Sunday, March 21, 2021

வானவில்லாதல்-பொன்.காந்தன்



சில கணங்களில்
தடுமாறியவைகளும்
தவறவிட்டவைகளும்
நிரம்பிவழிகிறது சாலையில்
கருவாட்டுச் சிப்பமும்
வெங்காயமும் ஏற்றியபடி
ஊர்ந்துவரும் பாரவூர்திகளாய்
வெளிறிப்போன
திக்கற்ற இடுக்களில் எல்லாம்
தேடிச் சேர்த்து கோர்த்து
புதன் கிழமை சந்தையில்
கொண்டுவந்து கொட்டி
குவிந்தும் கிடக்கின்றன
எல்லாக் கையசைப்புக்கும்
சம்மதித்த பேரூந்துகளும்
தரிப்பிடங்களிலெல்லாம்
நின்று நிதானித்த சாரதிகளும்
எல்லாப்பக்கங்களிலும்
எழுதி முடித்த இதயதாகமும்
விளையாட்டுப்போட்டியின்
ஓட்டப்பந்தயக் கோட்டில்
பச்சை மஞ்சள் சிவப்பு கறுப்பு நீலம்
வானவில்லை
சட்டையில் ஒரு தேவமுகம் பூசிவிட
ஓடிப்பார்க்கிறது எல்லைவரை
தடுமாறியவைகளும்
தவறவிட்டவைகளும்
வென்று பார்த்து சிரிக்கின்றன
ஆம்
இந்த நாற்காலியில் அமர்ந்து
வீணையும் மீட்டலாம்
மதுவும் அருந்தி புலம்பலாம்

No comments:

Post a Comment

பிரசாதமே!!

  கொடிய போர் கண்ட நகரம் போலில்லை காலிழந்தவனுக்கு கால் முளைக்கும் உணர்ச்சியை கண்ணிழந்தவனுக்கு ஒளியூறும்  மனத்தை உண்டாக்கவில்லை யாரேனும் பறக்க...