நெரிசலான பேரூந்தொன்றில் பயணமொன்றில்
தவறுதலாக
காலொன்றை மிதித்துவிட்டேன்
எந்த சலனமும் இல்லை
என் பக்கம் திரும்பவும் இல்லை
எங்கோ பார்த்திருந்தவருக்கு
மன்னிக்க வேண்டுமென்றேன்
எதற்கென்பதுபோல்
அவர் முகத்தில் புன்னகை
அடுத்த இறக்கத்தில்
அவர் இறங்க மணியடித்து
ஒவ்வொரு படியிலும்
ஊன்றிப்பிடித்து இறங்கினார்
ஒன்று பொய்க்கால்
என் காலுணர்ந்தது எதை
மன்னிக்க முடியாக் காலமொன்று
என் பின்னே
இறங்காமல் என்னை அழுத்துவதாய்
ஒரு பெரும் பாரம்
No comments:
Post a Comment