முதலில் சிலவற்றை எழுத வேண்டும் என்று நினைத்தேன்.எதை எழுதுவது என்று சற்று சிந்தித்தேன்.ஊடலாக இருந்த திரு.சம்பந்தனும் திரு.விக்னேஸ்வரனும் கூடலாக இருப்பதை பற்றி பலரும் தலைப்புச்செய்திகள் இட்டிருந்தனர்.பிறகு கூடியதை பற்றியும் சிலபலர் சிலாகிக்க தொடங்கியுள்ளனர்.பத்திகளையும் விரிக்க உள்ளனர்.எனக்கென்னவோ இப்போதைக்கு இதை விட டிராபிக் ராமசாமி படம் பார்க்கலாம் போல இருந்தது.ஒரு இறுவட்டை வாங்கி குந்தினேன்.
முதலில் டிராபிக் ராமசாமி என்ற மனிதரை பற்றி ஒரு படத்தை எடுத்ததற்காக நான் எங்கோ ஒரு மூலையில் இருந்து தென்னிந்திய சினிமா படக்குழுவிற்கு நன்றி சொல்கிறேன்.
படமாக பார்;ப்பதற்கு முன் டிராபிக் இராமசாமியை பற்றி சற்று கேள்விப்பட்டுள்ளேன்.இவர் ஒரு பொதுநல ஆர்வலர்.அநீதி கண்டு கொண்டு கொதிப்பவர்.அதற்காக தனிமனிதனாக போராடுகின்றவர்.நீதி மன்றத்திலும் தான் தொடுக்கும் பொது நல வழக்குகளில் தனக்காக வக்கீல்களை வைத்துக்கொள்ளாமல் தானே வாதாடுகின்றவர்.சென்னையில் போக்குவரத்து நெரிசலில் மக்கள் படும் அவதிகண்டு தானே போக்குவரத்து பொலிசாரின் கடமையை கையில் தூக்கி டிராபிக்இராமசாமி ஆனவர்.இவ்வாறான மனிதர்கள் இந்தச்சமுகத்துக்கு தேவைப்படுகின்றனர்.
தன் சனத்துக்கு இருக்கக்கூடிய பிரச்சனைகளுக்காக போராடுவதற்கு உண்மையில் அரசியல்வாதியாகவோ அவர்கள் தமிழில் சொன்னால் எம் எல் ஏ ஆகவோ எங்கள் தமிழில் சொன்னால் எம்பியாகவோ மாகாண சபை உறுப்பினர்களாவோ இருக்க வேண்டிய தேவையே கிடையாது.அநீதி கண்டு கொதிக்கும் மனமும் மற்றவர்க்காய் பாடுபடும் குணமும் இருந்தால் போதுமானது.இந்திய அரசியலைப்போலவே ஈழத்தமிழர்களின் அரசியலும் பணமுழைக்கும் ஒரு வழியாக மாறிவிட்டது.அரசியல் என்பது வாரிசுகளையும் களம் இறக்கி பதவிகளின் வழி பயணம் செய்யும் போதையாகிவிட்டது.
தங்களால் தெரிவு செய்யப்படும் மக்கள் பிரநிதிகள் சமுகத்தில் அரங்கேறும் பின்னணியில் இருப்பதும்.வன்முறைகளுக்கும் பிரிவினை வாதங்களுக்கும் சுரண்டல்களுக்கும் ஆதரவாக அரசியல் வாதிகள் இருப்பதும்.டிராபிக் இராமசாமியின் கோபம்.அவர் அநீதி செய்யும் யாரையும் விட்டுவைக்க வைக்கவில்லை.காவல்துறை எம்பி மந்திரிகள் எல்லாத்தரப்பின் மீதும் அவரது கேள்விகளும் வழக்குகளும் பாய்கின்றது.
