என் வீட்டு வாசலில் நின்று
சாலையை பார்க்கின்றேன்
தென்னிலங்கை உல்லாசப்பணிகளின் பேரூந்து
ஒரு சிங்கள பைலாவுடன் கடந்து கொண்டிருந்தது
இந்த வாசலில் எத்தனை மாறுதல்கள்
புளுதிச்சாலையில்
ஓரங்களில்
மழைக்கு முளைக்கும் செடிகளும்
வேலியின் முள்முருக்கின் சிவந்த அழகான மலர்களும்
வேலியை தாண்டி நிற்கும் தென்னங்கீற்றுமாய் இருக்க
என் சிறுவயதில்
ஊருக்குள் நின்ற ஒரே ஒரு
ஏபோட்டி கார் கடந்து செல்ல
ஓடிச்சென்று பார்ப்பேன்
அதன் பெற்றோல் வாசம்
என் நாசியில்
ஏதோ கற்பூரவாச நினைவாய் இருக்கிறது
என் வாசலில்
என்னோடு கூடவே வந்து நிற்கும்
குட்டி என்று நான் கூப்பிடும் சிவலை நாய்
துவிச்சக்கர வண்டியில் செல்வோரை துரத்த
அவர்கள் திட்டியபடி காலை தூக்கி
மேலே வைத்தபடி பறக்க
நான் இந்த வாசலில் சிரித்தபடி நின்றிருக்கின்றேன்
பிறகொரு வயதில்
பள்ளித்தோழர்களும் தோழிகளும் கடக்கும்போது
கைகாட்டி மகிழ்ந்ததும்
பிறகுகொரு பருவத்தில் அவளொருத்தி
கடந்து செல்லும்போது
வாசலில் மறைந்து நின்று ரசிப்பதுதாய் இருந்தது
சிறுவயதில் ஒரு நாள் முதன்முதலாய்
தூக்கில் தொங்கி தற்கொலை செய்துகொண்ட
ஊர்கார பெண் ஒருவரின் பிரேதத்தை
பாடையில் சுமந்தபடி பறைமுழங்க
வெடிகளை கொழுத்தி எறிந்து காவிச்சென்றார்கள்
என் தாயார் வாசலுக்கு செல்லக்கூடாது
அவச்சாவு என்று தடுத்துவிட்டார்
பயத்தில் தொலைவில் நின்று
பிரேதம் கடந்து செல்வதை பார்த்திருந்தேன்
நான் முதல் வீதியில் சென்ற பிரேதம் அதுதான்
மழை காலங்களில்
எங்கள் வீட்டு வாசல் அழகாக இருக்கும்
ஊர் வெள்ளம் வாரடித்துக்கடக்கும்
அதில் கால் நனைப்பதும்
கப்பல் செய்து விடுவதும்
கையில் அள்ளி நீரை எற்றுவதும்
அச்சிற்றாறுக்கு பாலமிடுவதும்
முற்றிவிடாத நினைவின் பசுமை
என் வாசலில் வசந்த காலங்கள்
சடுதிமாய் மாறிற்று
ஒரு தடவை ஒரு குண்டு சத்தம்
ஒரு இளைஞர் பழைய துவிச்சக்கரவண்டியில்
வாசலை கடந்து வேகமாய் ஓடிக்கொண்டிருந்தான்
சற்று நேரத்துக்கு பின்னர்
இலங்கை இராணுவம் வாகனங்கள் துப்பாக்கிகளோடு
அச்சமூட்டியபடி இரைந்து கடந்தன
பிறகு வந்து இரவுகளில்
வாசலைக்கடந்து பூட்ஸ் கால்கள்
கடந்து கொண்டிருக்கும்
நாய்கள் குரைத்துக்கொண்டிருக்கும்
வீட்டுக்குள் தூக்கமற்ற பதட்டமிருக்கும்
காலையில் வாசலைப்பார்த்தால்
பூட்ஸ் தடங்களால் அது நிறைந்திருக்கும்
பிறகு இரவில் வாசலை கடந்து செல்லும்
