வெகு காலத்துக்கு முன்
அந்த இடத்தில்
பூங்காவனத் திருவிழாவில்
ஐஸ் கிறீம் வான் நின்றிருந்தது
சட்டைப் பையில்
சல்லிக் காசின்றி
பூச்சிகள் மொய்க்கும்
ரியூப் லைற்றுக்கு முன்
உல்லாசம் அனுபவித்த இரவது.
பின்னொரு பொழுதில்
மெல்லிசை கச்சேரிகள்
விடிய விடிய நடந்தது
காதல் பாட்டு களைகட்டியது
படங்கு விரித்தும்
மணலிலும் குந்தியும்
அந்த இரவில்
தன்னை மறந்தது ஊர்
உபயகாரர்
எம் ஜிஆர் இரசிகன்
மீசை சொல்லியது
திருட எதுவுமற்ற தேவலோகம்
அந்த இடத்தில்
ஒரு முறை
பகல் வேளையில்
கிருபானந்த வாரியார்
வந்து குந்தியிருந்து
பிரசங்கம் பண்ணினார்
பரவசத் தோற்றத்தின்
நினைவழிய நெடுநாளானது
தேவாரத் தமிழின் சுவையில்
மூழ்கிப் போயிற்று ஊர்
பிறகு வந்த காலத்தில்
கொட்டகை போட்டு
திலீபனின்
படம் வைக்கப்பட்டது
கவிதைகள் பாடப்பட்டன
கச்சேரிகள் நடந்தன
அதில்
என் இனமே என் சனமே
என்னை
உனக்கு தெரிகிறதாவென
வரிகள் காற்றில் நிரம்பியது
வெடியோசைகள்
தொலைவில் கேட்டன
தூக்கம் தொலைத்தது ஊர்
வாழையும்
கம்பமும் தோரணமும்
ரியூப் லைற்றுக்களும்
சிருஸ்டித்த மாயலோகமான
அந்த இடத்தில்
இலையுதிர்காலங்கள்
வசந்த காலங்கள் பற்றி
தெருவெழிக் கலைஞன்
டோலக்கை அடித்துப் பாடினான்
இழப்பதற்கான
இலைகளோடு நின்றன
ஊரின் விருட்சங்கள்
பல முறை வெறிச்சோடும்
அந்த இடத்தை
மறுபடியும்
ஓடிவந்து பார்ப்பதுண்டு
அடுத்த என்ன
எதிர்ப்பார்ப்பும் நிறையும்
சிறுவர்களை
பட்டாம் பூச்சியாக்கிவிட
தோழிகளை ரதிகளாய் மாற்ற
முடியாது போன தவிப்புடன்
தோல்வியுற்றதாயும் அது
இன்றைய தேதியில்
வாடிய முகத்துடன் பெண்கள் புகைப்படங்களை
ஏந்தியபடி அந்த இடத்தில்
அவர்களின் பாடல்
போரில் தொலைந்த
சொந்தங்களை பற்றியது
கண்ணீரில் மூழ்கியது
அந்த இடம்

No comments:
Post a Comment