ஈழத்தமிழர்களைப்பொறுத்தவரையில் 2009வரை அவர்களுக்காக போராட ஒரு அமைப்பு இருந்தது.இன்றைக்கு ஈழத்தமிழர்களுக்காக போராட ஒரு அமைப்பு இல்லை என்பதையே மக்களின் தன்னெழுச்சி போராட்டங்கள் காட்டுகின்றன.கேப்பாபிலவு போராட்டம் காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் போராட்டம்.இரணைதீவு போராட்டம்.இவையெல்லாம் எனக்கு டிராபிக் இராமசாமியின் தன்னெழுச்சியாகவே படுகின்றது.தங்கள் பிரச்சனையை மக்கள் ஐக்கிய நாடுகள் சபை போய் முறையிடுகின்ற அளவுக்கு அவர்கள் அரசியல் தலமைத்துவ வெற்றிடம் இருப்பதை உணர்த்துகின்றது.அப்படியெனில் அரசியல்வாதிகள் என்ன செய்கின்றார்கள் என்ற கேள்வி இயல்பாகவே எழுக்கூடியதுதான்.
டிராபிக்இராமசாமி படத்தை பாருங்கள் இந்திய அரசியல்வாதிகள் மக்கள் தண்ணிக்கு துன்பப்படுகின்றபோது தங்கள் தேவைகளுக்கு துன்பப்படுகின்றபோது என்ன செய்கிறார்கள் என்பதை சொல்லும்.ஈழத்திலும் பெரும்போரில் எல்லாவற்றையும் இழந்த மக்கள் மத்தியில் அவர்களின் வாக்குகளை பெற்ற அரசியல்வாதிகள் என்ன செய்துகொண்டிருக்கின்றார்கள் என்பதை நுன்ணியதாக ஆராய்ந்தால் அதிர்;ச்சிகரமானதும் அருவருக்கத்தக்கதுமான பல மூலக்கதைகள் கிளைக்கதைகள் கிடைக்கும்.
ஈழத்தில் குறும்படம் முழுநீளப்படம் எடுக்க நினைகின்றசிலர் கதைகளையும் நாயகர்களையும் தென்னிந்திய திரையின் மாஸ் கீறோக்கள் என்று சொல்லப்படுகின்றவர்களின் விம்பங்களை வைத்துத்தேடுகின்றார்கள்.சிலர் அதை விலக்கி முயல்கிறார்கள்.அவர்கள் வெற்றிகளை தொடவேண்டும் என்பது என்விருப்பம்.தென்னிந்தியாவுக்கும் ஈழத்துக்குமிடையிலான கலை பண்பாட்டு தொடர்பும் நீண்ட பாரம்பரியம் கொண்டது.தாக்கங்களும் தவிர்க்கமுடியாதது.ஈழத்து மொழி தனித்துவமானது.இலக்கியம் தனித்துவமானது.தென்னிந்திய சினிமா மொழியை எங்கள் கதைகளுக்குள் ஒட்டவைப்பது கடினமானது.தென்னிந்திய சினிமா என்பது அல்லது இந்திய சினிமா என்பது பலவேறு மாநிலம் இனங்களின் வட்டார வழக்கின் தொகுப்பாகவே இருக்கின்றது.அதை ஈழத்து கதைகளுக்குள் கரைய வைப்பது தன்னடை இழந்த கதையாய் முடியும்.நாம் ஈழம் கற்றுக்கொள்ளவேண்டியது திரைத்தொழில் நுட்பம்.இசைத்தொழில்நுட்பம்.நடன தொழில்நுட்பம்.இந்த ஆதங்கம் ஏனெனில் இன்று வருகின்ற இந்திய குறிப்பாக தென்னிந்திய படங்கள் பலதை பார்க்கும்போது எங்களிடம் இப்படி பல கதைகள் இருக்கின்றனவே எங்கள் சமுகத்திலும் இப்படி பல கரக்டர்கள் உள்ளனவே என்ற ஆதங்கம் தவிப்பு ஏற்படுகின்றது.டிராபிக்இராமசாமி படத்தை பார்க்கும்போது அவ்வாறான உணர்வுகளே ஏற்படுகின்றது.
