Tuesday, October 20, 2026

 





வேலிக்கருகில் ஒரு விளாட்டு
நாரி சவண்ட பின்னும் நாலைந்து கிளையில்
பூமுகிழ்க்கும் பொலிவுடன் இன்றும்
பாறிவிழுமென்ற ஆருடமெல்லாம் மீறி
தேறி நிற்கிறது தெருவை எட்டிப் பார்க்கிறது
வேரினில் ஊறிய வைரம் வெளியில்
இலைத்துளிராய் மாரிப்பொழுதில் இறுமாப்பெய்தும்
மனதையும் கொஞ்சம் வருடி விடும்
ஏழெட்டுப் புயலை எதிர்கொண்டது
கழற்றி எறிய கங்கணத்துடன் வந்த காற்று
விழுத்தி எழுப்பி வேரை அறுத்தெடுத்து
கழுத்தில் பிடித்து வீசக் கனவும் கண்டது
கடைசியில் ஒன்றிரண்டு கிளைகள் இழந்து
விளாட்டே வென்றது
வீரியத்துடன் மறுபடியும் காய்த்துக்கொட்டியது
பாதியில் குரங்குகள் பங்கெடுத்தன
பறவைகள் பதம் பார்த்து திறம் என்று பாராட்டின
தேடி வந்து அணில்கள் கொந்தின
சிறிது நேரம் நின்று பாடின பரவசம் கண்டன
மீதி ஐம்பது நூறு வீட்டுக்குள் வர விதியிருந்தது
சாக்குப் படுக்கை விரித்து மூலைக்குள்
வேப்பங்குழை மூடி விடிந்தன சில நாள்
பிட்டுடன் சில சேர பேறு பெற்றன
கொட்டை சூப்புவோருக்கும் ஒப்புதலாகி உடன்பட்டன
மற்றவை சில மடையில் குந்தின
மந்திரம் சாம்பிராணிப்புகைக்குள் கலந்து
இந்திரலோகம் கண்டன
ஒன்றிரண்டு ஆடுமாட்டின் வாய்க்குள் ஐக்கியமாகின
காணிவளவு திருத்த வந்த ஒருத்தர்
ஒற்றை தளிரிலையோடு கொட்டைசில
முளைத்ததுக் கிடக்கக் கண்டு
வெட்டியெடுத்துப் போனார்
விளாட்டின் சந்ததிகள்
வேறங்கோ பெருகிக் காய்த்திருக்க வேண்டும்
பறவைகள் அணில்களின் பாட்டு
பரந்திருக்கிறது திசையெங்கும்
ஒற்றை மரவேர் புகழ் ஓங்குக
ஒரு போதும் ஈடாடாத் திண்ணியம்
பற்றி நிற்கும் சந்ததிக்கும் பல சவால் வெல்லும்
மறுபடியும் வசந்தம் துளிர்க்கும் கிளை

No comments:

Post a Comment

பிரசாதமே!!

  கொடிய போர் கண்ட நகரம் போலில்லை காலிழந்தவனுக்கு கால் முளைக்கும் உணர்ச்சியை கண்ணிழந்தவனுக்கு ஒளியூறும்  மனத்தை உண்டாக்கவில்லை யாரேனும் பறக்க...