மாடுகளின் கால் சத்தங்களுக்கும்
உயிர் கலங்கி இருந்தோம்
பிறகு ஒரு சந்தர்ப்பத்தில்
இந்தியப்படைகள் வாசலைக்கடந்து சென்றார்கள்
கூடவே சப்பாத்தி வாசம் சாலையை நிறைத்திருந்தது
சில வேளை வேலிகளை அறுத்து
வளவின் பின்வளவால்
இந்தியப்படைகள் கடந்துகொண்டிருந்தனர்
தங்கள் வாசலை அடிக்கடி மாற்றியமைத்தனர்
வாசல் பற்றி தடுமாறிப்போயிருந்தேன்
மதுபோதையில் உளறியபடி
வாசலை கடந்து செல்லும்
ஊர்க்காரர்களின் மண்வாசம் மாறிக்கொண்டிருந்தது
தெற்கிலும் எல்லைக்கிராங்களிலும்
இனவன்முறைகளால் அகதியானவர்கள்
வாசலை கடக்க பரபரபாய் விரிந்தது வாசல்
வாசல் தன்னை இழந்துகொண்டிருப்பதை உணரமுடிந்தது
பிறகு விமானங்கள் வந்து குண்டுகளை
எங்கள் ஊர்களுக்குள் வீசத்தொடங்கின
வாசலை கடந்து
காயமுற்றவர்களையும்
சடலங்களையும் இரத்தம் சொட்ட சொட்ட
காலை மாலை இரவு எதுவென்று இன்றி
காவிச்சென்றார்கள்
வாசல் தன் பொழுதுகளை இழந்தது
வேலிகளில் வந்து குந்தி இருந்து
பறக்கும் பறவைகளின் ஒலிகளை
வேலியில் எட்டி ஆட்டுக்கு குழை பறிக்கும்
கிழவிகளை வாசல் இழந்தது
வித்துடல்கள் கடந்தன
வாசலில் நின்று மலர் தூவினோம்
போராளிகள் துப்பாக்கி ஏந்தியபடி கடந்தார்கள்
பெருமையுடன் நின்று பார்த்தோம்
வெற்றிச்சேதிகளை அறிவித்தபடி
புரட்சிப்பாடல்களுடன் வாகனங்கள் கடந்தன
புல்லரித்துப்போய் நின்றோம்
பிறகு நானும் வாசலைக்கடந்து ஊரோடு சேர்ந்து
போய்கொண்டிருந்தோம்
வாசல்களில் நின்று வழிநெடுகிலும் பார்த்தார்கள்
பிறகு அவர்களுடன் எங்கள் பின்னே கடந்தார்கள்
என்னினிய வாசலை படைகள் கடந்து
எம்மை துரத்திக்கொண்டிருந்தன
எங்கள் வாசல்கள் ஒரு நிலையில் முற்றிற்று
எங்களுக்கு வாசல் திறந்தது
அந்த வாசலால்
மந்தைகள் போல சாய்க்கபட சென்றோம்
மீண்டும் எனது வாசலுக்கு அழைத்து வரப்பட்டு
என் வாசலுக்கு இலக்கமிடப்பட்டது
இப்போது என் வாசலை கடந்து செல்லும்
அநேகம் பேர் என்னை பற்றி சொல்லப்போவதில்லை
எனது பழைய வாசல் இறுகப்பூட்டியே கிடக்கின்றது
எனது வாசலை இனி திறக்கமுடியாது
திறக்க முடியும் என நம்புகின்றீர்களா
முடிந்தால் திறவுங்கள்
திறந்தால்
ஒரு சிறுவன் வெற்று மேனியுடன்
அரைக்காற்சட்டையுடன்
ஒரு சிவலை நாயுடன்
அந்த கடந்து செல்லும்
ஏபோட்டி காருக்காக காத்திருப்பான்
வாசலில்
எந்த துன்பத்தின் கோடுகள் அற்ற
மலர்ந்த முகத்துடன்!!
No comments:
Post a Comment