இன்றுவருகின்ற பல படங்களில் மாஸ் கீறோக்கள் இல்லை.நான் சொல்வது பந்தயக்குதிரைகளாக காசு உழைக்கும் எந்திரங்களாக ஆக்கப்பட்டுள்ள கீறோக்களைப்பற்றி.வெறும் மிகச்சாதாரணமாக பறட்டை தலையுடன் வந்து நாயகனும் எண்ணெய் வடிந்த முகத்துடன் வந்து நாயகியும் சில மணிநேரம் அப்படி இருத்தி வைத்து நினைத்ததை செய்துவிட்டு போய்விடுகின்றார்கள்.இப்பொழுது தென்னிந்திய சினிமா கதைகளை தேட ஆரம்பித்திருக்கின்றது.கிராமங்களில் நகரங்களில் பலரால் தொடப்படாத ஆனால் தொடவேண்டிய உணர்ச்சிகரமான மனதோடு ஒட்டக்கூடிய இது எங்களின் கதை என பார்க்கிறவன் நினைக்கக்கூடிய கதைகளை தேடி எடுகின்றார்கள். ஒரு மருத்துவமனையின் வெளிநோயாளர் பிரிவு என்று வைத்துக்கொள்வோமே அந்த முன் மண்டபத்தில்வைத்தே 'சில சமயங்களில்'' என்ற படத்தை எடுத்து முடித்துள்ளார்கள்.பிரகாஸ்ராஜ் உள்ளிட்டவர்களின் நடிப்பில் அந்த விழிப்புணர்வு படம் இறுதிவரை மனதை தொட்டுக்கொண்டே இருக்கும்.எந்த அடிதடி வாள்வெட்டு பஞ் டயலாக்ஸ் குத்தாட்டங்கள் இன்னுமின்னும் எதுவும் கிடையாது.பாடல் கூட கிடையாது என்று வைத்துக்கொள்ளுங்கள்.மெர்குரி என்றொரு படம் வசனமே கிடையாது பிரபுதேவா உள்ளிட்டவர்கள் நடிக்கின்றார்கள்.தயவு செய்து பாருங்கள் படங்களை நாங்கள் எடுக்கவேண்டிய பலகதைகள் திரையில் தெரிகின்றன.எனக்கு எங்கள் ஊர்களில் இப்பொழுது சாமத்தியவீடுகளில் கலியாண வீடுகளில் கடைசியாக பாட்டைப்போட்டுவிட்டு எங்கள் பையன்கள் ஆடுகின்ற ஆட்டத்தை பார்க்கின்றபோது பிரமிப்பாகவே இருக்கும் இவர்கள் எங்கு இதை கற்றுக்கொள்ளுகிறார்கள் என்ற ஆச்சரியமாக இருக்கும்.சிலருக்கு சினத்தை ஊட்டும்.ஆனால் இந்த பையன்கள் சரியாக வழிப்படுத்தப்பட்டால் எங்கள் மண்ணிலும் ஏராளம் பிரபுதேவாக்கள் பத்மினிகன் பானுப்பிரியாக்கள் மின்னுவார்கள்.எனக்குள்ள கவலை எல்லாம் இப்படி ஒரு வயது மட்டும் இப்படி ஆடிவிட்டு பிறகுகுடும்பம் பிள்ளைகள் என்று வந்து பிறகு இவர்கள் இந்த நினைவுகளுடன் மட்டும் வாழ்க்கை முடிந்துவிடும் என்பதுதான்.
டிராபிக் இராமசாமியோடு நான் சொல்லவந்தது.சாவித்திரியை பற்றி டிராபிக்ராமசாமி சினிமா வெளியில் தேடிய உண்மைக்கதை. 'நடிகையர் திலகம்'' சாவித்திரியை வைத்து எடுக்கப்பட்ட சினிமா சினிமாவுக்குள் தேடிய உண்மைக்கதை.சாவித்திரி என்ற நடிகையின் சினிமா வாழ்க்கை அதனோடு பிணைந்திருந்த தனிப்பட்ட வாழ்க்கை உணர்வுகள் அவரின் முடிவு இதுதான் கதை.சினிமாவை கட்டியாண்ட சாவித்திரி என்ற பெரும் நடிகையின் வாழ்க்கையை சினிமா படமாக்கியது எதிர்கால திரைத்துறைக்கும் கலைஞர்களுக்கும் பாடம்.சிவாஜி கணேசனை எவ்வாறு பார்க்கின்றோமா அந்த அளவுக்கு நடிகைகளில் சாவித்திரி பெரும் நடிகை.அழகி.