கறுப்பும் வெள்ளையுமாய்
குறுக்குக்கட்டோடு அழைக்கிறது
குடிலும்
கூட்டியள்ளிய குருமணல் முற்றமும்
காற்று வாங்க முடியாமல்
கனத்துக்கிடப்பதை பார்த்து
நாட்டுக்கட்டைகளின்
வீட்டுப்படலை திறக்கிறது
தூக்கியெறிந்து விட்டிந்நாளை
தொலைந்து போகிறேன் அங்கே
மாட்டுப்பட்டி சாணமும்
மல்லிகை பந்தலும் சேர்ந்து
வேட்டிக்குள் சிலிர்க்கிறது மோகனம்
விட்டில்கள்
நொட்டும் விளக்கொளியில்
ஆச்சியின் முகத்தில் தோற்றுவிடும்
அழகான தேவதைகள்
கஞ்சாங்கோரை சட்டி
அஞ்சாறடிக்கு சுற்றி அமைத்திருக்கிறது
பாதுகாப்பு வலையம்
எங்க கடிபாப்பம் எருமைமாட்டு நுளம்பு
பனையோலை தட்டிக்குள்
பரம இரகசியங்கள் என்னவாம்
குந்தியிருந்து கூட்டிய உள்வீட்டுள்
குனிந்தால் முகம் தெரியும்
கிண்ணியிலும் சட்டியிலும்
பஞ்சமில்லாமல் கிடக்கிறது
பால் சோறு மரவள்ளித் தீயல்
ஆச்சிக்குத் தூக்கமேது
சாய்த்து மாடுகளை கலைத்துவிட்டு
பேச்சியம்மன்
கோவிலடித் தோட்டத்தை
கொத்திப் பிரட்டி விட்டுவந்தால்
சீசீ என்று சிணுங்கினாலும்
சேர்த்து இழுத்து செல்லங்கொஞ்சி
மூச்சுவாங்கி
முழங்காலும் தேய்ந்து
கோர்த்துவிட்டுத்தான் தூங்கும்
குளுவன் வர்க்கம் அப்பு
வாச்சுதெனக்கென்று
வாஞ்சையோடு ஆச்சி முனகும் வாழ்வு
வண்ணங்கள் நூறு அதில்
பழங்கஞ்சியும் வெங்காயமும்
பச்சைமிளகாயும்தான்
பழைய வயாக்காரா
இளந்தாரி குலையாமல் அப்பு
இடுப்பு சள்ளை விழாமல் ஆச்சி
களைப்பில்லாமல்
ஏதோ கடகத்தை காவுவதாய்
இறங்கிவிட்டுள்ளார்
ஏறுவரிசையில் பத்து
முற்றம் முழுக்க
சிரட்டையும் தாயமும்
சிறுமணல்வீடும்
செத்துப்போகமுதலே
சொர்க்கத்தில் தான் வாழ்க்கை
இத்தனையையும் வளர்த்த
எங்கள் ஆச்சிதான் எட்டாவது அதிசயம்
சுத்தியடக்காத மண்கிணற்றை
படலையை
பறுகடைந்த வளவு மூலையை
இருபது கண்கள் கொண்டு பார்த்து
உலைவைத்து
தெளிவும் தேங்காப்பூவும் கலந்து
தடவி வளர்த்தெடுத்தார் குஞ்சுகளை
கார்காலத்து தாழ்வாரம்தான்
ஆச்சியில் அனுபவித்த நயாகரா
கந்தன் கோவில் காவடியும்
வில்லுப்பாட்டும்
அரிச்சத்திர மயான காண்டமும்
ஆச்சியும் அப்புவும் கண்ட
அதியுச்ச கலையின்பம்
வேலிப்பொட்டுக்குள் கிடைத்தது
ஆச்சிக்கு அடிக்கடி
வேறெங்கும் நிகரற்ற ஆசுவாசம்
காலடித்துவிட்டு கறபுறுவென்று
அப்புவின் இரைச்சல் இடிக்கெல்லாமும்
வரிசுக்கட்டி மறித்து
வாழ்க்கையை
வடிவமைத்த சிற்பி ஆச்சி
எல்லாம் போச்சென்று இடிந்ததில்லை
கல்லாயும் சமைந்ததில்லை
கனவெல்லாம்
பிள்ளைகளாய் நிறைந்தது
கையிலிருப்பதை வைத்து
பொய்யற்ற வாழ்வின் புல்லரிப்பு
ஐயனார் கோவில் நேத்தி
அந்தோனியாருக்கு மெழுகுதிரியிலும்
பத்து பிள்ளைகளுக்கு
பங்கிட்டிருக்கும் வேண்டுதல்
கொய்யா நட்டனர்
குளிக்கும் தண்ணீரடியில் கமுகு
கோடிக்குள் எலுமிச்சை
அப்புவின் மையம் எடுக்கும்போது
வளவு ஒரு பழமுதிர்ச்சோலை
பத்தும் பெருக்கிய வம்சத்தில்
பதினைந்து பேரப்பிள்ளை
மெய்யே மூத்தவன்
ஐயாவுக்கு ஒரு வெத்திலைக்கூறு
வேட்டியில் செருகிவிடு
என்றாச்சி இளகும் போது
எல்லாக்கிழவிகளின் கண்களிலும் மழை
இருந்தாலும்
அந்த வாழ்வுக்கு இல்லை ஈடு இணை

No comments:
Post a Comment