Friday, October 19, 2018

திரவியம்-பொன்.காந்தன்




அந்த வட்டங்களுக்கும்
இந்த முக்கோணம் சதுரங்களுக்கும்
சமரசம் செய்யாதபடிக்கு
நாமும் நல்லாய் குனிந்தோம்மாடுகள்

முதுகு தேய்க்க ஆளற்ற
குளியலறையில்
மாடுகளாய் உரசி
செவிமடலில் எஞ்சிய
சவர்க்கார நுரை காய
நுகங்களை பூட்டிக்கொள்வோம்

டாலர்களுக்கு உதிரப்படும்
புன்னகையை கழித்துவிட
மீதமிருக்கும் தனிமை
ஊரிலுள்ள
வேப்பமரத்தை சுற்றி
ஓடிப்பிடித்து விளையாடி
களைத்து விழும் கம்பளிக்குள்

எப்போதேனும்
எதிலாவது
ஆசுவாசப்பட நினைக்கும் போது
அம்மாவின் மருத்துவம்
வேலையற்ற தம்பியின்
பண்டிகை
பிறந்த நாள் கொண்டாட்டங்கள்
அக்காவின் பிள்ளைகளுக்கான
தாய்மாமன் சடங்கு சம்பிரதாயங்கள்
நேர்த்திகள் திருப்பணிகள்
நுகங்களை பூட்ட வைக்கும்

சிலரது
அறுபதாங் கலியாணங்களுக்கு
தனிமையாய்
போய்வருகின்ற போது
படிக்கின்றபோதே
சுமதியை
மதில் பாய்ந்து
கூட்டிக்கொண்டோடிய
ரவியின் தீர்க்க தரிசனம்
மிகச் சரியாகபடுகின்றது
அவர்களும் ஓங்கி நிமிர்ந்தார்கள்

இப்போது
நுகங்கள் தாங்கிய தோள்களில்
காயங்களின் வலியை
அடிக்கடி உணரமுடிகிறது
ஊரில் தம்பி
வாள் வெட்டு கோஸ்டியில்
ஒருவனாய் இருக்கிறான்
அம்மாவுக்கு
பிணையெடுக்க
அடிக்கடி பணம் தேவைப்படுகின்றது

No comments:

Post a Comment

பிரசாதமே!!

  கொடிய போர் கண்ட நகரம் போலில்லை காலிழந்தவனுக்கு கால் முளைக்கும் உணர்ச்சியை கண்ணிழந்தவனுக்கு ஒளியூறும்  மனத்தை உண்டாக்கவில்லை யாரேனும் பறக்க...