காதல் மன்னன் ஜெனிமி கணேசனின் காதலில் கரைந்தவர்.சாவித்திரியின் காதல் சாவித்திரியின் தந்தை பற்றிய ஏக்கம்.சாவித்திரியின் கருணையுள்ளம்.சாவித்திரியின் ஏமாற்றங்கள்.சாவித்திரியின் துயரமான முடிவு படம் இவற்றை வைத்து எடுக்கப்பட்டுள்ளது.நான் நினைக்கவில்லை.கீர்த்திசுரேஸ் அந்த அளவுக்கு சாவித்திரியின் பாத்திரத்தை வெளிப்படுத்துவார் என கீர்த்திசுரேஸ் தன்னை சிறந்த நடிகையென காட்டியுள்ளார்.நடிகையர் திலகம் படம் உங்களுக்கு ஒரு நல்ல கலானுபவத்தை நிச்சயம் தரும்.அண்மைக்கால தமிழ்ச்சினிமாவில் நாயகிகளை மட்டுமே பிரதானமாகக்கொண்டு பின்னப்பட்ட கதைகள் வெளிப்படுகின்றன.நல்லது.சோடைபோகாதபடி நடிகைகள் நடித்து களை கட்டுகின்றார்கள். 'கேணி' படத்தில் சொல்வதபோல பெண் என்பவள் அடக்கப்பட்ட சக்தி அவன் தன்னை உணர்ந்தால் வெடித்தெழும் பிரவாகத்தின் முன்னால் யாரும் நிற்க முடியாது என்பதாக நாயகிகளும் நடிப்பும் அமைகின்றது.
கேணி படம் ஒரு கிணத்தை பற்றிய கதை.தமிழ்நாடு கேரள எல்லையில் ஒரு கிராமத்தில் உள்ள கிணற்றுக்கு நிகழ்ந்த துயரம்.தண்ணீருக்கான போராட்டம்.போராட்டத்தை நடத்ததுகின்றவள் இந்திரா என்ற பெண்.இதில் அவள் சந்திக்கும் அரச அதிகாரிகள் அரசியல்வாதிகள் காவல்துறையின் சமுக விரோத எண்ணங்கள் செயல்கள்.இதற்கெதிரான போராட்டம் இதுவே படம்.கேணியும் பார்க்கவேண்டிய படங்களில் ஒன்றே.அண்மைக்காலமாக சினிமா ஊடகத்துறைக்கு சமுகவலைத்தளங்களுக்கு முன்னுரிமை கொடுத்தும் படங்களை படைக்கின்றன.ஊடவியலாளராக குறிப்பாக படப்பிடிப்பாளராக தொகுப்பாளராக என்று அவையே பிரதான பாத்திரங்களாகவும் தோன்றுகின்றன. 'ரண்பேபி ரண்' உள்ளிட்ட பல படங்களில் ஊடகவியலாளர்கள் பாத்திரங்களாகியுள்ளனர். கேணியிலும் ஊடவியலாளர்கள் தேடுகின்ற கதையே இந்திரா என்ற பாத்திரத்தை மையப்படுத்திய கிணற்றுக்கதை.அரசியல்வாதிகளின் அறிக்கைகளுக்காவும் அவர்களின் படங்களுக்காகவும் காத்துக்கொண்டிராமல்.சமுகத்தில் இருக்கின்ற இந்திரா போன்ற டிராபிக்இராமசாமி போன்ற தொண்டன் படத்தில்வரும் அவசர ஊர்தி சாரதி போன்ற மனிதர்களை தேடுமாறும் ஊடகங்களை சினிமாவின் புதிய கருத்துக்கள் கோருகின்றன. 'ஒரு யூத காதல் கதை' 'பரத் எனும் நான'; 'அப்பாவுக்கு கல்யாணம்' 'யார் இவன்' 'எதிர்மறை' 'பாஸ்கர் ஒரு ராஸ்கல்' 'தியா' 'காலா' 'அமோலி' 'யாடின்' 'மாயவன்' 'காளி' 'இரும்புத்திரை'
சாகவரத்தை நோக்கிய அறிவியல்.உளவியல் நோய்கள்.நில உரிமை நீர் பிரச்சனை தொன்மத்தை தேடுதல் என பல பரிமாணங்களில் சினிமா தேடவிளைவது ஆரோக்கியமானது.
பெரிதாய் சாதிக்க பிரபாகரன்தான் இல்லை.குறைந்தது டிராபிக்இராமசாமிகளாவது இன்று எங்களுக்கு கிடைப்பார்களா!
No comments:
Post a Comment