Sunday, March 6, 2022

செல்பி-காட்சி-மரணம்-பொன்.காந்தன்


செல்பி இந்த வார்த்தை போருக்குப் பிறகு எம்மோடு ஒட்டிக்கொண்ட வார்த்தை.முள்ளிவாய்க்கால் போர் முடிந்து அம்மண்ணில் இருந்து உடுத்த துணியுடன் மட்டும் கையில் ஒரு சல்லிப்பணமின்றி வெளியேறி அகதிமுகாமில் சோத்துக்காக ஏங்கிக் காத்திருந்தபின் மீண்டும் வெளியே வந்த போது ஒரு கைத்தொலைபேசி தவிர்க்க முடியாமல் இனி வாழ்க்கையில் அடுத்த பயணத்தில் குழந்தைக்கு பால் மா பெட்டிபோல தேவை என்றாயிற்று.வாழ்க்கையின் முப்பத்தாறு ஆண்டுகள் கைத்தொலைபேசியில் பேசியது கிடையாது.எப்போதோ சின்ன வயதில் அப்பாவின் பணிமனைக்குப் போய் அங்கிருந்த ஒரேஒரு எண்கள் சுழற்றும் தொலைபேசியில் யாருடனோ கலோகலோ என்று கூப்பிட்டுப் பார்த்ததுதான்.பிறகு ஒரு காலத்தில் தொலைதொடர்பு நிலையங்களில் போய் பணம் செலுத்தி பேசியதும்தான் தொலைபேசி அனுபவம்.ஆனால் கைத்தொலைபேசி ஒன்றை எப்போதும் ஒட்டிப்பிறந்த குழந்தைபோல வைத்திருக்கும் வாய்ப்பு அக்காலத்தில் அமையவில்லை.
கிட்டத்தட்ட வாழ்க்கையின் மூன்று தசாப்தங்கள் ஒரு புகைப்படம் எடுக்க ஒரு புகைப்பட கலைஞர் தேவைப்பட்டார்.சின்ன வயதில் கிளிநொச்சி கமலா ஸ்ரூடியோவில் எடுத்த புகைப்படம் இப்போதும் என்னிடம் உள்ளது. அது அந்த கறுப்பு வெள்ளை காலத்தை பேசிக்கொண்டிருக்கிறது.புகைப்படம் எடுக்கும் நாள் ஒரு திருவிழாதான்.குமரிகள் அந்த நாளில் கூந்தல் நீராடி மல்லிகை சூடியிருப்பார்கள் ஏதோ மல்லிகை வாசம் புகைப்படத்தில் மணக்கும் என்பதுபோல் இருக்கும் அவர்களின் பரபரப்பு.புகைப்படக்காரர் ஒரு புகைப்படம் எடுத்து அது கழுவி வரும் வரை காத்திருக்கும் காலம் அலாதியானது.தங்கள் அழகை தாமே காண தாமே இரசிக்க ஒரு காலத்தில் நீண்ட நாட்கள் காத்திருக்க வேண்டியிருந்தது.அக்காலத்தில் வாழ்ந்தோம் என்பதும் இனிமையானது.காத்திருப்புக்கு பின் ஒரு அஞ்சல் உறையில் வைத்து படங்கள் வரும்.படங்களில் சில சிலர் கண்களை மூடிவிட்டிருப்பர்.சிலர் அரைக்கண்ணில் கள்ளடித்தவர்போல காலம்பூராவும் அதில் இருப்பர்.புகைப்படங்களை பார்த்து விழுந்து விழுந்தும் சிரிப்பதுண்டு.புகைப்படக்காரர் றெடி சொல்லும்போது எப்படி நிற்கிறோமோ அதுவே கிடைக்கும்.பின் நிற்பவர் கொம்பு வைத்தால் அதை காலாதிகாலத்துக்கு வெட்டமுடியாது.
கட்டிடங்களும் தொலைபேசி கோபுரங்களும் தெரியாத எங்கள் கிராமத்து காலத்தில் தெரு குளம் மழைக்காலங்கள் காட்டுவீதிகள் வயல் சிற்றாறுகள் தென்னஞ்சோலைகள் இலையுதிர்காலங்கள் வசந்த காலங்களில் வார்த்தைகளுக்கு அப்பால் அழகில் காட்சிகள் இருந்தன.அப்போதெல்லாம் இந்த விழிகள் அவற்றை நெடுநேரமாய் கண்ணிமைக்காமல் இரசித்தது.அந்த காட்சிகளை பிறகு எத்தனை கோலங்கள் என்றாலும் பக்கங்கள் தரக்கூடிய இந்த மனமெனும் ஆல்பத்தில் எடுத்து பொத்தி வைத்துக்கொண்டிருக்கிறது.இப்போது கொண்டல் பூக்களில் மயங்கிய தாமரைகளில் கிறங்கிய மழைவெள்ளத்தில் எற்றி மகிழ்ந்த வானத்தில் நீர்க்காகங்ளோடு பேசிய ஒரு சின்னப்பையனின் செல்பிகளை ஒவ்வொன்றாய் எடுத்துதருகின்றது.
