பள்ளிக்கு அடுத்தவளவில்
ஒரு
வெளவால் மரம் இருந்தது
படித்த நாட்களில்
வெளவால் மரமும்
தலை கீழ் கோலங்களும்
மிரட்டும் சத்தமும்
மொச்சையும்
மனசில் கலந்துவிட்டது
வெளவால் மரம்
வெளவால் மரம்
வெளவால் மரத்துக்குள்
உண்மையில்
இன்னொரு மரம் இருந்தது
அதனை
ஒருபோதும் உச்சரித்ததே இல்லை
எங்காவது
பால்ய சிநேகிதர்களை
காணும்போது கேட்டிருக்கிறேன்
குணா சொல்கிறான்
அது இலவமரம்
இலவம் பஞ்சு பறப்பதை
தான் பார்த்திருக்கிறேன் என்றான்
சூரி சொன்னான்
அது அத்திமரம்
சுகந்தி சொன்னாள்
அது என்னுடைய சித்தப்பா வளவு
அது மருத மரம் என்கிறாள்
ஜெயா
வெளவால் பாஷையில் சொன்னால்
அது வீடு என்கிறான் கிண்டலாக
உண்மையில்
வெளவால்கள் மரத்தில்மட்டுமல்ல
மனத்திலும் தொங்கிவிட்டன
No comments:
Post a Comment