Saturday, October 20, 2018

வேலிதாண்டு-பொன்.காந்தன்




சப்பறம்
அப்புறம் தேரென்று
ஓர் ஆறுதல்
ஆறுமுகா
நாளை உன் தேர்
நல்லூரானே
அது உன்
நடமாடும் சேவையெனவே
அடியேனின் எண்ணம்
பதிகம் படியேன் யான்
பாற்சொம்பும் ஏந்தேன்
பாம்பாட்டம் போடேன்
அங்கங்கு குத்தி
காவடியும் ஆடேன்
பதுக்கியுள்ள பவுணோடும்
இரவுக்கவுணோடும் கூட
தேரேறும் உன் திருவெள்ளத்தில்
நசிந்துருகும் கெடுகனவும் சிலபேர்க்குண்டு
சொப்பன சுந்தரிப்பாட்டில்
கற்பனையில் மிதப்போரிடையே
பத்தோடு பதினொன்றாய்
பக்தனாகப்போவதில்லை
பஞ்சி என்றெண்ணாதீர்
பரமபக்தன் யான்
கந்தா
அந்தா இந்தாவென காத்திருந்த எந்தப்பிரச்சனைக்கும் இதுவரை தீர்வில்லை
வேலொடு நீ வினையறுப்பாய் என்றால்
தம்பி வாளொடு தெருவில் வகுந்திடுவன் என்கிறான்
வள்ளியை வசம்கொள்ள உருமாறிய பாணியில்
உன்னிடம் வருகிறேன்
என் மனக்கிடக்கையை
சொல் என்கிறீரா
கவனம் கடவுளே ஆவா
கந்தபுராண கலாசாரபூமி
இத்துப்போயிருக்கிறது
குத்து வெட்டு
உம்மை போட்டுத்தள்ளிவிட்டு போய்க்கொண்டேயிருப்பார்கள்
தேவசேனாதிபதியே
வருவாய் வண்ணத் தேரேறி
என் மகஜர் கொஞ்சம் நீளம்
வடக்கு வீதியில் வாங்கிக்கொள்ளும்
காணாமல் ஆக்கப்பட்ட
கனகலச்சுமியின்
கடைக்குட்டியை எங்கேனும் கண்டீரா
வீணாகப்போகிறது காலம்
தாய் வெந்துபோயிருக்கிறாள்
இந்த வேதனையை சொல்ல
எந்த மந்திரமும் எனக்கு தெரியாது
மானம் பெரிதென்றுதானே
மாம்பழ பிரச்சனையில் மயிலேறினீர்
இப்போதும் அதுதான் பிரச்சனை
அம்மணத்தோடு இருக்கச்சொல்கிறார்கள் எம்மை
அம்மாச்சியின் பெயரை
அம்மேச்சி என்று அழைப்பதற்கு ஆலோசிக்கிறார்கள்
புத்தரொடு புரிந்துணர்வு உடன்பாடு காணமுடியாதாஉம்மால்
வானூர்திபூமாரியில்
வயப்படும் வள்ளிதெய்வானையின் பேச்சில்
என் பிரச்சனையை வடக்கு மாகாண சபையிடம் ஒப்படைக்காதீர்
பதவிப் பிரச்சனைகளில் நீரும்
உதவிக்கு அழைக்கப்பட்டிருப்பீர்
கடம்பசீலரே
உடம்பையும் கவனியும்
பஞ்சாமிர்த பழங்கள் அதிகம்
மருந்தடிச்சு மஞ்சாளனவை
அரிசி கூட பிளாஸ்ரிக்கில்
அவதாரமாம்
வெற்றிலை பாக்குடன் சேர்த்து
மற்றதையும் கலக்கிறார்கள்
ஏதோ மயக்கத்தில எல்லோரும்
கையை மீறிப்போய்விட்டதாய்
சொல்லிவிடாதீர்
பல்லிச் சொல்லுக்கே பயந்து சாகிற எங்களுக்கு
உம்மைவிட்டால் ஏதுவழி
ஐயனே அழகனே
உங்கள் தந்தை பன்றிக்கிரங்கி
பால் கொடுத்த கதை கேட்டு
நெக்குருகி நின்றோம் நெடுங்காலம்
அப்பனும் ஆத்தாளும் இல்லா பிள்ளைகளால் நிரம்பிய இம்மண்ணில்
அவர் பிரசன்னத்தை ஏன் காணோம்
அசுரர் கணையில் அன்னைவீழ
வெறும் முலை சப்பிய
முள்ளிவாய்க்கால் குழந்தையின் வேதனை கண்டு ஏன் சிவன் இரங்கிலர்
எலும்பும் சதையும் உயிரும் கலந்து
நந்திக்கடல் வெளியெலாம்
நாமிசைத்த சாமகானத்தை விஞ்ச
வேறேதுமுண்டா அப்பனே
நெற்றிக்கண்ணில் வந்த நித்திய அழகனே
உன் சன்னதத்தை
நிலத்திலும் நீரிலும் வானிலும்
சரிவர ஆடியவர்கள் நாங்கள்
உன்னைபோலவே
எங்கள் அந்தப்புரத்தையும்
சிதறாமல் அழகு படுத்தினோம்
உன் தமிழுக்கு வாரி இறைத்தோம்
உயிரை வாசல்தோறும்
வேறென்ன வேண்டும்
நீயும் நாமும் ஓரினமென்பதை ஓத
நாதமுழங்க நல்லையூரானே
வேலிதாண்டு வேலை எடு
நடக்கட்டும் தமிழர் திருவிழா

No comments:

Post a Comment

பிரசாதமே!!

  கொடிய போர் கண்ட நகரம் போலில்லை காலிழந்தவனுக்கு கால் முளைக்கும் உணர்ச்சியை கண்ணிழந்தவனுக்கு ஒளியூறும்  மனத்தை உண்டாக்கவில்லை யாரேனும் பறக்க...