Tuesday, October 23, 2018

பொதியில் உள்ளது போதாதென்றால் திருப்பி அனுப்புகிற தெனாவெட்டு இப்போதில்லை-தியின் கதை,




கவனம் என்கிறது காலம்
இனிமேல் திலீபனாய் ஈகம் செய்ய எவருமில்லை
அவன் நினைவை சுமந்து
உயிரைத்தூவி விடுதலை உழவு செய்யவும் எவருமில்லை
வெடித்துச்சிதறி விடிவை எழுத மில்லர்களும் இல்லை
மேனியுதிரும் மேகங்களும் இல்லை
எச்சங்களே என்ன செய்வதாய் உத்தேசம்
என்றோர் அசரீரி அடிக்கடி கேட்கிறது
இருளைக்கலைக்கும் சூரியர்கள்
கைக்குள்ளும் காலுக்குள்ளும் இடறுப்பட
கவனியாது கிடந்தவர்களுக்கு
இனி சாபத்தை தவிர வேறேதும் சித்திக்காது
அதனால் கவனம் என்கிறது காலம்
யுகபுருசர்களை வாடகைத்தாய் வைத்து
ஒரு பொழுதும் பெற்றெடுத்தல் முடியாது
செயற்கை முறையிலும்
ஒருபோதும் சிறுத்தைகள் சீறி
காடு மிரளாது
கூடுவிட்டு கூடுபாயும் வித்தையிலும்
விடுதலையை விரைவாக்க முடியாது
தேடுவாரற்று கிடக்கிறது
பல மனங்களில் நேற்றைய நினைவு
சுள்ளியை காட்டியே
சுதந்திரத்தை பறிக்கும் அளவில்
ஒல்லியாய் போயிருக்கிறது உள்ளத்தில் தினவு
ஓங்;கி அடித்தாலும் எழும்பாது கிடக்கும்
ஓர்மத்தை வைத்து
கஞ்சிபோதும் இதுக்கு என கணக்கிடுகிறது கபளீகரம்
பல்லுடைந்து படுத்திருப்பதால்
பணிசோடு மட்டும் திருப்திபடுத்தலாமென
உருவிகள் திட்டமிடுகின்றன
அதனால் கவனம் என்கிறது காலம்
பொதியில் உள்ளது போதா தென்றால்
திருப்பி அனுப்புகிற தெனாவெட்டு இப்போதில்லை
நக்கி என்றாலும் நாக்கு நனைப்போமென
எண்ணுகிறது இளவுக்குணம்
கட்டைவேலியில் கருக்கு மட்டை விழுந்தாலே
கலக்கி அடிச்சு காலரா வரும் முன்பு காலிக்கு
குளவி சுட்டானில் நாங்கள் கொக்கு சுட்டாலே
தெற்கில் பாதுகாப்பில் ஓட்டையென பத்திரிகைள் பதறும்
நாவற்குழிக்கப்பால் மாடு சாய்த்துக்கொண்டுபோக
ஆக மிஞ்சினால்
பாவம் பார்த்து பலாலிக்கு வருவோமென்றது பாரதம்
கழுத்துறை கம்பகாவின் ஆயுள்ரேகையெல்லாம்
விசுவடுமடுச்சாத்திரியின் விளம்பலில்தான் அப்போது
ஈதெல்லாம் இப்போதெடுத்துரைத்தால்
கேலியாயிருக்கும் பலருக்கு
உருக்குப்பாய்ந்திருந்தோம் ஓர்நாள்
நெருப்பு தணிந்ததாய் முடிவுக்கு வந்து
முதுகில் ஏறியிருக்கிறது மூதேவிகள்
பதவிகளுக்காகவே பாத காணிக்கையாக
எங்கள் பரம்பரையை ஈடுவைக்கின்றன எங்களில் சில
கவனம் என்கிறது காலம்
உதவிக்கு உன்னதத்துக்காக உயிர்கொடுக்க இன்று
திலீபன்போல எவருமில்லை
மலைகளை எதிர்த்து 
மணலாற்றில் நின்று மானம்காக்க
ஒரு மன்னனுமில்லை

No comments:

Post a Comment

பிரசாதமே!!

  கொடிய போர் கண்ட நகரம் போலில்லை காலிழந்தவனுக்கு கால் முளைக்கும் உணர்ச்சியை கண்ணிழந்தவனுக்கு ஒளியூறும்  மனத்தை உண்டாக்கவில்லை யாரேனும் பறக்க...