அந்த அழகிய பிலவை
அதன் சொந்தக்காரரிடம்
கொடுத்துவிடுங்கள் சகோதரர்களே!
கொடுத்துப்பாருங்களேன்
உடனே முற்றத்தை பெருக்கி
உங்களுக்கு பாய்விரிப்பார்கள்
எங்காவது சுள்ளிகளை பொறுக்கி
சுடசுடச்ரொட்டி சுட்டு
ஒரு தேயிலை சாயமும் தருவார்கள்
சந்தோசமாய் விடைபெற்றுப்பாருங்கள்
விரும்பினால் மீண்டும் வந்து பாருங்கள்
அவர்கள் ஏவுகணை பரிசோதனை
செய்து கொண்டிருக்க மாட்டார்கள்
வயல் உழுது கொண்டிருப்பார்கள்
படம் பிடித்துப்போங்கள்
உங்கள் ராசாக்களிடம் காட்டுங்கள்
மீண்டும் நீங்கள் வரலாம்
விமானத்தை செய்து கொண்டிருக்க மாட்டார்கள்
மாடுகளை சாய்த்துக்கொண்டு வருவார்கள்
படம் பிடித்துப்போங்கள் அதன் அழகை
உங்கள் ராசாக்களிடம் காட்டுங்கள்
மீண்டும் வாருங்கள்
யாரும் ரி 56 வைத்திருக்க மாட்டார்கள்
நந்திக்கடலில் மீனும் இறாலும் நண்டுகளும் குத்தி
கூழ் காய்ச்சி கள் அருந்தி மகிழ்ச்சியாக இருப்பார்கள்
படம் பிடித்துப்போங்கள்
உங்கள் ராசாக்களிடம் காட்டுங்கள்
முடிந்தால்
நீங்கள் வராமல் இருங்கள்
முன்பு வந்ததுபோல
உங்களின் சுதந்திரத்தை நீங்கள் உணர்வீர்கள்
No comments:
Post a Comment