Friday, October 19, 2018

அப்பாவின் சுதந்திரம் பற்றிய குறிப்பு-பொன்.காந்தன்







அகதி வாழ்வைவிட அவருக்கு சாவு மேலானது

அப்பா செத்துவிட்டார்

சந்தோசம்

இப்போது அப்பா

முதுமையோடு கால் கடுக்க

நிவாரணத்துக்காக காத்திருக்க தேவையில்லை

சிலவேளை நெரிசலில் சிக்குண்டு

தடுக்கிவிழுந்து

எழமுடியாமல் தவிக்கவேண்டியதில்லை

அகதிவாழ்வைவிட அவருக்கு சாவு மேலானது



எண்ணற்ற பதிவு நடைமுறைகளுக்காக

ஓய்வின்றி

அகதிமுகாம் அலுவலகத்துக்கு

இனி அலைய வேண்டியதில்லை

பலவேளை முதுமைக்கு மதிப்பளிக்கா இளைஞர்களால்

படித்தவர் சிலராலும் இழிவுபடதேவையில்லை



அப்பா செத்துவிட்டார் சந்தோசம்

இப்போது அவர் அல்சரோடு காத்திருந்து

வயிறெரிந்து

மாலை மூன்று மணிக்கோ நான்கு மணிக்கோ

வரும் புளித்த மதிய உணவை

இனி அவர் உண்ணத்தேவையில்லை



ஒரு சிறிய அறைக்குள்

முப்பது நாற்பதுபேருடன் நெரிசலுக்குள்

கால் நீட்ட முடியாமல்

கையெறிய முடியாமல்

இரும முடியாமல்

குறட்டை விடமுடியாமலும்

கூனிக்குறுகி அவர் இனி தூங்கத்தேவையில்லை

கம்பி வேலிக்குள்

காலாறத்தெருவிலிறங்கி

நடக்க முடியாமல்

ஆசைகள் நூறு அடங்கிப்போன மரமாக

அவர் இனி வாழும் நிலை இல்லை



அப்பா செத்துவிட்டார் சந்தோசம்

அகதி வாழ்வைவிட அவருக்கு சாவு மேலானது





(2009 ஊரிழந்து உறவிழந்து முள்ளிவாய்க்கால் கொலைக்களத்தின் பின் அகதிமுகாமில் அப்பா மரணித்தபோது எழுதப்பட்டது மரணத்தில் துளிர்க்கும் கனவு தொகுப்பில் இருந்து)

'அகதிவாழ்வைவிடஅவருக்குச் சாவுமேலானது

அப்பா ! செத்துவிட்டார்

சந்தோசம்

இப்போதுஅப்பாமுதுமையோடுகால் கடுக்க

நிவாரணத்திற்காககாத்திருக்கத்தேவையில்லை

சிலவேளைநெரிசலில் சிக்குண்டு

தடக்கிவிழுந்து

எழமடியாமல் தவிக்கவேண்டியதில்லை

அகதிவாழ்வைவிடஅவருக்குச் சாவுமேலானது...'

(மரணத்தில் துளிர்க்கும் கனவு -120)



காலத்தின் சாட்சியாக நிற்கும் இக்கவிதை தான் வாழும் கொடிய சூழலின் மெய் உருக்காட்டியாக விளங்குகிறது.அப்பாவின்பாடல் உன் எஜாமானின் மரணச்சான்றிதழ் முதலான கவிதைகளும் இத்தளத்திலேயே இயங்குகின்றன.

எதிர்காலம் பற்றிய கனவுகள் தொலைந்த நிலையில் போலிமைகளால் உள்ளமைக்கப்படும் வாழ்வே நிகழ்கால இருப்பாக கட்டமைக்கப்படும் ஈழச் சூழலில்இஒளிமயமான காத்திருப்புக்கள் தொடர்கின்றன. ஆயினும் நம்பிக்கையிழந்து அல்லலுற்று ஏமாந்து வாழும் வாழ்வோ வேம்பெனக் கசக்கிறது.காருண்யம் மிக்க மனிதப்பண்புகள் மனிதனாலே வேட்டையாடப்படுகிறது.பொன்.காந்தனின் 'காத்திருப்பின் கடைசிக்காலம்' என்னும் கவிதையும்  இப்பின்னனியில் புறப்பொருட் படிமங்களுக்கூடாக தன்னை முன்மொழிகிறது.

இன்றைக்கும் நாளைக்கும் இடையில் உயிர் வாழ்வதற்கும் உணவுக்கும் அல்லாடும் மனிதனின் உயிர்த்துடிப்பை  'ஆடை'  கவிதையில் தரிசிக்கலாம்.அகதி முகாமில் கொடும் நெருக்கடிக்குள்ளாகி வதைபட்டு நொந்து நொடிந்து வாழும் மனித வாழ்வியல் உணர்வுத்தளத்தில் காட்சிப்படுத்துகிறது.



'ஆடை வழங்கலாம் என அகதி முகாம் ஃ ஒலி பெருக்கி அலறியதுஃ

விழுந்தடித்து ஃநிவாரண அட்டையோடு ஓடிய ஃ சனத்திரலில் ஃகலந்த

அவள் திரும்பி வரும்பொழுது ஃ வெயிலை அணிந்து வியர்வை கொட்ட ஃ

ஏமாற்றத்தை அணிந்து ஃ ஆடைகள் முடிந்ததாம் ஃ இனி அடுத்த முறையாம்

என்பதை ஃஃஅணிய முடியாத முகத்துடன் ஃ அணிந்து போன ஆடை நெரிசலில் ஃ

கிழிந்ததும் தெரியாமல் நின்றாள்...'

(மரணத்தில் துளிர்க்கும் கனவு -123)

விதிக்கப்பட்ட வாழ்வைப்பாடும் பொன்.காந்தன் கவிதைகள் மரணத்தில் துளிர்க்கும் கனவாகவும் வதைக்கப்பட்டு சிதைக்கப்பட்ட வாழ்வின் மேலெழும் துன்பியல்குரலாகவும் எழுகிறது



சி.ரமேஸ் விமர்சகர்



No comments:

Post a Comment

பிரசாதமே!!

  கொடிய போர் கண்ட நகரம் போலில்லை காலிழந்தவனுக்கு கால் முளைக்கும் உணர்ச்சியை கண்ணிழந்தவனுக்கு ஒளியூறும்  மனத்தை உண்டாக்கவில்லை யாரேனும் பறக்க...