Friday, October 19, 2018
உன் எசமானின் மரணச்சான்றிதழ் -பொன்.காந்தன்
அழகான எனது வீடே!
உனது எசமான் அவர்தான் எனது அப்பா
அகதியாய் இறந்துவிட்டார் அறிவாயா
உன்னில் நிறையும்
ஆயிரம் ஆயிரம் உறவுகளின் ஒப்பாரி
இங்கு அகதி முகாமில்
எனது ஒரு துளி கண்ணீரில்
ஒடுங்கிச்சாகின்றது
எனது அழகான வீடே
உனது எசமானி
அவர்தான் எனது அம்மா இறந்தபோது
அந்த மரணம்
நீ நான் எசமான் ஊர் உறவு கண்ணீர்என்று
எத்தனை பேரழகாய் இருந்தது
இதோ அகதி மகன் நான்
எனது அழைப்பின் வலி அறியா
கதவுகள் பல தட்டி
உனது எசமானின் இறுதிக்கணங்களில்
அழகான எனது வீடே!
இப்பொழுது நீ இல்லை
ஊர் இல்லை
உறவுகள் இல்லை
ஒப்பாரி இல்லை
படையல்கள் இல்லை
அஸ்தி இல்லை
உனது மன்னவனின் மரணம் முடிந்துவிட்;டது
உனது நினைவுகள்
இருந்த அளவுக்கு
உனது எசமானின் இரத்தத்தில்
சர்க்கரை கூட இருக்கவில்லை
எனது அப்பாவின் மரணச்சான்றிதழில்
அவரது மரணத்துக்கு காரணம்
அகதி நோய் என்று எழுது முடியாதுதான்!
(2009 ஊரிழந்து உறவிழந்து முள்ளிவாய்க்கால் கொலைக்களத்தின் பின் அகதிமுகாமில் அப்பா மரணித்தபோது எழுதப்பட்டது மரணத்தில் துளிர்க்கும் கனவு தொகுப்பில் இருந்து)
Subscribe to:
Post Comments (Atom)
பிரசாதமே!!
கொடிய போர் கண்ட நகரம் போலில்லை காலிழந்தவனுக்கு கால் முளைக்கும் உணர்ச்சியை கண்ணிழந்தவனுக்கு ஒளியூறும் மனத்தை உண்டாக்கவில்லை யாரேனும் பறக்க...
-
எங்கள் வீட்டில் இருந்து கிழக்காக புறப்படும்போது முதலில் முடியப்பர் வீடு ஆழ்வார் பிள்ளை வீடு வரை போகும் ஒரு குச்சொழுங்கை இடையில் குளியாப்பிட்...
-
போர் கால நினைவுகள் நிறைய உண்டு. போர் முடிந்து இப்போது பதின் மூன்று ஆண்டுகள் கடந்து விட்டன. போருக்கு பின்னரான ஆரம்ப காலங்கள் இப்போது நினைவுகள...
-
கோழிக்கு தவிடு வாங்க குஞ்சு போய் வா என்பாள் அம்மா ஐம்பது சதம் இலஞ்சம் கேட்பேன் ஆக்கினை தாங்கேலாமல் ஆமோதிப்பாள் கோணிப்பையுடன் இராசையர் கடை தா...
No comments:
Post a Comment