Sunday, March 6, 2022

சந்தணமும் புழுதியும் -பொன்.காந்தன்


பீத்தல் கூரை
பெரிதாய் ஒரு காண்டாமணி இல்லை
பேரம்பலம் வீடு குடுத்த சின்னமணி
சிட்டி அஞ்சாறும்
தட்டியில் தொங்கும் சிரட்டையில் திருநீறும்
தடவ சந்தணக்கும்பாவும் இல்லாமல்
மட்டு மட்டான சுருவருக்குள்
மடப்பள்ளியின்றி
தொட்டுக்கும்பிடவொரு
பஞ்சாரத்தியோடு
பாவம்
செட்டின்றியிருந்தார் ஓர் காலம்
சிவனின் மூத்த பெடி ஊரில்
கட்டழகை பற்றி கணக்கெடுத்ததில்லை
ஒரு கயிலாய வாகனம் கேட்டு
அடம்பிடித்ததில்லை
சங்காபிசேகமும்
சமேதராய் உலாவும் கேட்டு
அந்த நாள் எங்கள் ஊர் தலைவர்
ராசரத்தினத்தார் கனவில் வந்ததுமில்லை
பந்தா இல்லாமல்
அந்த பரமசிவன் பிள்ளை
தந்தானப்பா பேரின்பம்
பெரிய நாவல் இரண்டு
பிள்ளையாயரடியோடு நின்று
சரிய கிளைகள் விட்டு
சாமரத்தை வீசியது
கரியமுகனுக்க்கு காத்து படபட
பெரிய தம்பி குடும்பம்
பிள்ளைக்கு நேத்தியென்று
பத்து கொத்தரிசி பொங்கி
படையலோடு கொடுத்த
பட்டுத்துண்டும் கழற்றிவிட்டு
பரமசுகம் கண்டிருந்தார்
நாதசுர மேளம் கேட்க
ஒரு நப்பாசை இருந்திருக்கலாம்
அப்பால் கனகாம்பிகை
அடுத்த ஊரில் தம்பி கந்தசாமியும்
கொஞ்சம் வசதியாய்
குதிரை மயிலும் குலுங்க பல மணியும்
கொடியேற்றம் கும்பாபிசேகமென்று
குதூகலித்திருக்ககண்டு
சின்ன எலியேனும் ஏறி சுற்றிவர
எவரும் தருவாரென ஏங்கியும் இருக்கலாம்
இருந்தும் காசில்லாத ஊரில்
ஓர் கடவுளாய் குந்தியதால்
பேசாமல் பொறுத்த ஒரு பெருமகன் அவர்
பிடியதனொருகுமையை
பிழைவிட்டு படித்தாலும்
களிப்புற்றுக்கிடந்த கனிவு அவருக்கு
வெளிக்கிட்டொன்றும் பெரிதாய்
விதமாய் உடுத்து
நகை நட்டு குலுங்க
நாலைந்து ஆறுபவுண் மினுங்க
மினக்கெட்டிருந்து பூசிமெழுகாமல்
ஒரு குச்சி காதில் கிடக்க
ஓடோடி வரும் முற்றத்து
செம்பரத்தை நித்தியகல்யாணியை
நிச்சயமாய் அவர் காதலித்தார்
சத்தியமாய் சொல்லுவேன்
அப்போதுதான் எனக்கு அழகாய் இருந்தார்
எப்போதாவது ஒரு நாள்
இளசுகள் எல்லாமும் சேர்ந்து
பக்கத்து குளத்தில் நீந்தி
பங்கயங்கள் நூறு பிடுங்கி
கொண்டு வந்தவரை குளிப்பாட்டியெடுத்து
முந்தைய நாளவர்
இருந்த கோலம்மாற்றி
குந்தியிருக்க வைப்பார்
அப்போதவரை கற்பூர ஒளியில் காண
கண்ணீர் வரும் ஆனந்தத்தில்
பின்னால் தெரியாமல்
அவரும் அழுவார் துடைப்பார்
அந்த ஒரு நாள்
சிவராத்திரியாய் கூட இருக்கும்
பின் வீதி புல்லெல்லாம் பிடுங்கி
பெரிசும் சிறுசுமாய்
கல்லு கஞ்சல் கூட்டியொதுக்க
காந்தி ராசு அழகுரத்தினத்தின்
டிரக்டர் பெட்டி மூன்று வரும்
பின்னால் ஏதோ கிளப்பி பதிச்சு
கிடத்தி விட்டுப்போவார்
அந்நாளில் அது பார்ப்பதே புதினம்
முன்னால் படங்கிழுத்து விரிப்பர்
சூடடித்த படங்கு வாசம்
மடங்காய் காற்றிலேறும்
நாவலிரண்டில் நான்கு பீக்கர்
ஒன்று பள்ளத்தடி
சின்னையா வீடு பார்க்கும்
மற்றதொன்று
மாக்கிரெட்டின் வளவு பக்கமும்
மதவு காட்டுக்குமாய்
இன்னொரு புதுப்பாலத்தடி நீட்டும்
எல்லாம் சரியோவென்று
செல்லையர் செற்றிங் பண்ணி
குழறல் கீச்சிடலுக்கு
திருகி முறுக்கி வயரை இழுத்து
வாயிலும் வச்சு சூப்பி
வருதோ கரண்டு பார்த்து
முடிவாய் முந்தை முழுமுதலே
மூத்த கணபதியேவென்று கரையும் பாடல்
அப்போதும்
தன் செல்வாக்கெவ்வளவென்று
தற்பெருமை காட்டாமல்
அப்படியேதான் இருந்தார் பிள்ளையார்
வள்ளிதிருமணம் காத்தவராயன்
வில்லுப்பாட்டு விடிவிடிய ஏறும்
நெல்லுப்படங்கில்
சிலது நித்திரையடிக்கும்
கொள்ளையழகாக குணுக்கம் சலங்கையோடு
சில்லென்ற பனிக்காலத்தில்
சிறு நடனம் ஆடும் மங்கையருக்கு
எங்கிருந்தோ சிலது விசிலடிக்கும்
எது அந்த காவாலி
முன்னிருந்து கிழவி திட்டும்
பேசாமல் இருணை என்று
பின்னால் ஒன்று தட்டும்
தன்னடியில் நடக்கும் தாளம் கூத்துக்களை
கண்டு மனம் சிலிர்த்தார்
என்ன இருந்தாலும்
இப்புழுதி வாசம்தான்
இனிய தன் சந்தணமென்று
அன்றே நினைத்த ஆண்டவன் இருந்தார்
இன்றும் அவர் இருக்கிறார்தான்
வாசலில் பெரு மணி
வசந்த மண்டபம்
ஏறியுலாவர வாகனங்கள்
என்றும் கொஞ்சம் வசதியுடன்
இருந்தும் அவர் கண்ணயரும் போதும்
தினமும்
அந்த நாள் சிவராத்தி
வந்து போகும் கனவாய்

No comments:

Post a Comment

பிரசாதமே!!

  கொடிய போர் கண்ட நகரம் போலில்லை காலிழந்தவனுக்கு கால் முளைக்கும் உணர்ச்சியை கண்ணிழந்தவனுக்கு ஒளியூறும்  மனத்தை உண்டாக்கவில்லை யாரேனும் பறக்க...