எவனோ கேட்கிறான்
எவனோ
இந்த மலைகளுக்கும்
நதிகளுக்கும்
ஒரு விலை சொல்கிறான்
நானும் ஆட்டு மந்தைகளும்
குளக்கரையும்
அந்திப் பொழுதின் மயக்கமும்
கை கொட்டி சிரிக்கிறோம்
காதல் இரவில்
இந்த கடற்கரைக்கும்
நிலவுக்கும் ஒரு விலையுண்டு
வெண்புரவிகள் பூட்டிய தேரில்
முகில்களில் தோன்றும்
தேவியின் திருவிழி கேட்பதை
எவராலும் கொடுக்க முடியாது
பில்லியன் டொலர்களுக்கு
முற்றத்து மோக மல்லிகையை
பூக்காரி தரமாட்டாள்
தொட்டாச்சிணுங்கி வயற்காட்டில்
யார் வல்லரசு
கார் காலத்தின்
காட்டாற்றை பற்றி
பாட்டன் சொல்லித் தந்தான்
அந்த இரகசியத்திற்கும்
தூவானம் பட்டு
புல்லரிக்கும் மேனிக்கும்
ஒரு விலையுண்டு
அது தவிச்ச முசல் அடிக்கும்
வேட்டை குஞ்சனின்
ஆத்துமாவிடம்தான் கேட்க வேண்டும்
இந்த நிலவில்
யுவான் லேபிளை ஒட்ட முடியுமா
முள் முருக்கு குத்திவிடும்
நானும் ஒரு குளிர்கால
தாய் மண் வெளியும்
கூதல் காற்றும்
சில் வண்டுகளின் இரவும்
ஒரு வெண்சுருட்டும்
எனது தேசத்தின் விலையை
உயர்த்திக்கொண்டேயிருக்கிறோம்
எவரும்
எப்போதும் வாங்காதபடி
No comments:
Post a Comment