போருக்கு பிறகு கையில் கிடைத்த சிறுபணத்தில் முதன்முதலில் வவுனியா கடையொன்றில் வாங்கிய இணைய வசதிகள் இல்லாத அழைப்பு எடுப்பதற்கும் வரும் அழைப்பில் பேசுவதற்கும் குறுஞ்செய்தி பரிமாறவும் ஆன வசதி மட்டுமே இருந்த கைபேசியில் வரும் அழைப்புக்கள் மட்டுமே இங்கிதமும் சங்கீதமுமாய் இருந்தது.வாடிக்கையாளர் சேவை அனுப்புகின்ற தகவல்கள் மட்டுமே இன்பொக்சில் நிரம்பிக்கிடந்தது.அன்பாயிருக்கிறேன் என்று உணர்ச்சியை அனுப்ப ஒரு இதயச் ஸரிக்கர் கூட அதில் இருக்கவில்லை.ஆனால் இந்த இணைய உலகம் அந்த கைபேசியோடு இருக்கவிடவில்லை.அது கைபேசி மோகம் என்ற புதிய தடம்புரளும் பாதையில் இழுத்துக்கொண்டு வந்து நிறுத்தியிருக்கிறது.இப்போது ஒரு புகைப்படக்காரர் தேவையில்லை புகைப்பட எடுக்க ஒரு நாளும் காத்திருப்பும் தேவையில்லை. எங்களுக்கு பின்னே எல்லாமும் தெரிகிறது தெரியக்கூடாதவையும் தெரிகிறது.பின்னே கொடிய மிருகமும் எரியும் பிணங்களும் படுகுழிகளும் கூட தெரிகிறது தொலைந்து கொண்டிருக்கும் வசந்தமும்.முன்னேயோ இருளும் மரணமும் ஒரு செல்பியில் இருக்கிறது.
புகைப்படம் எடுப்பது கலை.செல்பியும் கூட அவ்வாறான கலையின் வண்ணமாக மாற்றலாம்.ஒரு செல்பி ஒருவரை மலையின் விளிம்பில் இருந்து மரத்தின் கிளையில் இருந்து கோபுரத்தில் உச்சியில் இருந்து நெடுஞ்சாலையின் வாகனத்தில் இருந்து வனங்களின் உறுமல்களில் இருந்து மரணத்துள் ஒருவரை வீழ்த்தாதவரை அது ஒரு நாயகன் நாயகியை படைப்பதுபோல பல மாயங்களை செய்யும்.சமுக வலைத்தளப்பசிக்கு சாப்பாடு அள்ளும் கரண்டி செல்பி.வலைத்தளங்களில் அனைத்துமுண்ணிகள் காத்திருக்கின்றன.அவைக்கு உயிரோடு துடிக்க துடிக்க சட்டியில் வேகவேண்டும்.ஒருவருடைய தூக்கத்தை கலைத்து அவருடைய கனவுகள் கலைந்து திடுக்கிடுவதை விழுங்க ஏராளம் காத்திருக்கின்றன.வானத்தில் இருந்து ஒருவன் குப்புற விழவேண்டும்.சமுக வலைத்தளத்தில் விருந்து வைக்க இன்று எதை பிடித்து அறுத்து சமைக்கலாம் என அலையவைக்கப்பட்டிருக்கிறார்கள்.உலகத்தில் எல்லாம் தின்று கொழுத்து ஒரு நாள் செல்பியோடு சேர்த்து ஒரு விழிமூடிய மனிதர் பிணத்தையும் கேட்கிறது.அண்மையில் ஒருவருடைய தொலைபேசி தவறுதலாக அழுத்தப்பட்டு நேரலையாகிவிட்டது.அது காற்சட்டைப்பையில் கிடக்கிறது அது எதையும் காட்டவில்லை.அதையும் கூட ஆயிரம் பேர் பாத்திருக்கிறார்கள்.எதுவுமில்லாவிட்டாலும் அதையும் பார்க்கவும் ஒரு கூட்டம் உண்டு.அந்த கூட்டங்களுக்காகவுமே செல்பியினால் மரணங்களும் நிகழ்ந்து முடிகின்றன.ஒரு செல்பி எடுத்தவரின் பிணம் ஒரு ஆழமான ஆற்றங்கரையில் மூடப்பட்டிருக்கிறது.அதை சுற்றி உறவினர்கள் கண்ணீரோடு இடிந்துபோயிருக்கிறார்கள்.ஆறு நிற்கவில்லை ஓடிக்கொண்டே இருக்கின்றது.
ஒரு காலத்தில் எங்கள் நிலத்தில் போர்க்களத்தில் புகைப்படக்காரர்கள் நின்றார்கள்.சன்னங்களும் குண்டுகளும் வேட்டையாடும் அவ்வேளையில் புகைப்படக்கருவியோடு காப்பெடுக்காமல் அக்காட்சிகளை தத்ரூபமாக பதிவாக்கிக்கொண்டிருந்தார்கள்.பல வேளைகளில் குண்டு பட்டு வீழ்ந்தார்கள்.அந்த புகைப்படக்கருவியின் கடைசிக்காட்சி கூட அவர்களின் முகம் கிடையாது.நிலம் போர்க்களம் தீ அதுவாகத்தான் இருந்தன.அந்த மரணங்களுக்கு ஒரு அர்த்தமும் இருந்தன

No comments:

Post a Comment

பிரசாதமே!!

  கொடிய போர் கண்ட நகரம் போலில்லை காலிழந்தவனுக்கு கால் முளைக்கும் உணர்ச்சியை கண்ணிழந்தவனுக்கு ஒளியூறும்  மனத்தை உண்டாக்கவில்லை யாரேனும் பறக்க...