Saturday, October 20, 2018

வள்ளல் யாரடா-பொன்.காந்தன்




மம்மல் வேளை
தும்மல் நினைப்பில்
தொலையாதிருக்கும்
தொடரும் பால்ய
நண்பர் அழைப்பில்
கொடியில் கிடந்ததை
கொழுவிக் கொண்டு
நழுவல் சிரிப்பொன்றை
கதவடியில் தழுவி
கறுவல் பார்வையை
கண்டும் காணாமல்
கள்ளப்பூனையாய்
படலை போய்
பாயந்தேறி உந்துருளி
ஊர் கடந்து
உள்ளொழுங்கை
சில நுழைந்து
வயல் வரம்பில் ஓடி
வடிவேலர் பதி
பின் வீதி ஊடறுத்து
அங்காங்கு கண்ணோடி
ஆங்கொரு தார்வீதி
அவசரமாய் கடந்து
அக்கடை முன் நிறுத்தி
மிக்சர் கடலை பருப்பு
சரைகள் சில வாங்கி
மீண்டும் முறுக்கி
முன்னிரவு முளைகொள்ளும்
மோகனப் பொழுதொன்றில்
நின்றும் குந்தியும்
முகம் தெரியா கறுப்பில்
மன்று திறந்து
மாநாடு பறையும்
கள் அருந்தும்
காமதேனு முன்
நாமுமோர் ஓரம்
நல்ல பாம்பு
கண்டங்கறுவலை அண்டாதிருக்க
மண் பட நிலத்தில்
மடக்கி கால் நீட்டி
ஏற்ற சுகத்தில்
கையூன்றி
மனம் கிளுகிளுக்க
ஒற்றைப் பனையான்
என்று நண்பன்
எடுத்து வந்த கள்
ஐந்தாய் பகிர்ந்தூற்றி
தம்பி மனேஜர் தங்கமென்று
தரச்சான்று கொடுத்து
மெள்ள கள் மேனிபாய
எழும் ஓர் வாயில்
இளையராசா பாடல்
இன்னும் அதற்கான
கவிநயப்புக்கள்
அத்தோடு நிற்கா
உசுப்பேறி வரும்
உள்ளுறங்கும்
இந்த மண் எங்களின் சொந்தமண்
எங்கள் தோழர்களிள் புதைகுழியில்
குண்டடித்த கதைகள்
பண்டடித்த சரித்திரங்கள்
இன்னும் நீளும்
வண்டொன்று வந்துவீழ
சுண்டி விட்டு
இன்னும் மண்ட
கண்டுகளாய் முன்
காதல் போதைதந்த
மங்கையரின் கதைகள்
கைபிடித்தவளின்
கைபேசி அழைப்பு வர
சந்திப்பொன்றில்
அடுத்த நிமிடம் வருவேனென
அவசர பொய்யொன்று
தள்ளாடும் சிறு வெறியில்
தத்துவ வெள்ளம்
தாம் கண்ட சோகங்கள்
அரசியல் ஆத்திரங்கள்
அடுத்து வரும் தேர்தலுக்கு
அடுக்கி வரும்
பொய்கள்மேல் கண்டனங்கள்
மற்றும் வன்னேரி கண்டாவளை
வடமராட்சி கள் சுவை பற்றி
ஒரு சொல்லாடல்
தென்னியன் குளத்து கள்
தேன் என்ற நினைவு மீட்டல்
அமெரிக்கா வரை ஓர் அலசல்
அடித்த கள் வெறியில்
ஒபாமா டிரம் பற்றி ஒப்பீடு
ஓபிஸ் சசி பற்றி
ஓர் உலாவல்
கமல் ரஜனி பற்றி
ஓர் கலைச் சாரல்
ஒன்றாரண்டா
உள்ளிருந்துபேசும்
கள்ளிற்கு
சொல் விளம்பியென்றும்
வேறு பெயரும் உண்டாமே
நன்று
அன்று இந்த கள்ளினை கண்டறிந்து
இன்று மரத்தடியில்
மம்மலுக்குள்
மன்று திறக்க ஈந்த
வள்ளல் யாரடா

No comments:

Post a Comment

பிரசாதமே!!

  கொடிய போர் கண்ட நகரம் போலில்லை காலிழந்தவனுக்கு கால் முளைக்கும் உணர்ச்சியை கண்ணிழந்தவனுக்கு ஒளியூறும்  மனத்தை உண்டாக்கவில்லை யாரேனும் பறக்க...