எனக்கு
இவரின் நினைவுகளை பகிர்ந்துகொள்ள ஒரு பொருத்தமான நாள் இதுவாக இருக்குமென்று எண்ணுகின்றேன்.முகநூலின் பதிவுகளை தட்டி செல்கின்றபோது இன்று பாலகுமாரன் அண்ணனின் பிறந்தநாள் என்பதை பார்க்க கிடைத்தது.நல்லது. இன்றுதான் முதன்முதலில் அவர் இன்றுதான் பிறந்தார் என்பதை அறிகின்றேன்.அந்த அளவுக்கு அவர் எளிமையான மனிதர்.போராட்ட காலத்தில் நிறைந்த வாசிப்புடன் உலகப்பார்வையுடன் இருந்தவர்.எவரையும் மனம் திறந்து பாராட்டத்தயங்காதவர்.இறுதிப்போரில் மக்களோடு மக்களாக இடம்பெயர்ந்து மக்கள் பட்ட எல்லாத்துன்பங்களையும் காயங்களையும் அவர் அனுபவித்தார்.என் இதுவரையான கலை எழுத்துப்பயணத்தில் பாலகுமாரன் அண்ணனின் வாயால் கிடைத்த பாராட்டு எனக்கு மனதுக்கு உற்சாகமாக இருப்பது.முள்ளிவாய்க்காலுக்கு முன்னதான இடப்பெயர்வுகளின் மக்கள் சோர்ந்துபோகாமல் பரப்புரைகளில் அவர் சொல்லும் எளிமையான பேச்சுக்கள் மறக்க முடியாதவை.புத்திஜீவிகளுக்கும் பாமரனுக்கும் பிடித்தமான மனிதராக அவர் எம்மோடு வாழ்ந்தார்.அவர் பேச்சுக்கலை சிறப்பானது.அன்ரன் பாலசிங்கம் அண்ணனின் பேச்சும் பாலகுமாரன் அண்ணனின் பேச்சும் போர்க்காலத்தில் மக்களுக்கு குளுக்கோஸ் ஏத்துவது போன்றது.எத்தனை துன்பங்கள் துயர்கள் இழப்புக்கள் வேலைகள் இருந்தாலும் இந்த இருவரின் பேச்சுக்கள் எங்காவது கேட்கும்போது அந்த இடத்தை நோக்கி பாமரனும் புத்திஜீவியும் செல்வதை நான் பார்த்திருக்கின்றேன்.
புலிகளின்
குரலில் நான் பணியாற்றிய காலங்களில் குறிப்பாக மிலேனியத்தில் ஒரு அரிய சந்தர்ப்பம் கிடைத்தது.பொறுப்பாளராக ஜவான் அரசியல் அரங்கம் என்ற ஒரு நிகழ்ச்சியை வானொலியில் செய்யும்படியும் அதற்கு பாலகுமாரன் அண்ணன் பிரதியை பெற்றுக்கொள்ளலாம் என தெரிவித்து அதில்
எனக்கும் சந்தர்ப்பம் அளிக்கப்பட்டது.அதனால் பலதடவைகள் வாரத்தில் ஒரு தடவை புதுக்குடியிருப்பில் இருந்த பாலகுமாரன்
அண்ணனின் வீட்டுக்கு சென்று அந்த பிரதிகளை கொண்டு வந்து வானொலியில் வாசித்தேன்.அவர் பிரதிகளை கணனியில் அல்ல கைகளாலேயே எழுதித்தருவார்.ஆறேழு பக்கம் இருக்கும்.அவர் கையெழுத்து இப்போதும் நினைவு இருக்கின்றது.அதை பார்த்து வாசிக்க பயிற்சி எடுக்கவேண்டும்.நிறுத்தங்கள் ஏற்றங்களும் இறங்கங்களும் அதிகம் இருக்கும்.குரலை அதற்கு ஏற்றாற்போல் வாசித்து பிரதியின் உணர்வை வெளிக்கொண்டு வரவேண்டுமென்பதில் அவர் அக்கறையுடையவர்.என்னை தனக்கு முன் இருத்தி வாசிக்க சொல்வார்.இடையிடையே ஏற்ற இறக்கங்கள் நிறுத்தங்களில் திருத்தம் சொல்வார்.பாலகுமாரனின் பிரதிகளை சத்தியா மிக லாவகமாக வாசிப்பார்.நானும் வாசித்தேன் அரசியல் அரங்கத்துக்காக அந்த வாசிப்பின் மூலம் உலக ஒழுங்கு மாற்றங்களை உணரமுடிந்தது.அவர் வீட்டுக்கு போகும் சந்தர்ப்பங்களில் மக்கள் என்ன சொல்கிறார்கள் என கேட்பார்.அரசியல்
