரித்து குஞ்சம்பலகட்டி கோதண்ட
கடிவாள கந்தர்வ வசிய வரம் சுமந்து
மந்திரக்கோல்பிடித்து மலைகடந்துபோக
இந்திரலோக இதம்பலவந்துகவ்விவளைத்து
சுந்தரப்புன்னகை பரப்பி சொர்க்கத்திலேற்றும்
இயந்திரத்தில் ஏறி இனித்தூங்காய் மகவே
என்றிடும் அசரீரி அனுதினம் கேட்கவைத்து
சந்திசந்தியாய் சாதனை மாணாக்கரையிட்டு
சாறுபிழிந்து கக்கரைப்பாகாய் பெற்றவருக்கு
எந்திரக்குழாயில் வந்துவிழுந்து பையிலாகி
பரவசமூட்டம் பண்டம்போல் பிள்ளைவளர
முதுகுத்தண்டு வலிக்க முன்னிரவுத்தூக்கம்வர
படிக்கச்சென்று களைத்த சோர்வுகண்ணிலெழ
பூனை குட்டிகாவி பட்டிதொட்டியெங்கும் பார்த்து
பத்திடத்தில் நின்றுகாத்து நிலையோடு சாய்ந்து
கொட்டாவிவிட்டுக்குந்தியிருந்து ரியூசன்விட்டகையோடு
இழுத்துவந்திரண்டு இடியப்பம் புட்டோ இடித்திறக்கி
வைரவர் மடையில் குவிந்திருக்கும் வடைமோதகம்
வாழைப்பழம் அவல்அமுதென இன்னபிறபோல
புலமைசம்பலுடன் சாம்பாறு புலமை கொத்துடன்
புலமைச்சத்தென புத்தகம் நூறு படைத்தும்
கடந்த பத்துவருசமாய் பட்டபாடுகளாய்வந்து
புத்தகக் கடைமுழுக்க புதையலாம் கிடக்கும்
வினாக்கொத்துகளை விடாயில்லா தொண்டையிலும்
விட்டுத்துளாவி விடைகேட்டுகேட்டு விசர்ஏத்தி
வேள்வியில் விட்ட ஜந்துகளுக்கு இன்றுவந்தது
எல்லாவற்றுக்கும் ஒரு முடிவு
இதையின்றுபலரும் காவடியாக்கி கரகமாய்ச்சுமந்து
புளுகடிச்சாமிக்கு புகழாய்ப்படைப்பினும் நாளை
மறுபடி உலகைச்சுழற்றும் மாமனிதர்பலர் இன்றுதோற்றனர்
இனியல்லவே என்பதேயுண்மை!
No comments:
Post a Comment