Tuesday, October 23, 2018

திலீபனைப்போலொரு பிறவியை கண்டால்-தியின் கதை,




இதயத்துடிப்புக்கள் இளைத்துப்போகிறது
நல்லூர் பார்த்தீபன்முன் அழுதுமாய்கிறது
களைத்துப்போயவன் கண்கள் சோர்கிறது
காலையாகியும் தூக்கம் நீள்கிறது
நாலுநாட்களாய் ஏதுமுண்ணவில்லை
நாயகன்முகம் வாடித்தொலைகிறது
நாலுதிசையிருந்து அன்னையவர்குலம்
வந்துபார்த்தங்கு அழுதுசோர்கிறது
என்ன தவம் இது எம் பிள்ளை
தன்னைவருத்தி தமிழர் குலம்வாழ
விண்ணை நோக்கி வேகமெடுக்கிறான்
அண்ணன் திலீபன்
என்ன கோலமிது இதயம் வெடிக்கிறது
மண்ணிலிருந்து போகவா மாதவம்
எண்ணி எண்ணி விம்மிவெடிக்கிறது தங்கையினம்

மெல்ல விழி திறக்கிறான் வீரப்புதல்வன்
தன்னை நேசிக்கும் மக்கள் கடல்பார்த்து
என்ன நினைத்தானே எழுந்து இருக்கிறான்
கண்கள் இடிந்து கைகள் சோர்ந்து
ஒட்டியுலர்ந்து உதடு வெடித்து
மண்ணை நேசிக்கும்
எம் மகாதுறவியின் கோலம்
சித்தர்களை துறவிகளை ஞானிகளை
மகரிசிகளை மண்வந்த ஆண்டவரை
பார்த்து அறிந்து பழகித் தொழுத
பரம்பரை முன்
சொட்டு நீரின்றி
ஒரு சுதந்திரப்பறவையொன்று
விட்டுபிரியப்படும் வேதனைகண்டு
கட்டி அழுகிறது கதைத்து விறைக்கிறது
கட்டியவீடு காலைமாலை எல்லாம்விட்டு
நல்லூர் வீதியில் நனையும் புளுதியில்
துவண்டு புரள்கிறது ஈழத்திரள்

மக்கள் மனதுகளில்மாசுவடுவின்றி
ஒற்றைமகனாய் உயர்ந்தவன் திலீபன்
என்று கோட்டையில் எம்கொடி பறக்குமோ
அன்றுதான் எம் ஆட்சித்தொடக்கம்
என்று மூச்சினில் நிறையச்சொன்னவன்
மக்கள் புரட்சியே கனவு கண்;டான்
மாட்சிமை மிக்க விடுதலை
மக்கள் புரட்சியால்மட்டுமே
சாத்தியம் என்று சதா நினைத்தான்
அச்சத்திய கனவு பலிக்குமென
பட்டிணி கிடந்து பதைத்தான்

ஒட்டிய உடல்
உள்ளே மரணத்தின் சேவகர்
கொள்கை வீரனின்
கோடி மக்கள் நேசிக்கும்
சத்திய மூச்சை
சாமரை வீசித்
தேவர் வலம்வர
பத்திரமாய் எடுத்து
பவளத்தேரொன்றில்
நித்தியவாழ்வுக்காய்
ஒத்திகைபார்த்திருக்க
வித்துடலொன்றின் முகவுரை
மக்கள் மத்தியில்
மனது திறந்தது

வறண்ட நாவில் விழுந்த
வரலாற்று வார்த்தைகளை
கடந்துவந்துவிட்டோம்
கனபேர் மறந்தும்விட்டோம்
அற்ப ஆசைகளை
அடிவருடும் பதவிகளை
எப்போதும் புலிகள்
ஏற்றது கிடையாது
அந்த இதயமும் இல்லை
இப்பொழுது நான்மடிவேன்
எனைத்தொடர்ந்துவருவார்கள்
ஏராளம் புலிகள்
அப்போது மலரும் ஈழம்
அடிமை விலங்குடையும்
தளராமல் நம்பி
தமிழரிடம் சொன்னான்
.இதுவரை விடியல்
எட்டவில்லை ஏனாம்
நடையிலே பயணம்
தளர்ந்தது ஏனாம்
அடியிலே மில்லர்
திலீபன் மாலதி
அற்புதம் உரமாய்
வேரிலே இருந்தும்
விளைச்சலில் நோய்
விழுந்தது ஏனாம்
கொடையிலே சிறந்த
கொழுந்துகள் ஆயிரம்
விதையென மண்ணில்
விழுந்தபோதும்
தமிழ் கொடியினை
நாட்டும் விதியில்லை ஏனாம்
ஒரு கொடியினில் பூத்த
மலர்களுக்கிடையில்
பிரிவினை வந்து
பிளந்திடும் நாளில்
இதுவரை நடந்து
விதியினை மாற்ற
திசைகளுக்கொன்றாய்
சுயநலம் சுமந்து
சுதந்திரம் தேட
அது வசப்படாது
திலீபனைப்போலொரு
பிறவியை கண்டால்
அடிமையின் வாழ்வில்
அகல்விளக்கேறும்

No comments:

Post a Comment

பிரசாதமே!!

  கொடிய போர் கண்ட நகரம் போலில்லை காலிழந்தவனுக்கு கால் முளைக்கும் உணர்ச்சியை கண்ணிழந்தவனுக்கு ஒளியூறும்  மனத்தை உண்டாக்கவில்லை யாரேனும் பறக்க...