நிலைமைகள் எப்படி இருக்கிறது எனக் கேட்பார்.அவருக்கு சொல்லும் அளவில் எனக்கு அறிவு இல்லை.இருப்பினும் எனக்கு பட்டதை சொல்லியிருக்கின்றேன்.ஒரு சிரிப்பொன்றை சிரிப்பார்.அந்தச் சிரிப்பின் அர்த்தம் எனக்குப்புரியும்.ஒரு சந்தர்ப்பத்தில் ஏதோ கதையில் எல்லாம் முடிந்துவிட்டது இனி ஒன்றுமில்லை என்றார்.அது கிட்டத்தட்ட 2002 என நினைக்கின்றேன்.அவர்
போராட்டம் பற்றி ஏதாவது முன்னுணர்ந்திருக்கக் கூடும்.கிட்டத்தட்ட அவருடைய கணிப்புக்கள் பின்னாளில் சரியாகவே அமைந்திருந்தது.தலைவர் பிரபாகரனுக்கு சரியான அரசியல் உலக கள நிலைமைகளை பலர்
எடுத்துச்செல்வதில்லை
என்றும் மக்களின் உண்மையான மனப்போக்கை கருத்துக்களை நிலைமைகளை எடுத்துச்செல்வதில்லை என்றும் கீழ் மட்ட பொறுப்பாளர்கள் அந்த குறைபாடுகளுக்கு காரணமாக இருக்கிறார்கள் என்ற மனக்கவலை பாலகுமாரனுக்கு உள்ளார்ந்தமாய் இருந்தது.பாலகுமாரன் மக்களை நேசித்த உண்மையான மனிதர்.அதனால் இறுதிவரை மக்களை பிரிந்து செல்லாது இருந்தார்.
முன்னைய
ஒரு சந்தர்ப்பத்தில் ஒரு இசைப்பேழை வெளியீட்டு விழா போரிடும் வல்லமை சேர்ப்போம் என்ற மருத்துவ போராளிகள் தொடர்பான அந்த இசைப்பேழைக்கு நான் முன்னுரை
எழுதி வாசித்திருந்தேன்.வெளியீட்டு விழா ஒரு இரவு நடைபெற்றது.மட்டுபடுத்த பார்வையாளர்களை அவ்விழா கொண்டிருந்தது.பாதுக்காப்பு பலமாக இருந்தது.ஆறாவது ஏழாவது வரிசையில் நாங்கள் பாடலாசிரியர்கள் பாடகர்கள் கலைஞர்கள் இருந்தார்கள்.முன்வரிசையில் தலைவர் பிரபாகரன் மற்றும் தளபதிகள் அமர்ந்திருந்தார்கள்.அந்த விழாவில் பாலகுமாரன் அண்ணன்தான் மதிப்பீட்டு உரை.இசைப்பேழையை பற்றி விரிவாக பேசினார்.அதில் எனது குரலையும் முன்னுரையையும் பற்றி தலைவர் பிரபாகரன் முன்னிலையில் ஐந்தாறு நிமிடங்களுக்கு மேல் சிலாகித்துப் புகழ்ந்துபேசினார்.அந்த அளவுக்கு என்னை அவர் புகழ்ந்து பேச வேண்டிய அவசியம் கிடையாது.அந்த அளவுக்கு என்னிடம் எதுவும் இல்லை.ஆனால் என்னை வளர்த்து விடவேண்டும் என்னைபற்றியும் இயக்கத்தின் தலைமை அறிந்திருக்கட்டும் அதனால் நான் சிறப்பாக வளரக்கூடிய வாய்ப்பு அமையும் என்பதுதான் அந்த மனிதரின் நோக்கம்.அவர் யாரையும் மனம்திறந்து பாராட்டத்தயங்காதவர்.போராட்ட காலத்தில் அநேகமான நூல் வெளியீடுகளில் பாலகுமாரனின் பெயர் இருக்கும்.ஏனெனில் அந்த எளிய மனிதரின் பாராட்டை பெறவதற்கு எல்லோருக்கும் பேரவா இருந்தது.அவரை நாம் என்றும் பெருமைபடுத்துவோம்.
No comments:
Post a Comment