Wednesday, November 4, 2020

சிலேற்றுடைத்து-,பொன்.காந்தன்



அஞ்சாறு சிலேற்றுடைத்து
அழுது வடித்து நேசறி போய்
மண்டைக் கண்ணால் பாக்கும்
கொண்டை வைத்த ரீச்சரிடம்
ஒன்றொன்றாய் எழுத்துக்கற்று
ஓவென்று ஒப்பாரியும் வைத்து
உயிரெழுத்துப் பன்ரண்டுஓகே
ஒருவாறு தப்பித்தோமென்றால்
கொண்டக்ரரிடம் பணியாரம்
கொடுத்துவிடும் கிழவன்கிழவி
முண்டு குடுத்தேறி வசுவில்
மூத்திரம் ஏந்திய பேரனைதேடி
கண்டி வீதியோரம் இறங்கிவர
காகம் இங்கு கரைந்து விடும்
கொண்டுவந்த புளுக்கொடியில்
பூந்திலட்டு வடையுண்டு செமிக்க
அந்திப் பொழுது வந்து விடும்
அரிக்கன் லாம்பை கொழுத்தி
அரைச்சுவரில் வைத்து விட்டு
தம்பிக்கிப்ப அனாஆவன்னா
ஒண்டுவிடாமல் தெரியமணை
கண்டறியாப் பெருமை துடங்க
எங்கயொருக்கால் என்ராயா
எங்களுக்கும் சொல்லெனவே
குறளி வித்தைக் குரங்காவேன்
பிடரியை சொறிந்து நெளிந்து
மறந்து போன ஒனா ஓவென்னா
ஒன்றிரண்டை குறைத்து
அகேனத்தில் முடியவும் அப்பு
அணைத்து கொஞ்சிவிடுவார்
அந்தப் புளுகத்தில் எழுத்து
இரண்டை சேர்த்தெழுதச்சொல்
உயிர் மெய்யும் படிக்கப்போக
ஒற்றை இரட்டைறூள் கொப்பி
கட்டர் பென்சில் அளிஇறப்பர்
மட்டைகளில் மாம்பழத்துடன்
மயக்கும் ஒரு பால பாடம்
பென்சில் சீவிக்கொட்ட
பின்னேயந்த றோஸ் சின்ன
அழி இறப்பர்களில் வாசம்
காற்றில் ஏறியென் நாசியுரச
ஏதோ வொரு இனிமையது
தனாவின் காலும் விசிறியும்
இரட்டை சுழிகளும் கொம்பும்
அரவும் குற்றும் சங்கிலிகளும்
பற்றிக் கொண்டு பாடமாக்கி
எச்சில் தொட்டும் அழித்து
ஏகப்பட்ட இடமும் கிழிந்து
கொஞ்ச சொற்களோடுநான்
அனாவரியில் அழகே அன்பே
ஆருயிரே ஆவாரம் பூவே
ஆற்றோரம் அசைந்தாடும்
அற்புத நாணல் வரமே
என்றேதான் சுகங்களாய்
சுற்றிவரும் சொற்களென
முற்றும் இனிய கவிதை
முகிழ்ந்திடும் என்றிருக்க
அறுவான் அடங்காப்பிடாரி
அழிவானென மிரட்டிற்று
கொவ்வை இதழே
கொந்தாத மாங்கனியே
கோலப் பைங்கிளியே
என்றேதான் இனிக்குமென
ஏராளம் கனவு காண
கொரொனாவும் ஒன்றாய்
உச்சரிக்க சொல்லாய்
நச்சரிக்க வைத்திற்று
அஞ்சாறு சிலேற்றுடைய
அன்று தொடங்கியது
இவ்வசிங்க சொல்லுக்குமா!

No comments:

Post a Comment

பிரசாதமே!!

  கொடிய போர் கண்ட நகரம் போலில்லை காலிழந்தவனுக்கு கால் முளைக்கும் உணர்ச்சியை கண்ணிழந்தவனுக்கு ஒளியூறும்  மனத்தை உண்டாக்கவில்லை யாரேனும் பறக்க...