எங்கள் ஊர்களின்
இந்த நாட்களும் மனிதர்களும்
சாலைகளும் வீடுகளும்
சில கணங்களில்
வேடிக்கை
விநோதமாக தோன்றும்
இன்னொரு கணம்
ஆச்சரியமும்
வெற்றியுமாக இருக்கும்
எல்லை கடந்து நீளும்
கனி பறிக்கும் கோடிவிரல்கள்
காடு முழுக்க மேயும்
மான்களாகிவிட்டார்கள்
அமுத சுரபிகளை விற்கும்
அங்காடிப் பக்கத்தில்
நிரம்பி வழிகிறது மனங்கள்
இன்னொரு நாட்களில்
இவர்களுக்கு
இவை எதுவுமே தேவைப்படாது
அப்போது
நட்சத்திரத்திலும்
வானவில்லிலும் இருப்பார்கள்
அவையுமின்றி
பிரபஞ்சத்தில் மிதக்கும்
வலியறியாப் பட்சியுமாவார்கள்
ஒரு நாள் இவர்களுக்கு
இவை
எதுவுமே தேவைப்பட்டதில்லை
பதுங்கு குழி ஒன்றை தவிர!

No comments:
Post a Comment