பண்டைய ஞாபகத்தில்
படலையை திறக்குமுன்
கந்தையர் வீடுபோல
கடிநாய் இருக்குமென
தொண்டையை செருமி
தொங்கி நோட்டமிட்டு
மண்டையை சொறிந்து
மணியத்தார் பேத்தியின்
மாடிவீட்டின் முன்
மாங்கனிச் சொல்லெடுத்து
தங்கச்சி என்று
தாழ்மையாய் கூப்பிட்டு
எப்பதிலும் வராமல்
எட்டித் தலைநுழைத்து
எட்டத்து ஆளாய்
ஏழெட்டு வீடுகேட்க
வீட்டுக்காரரென்று
வீரிட்டு குரலிட்டு
பழைய இசைத்தட்டு
இடையில் சிக்கினாற்போல்
ஈரெட்டு முறை
இடைவிடாமல் கூப்பிட்டு
இளைத்துப்போயங்கு
இனியும் பொறுக்காமல்
கடிநாய் பாய்ந்து
காக்கிலோ எலும்பை
கைக்கணக்கில் எடுத்தாலும்
பரவாயில்லையென
பயம்நீக்கியுள் நுழைந்து
கால்வாசிதிறந்த
மேலாடையணிந்த
மினு மினுக்கும் சாளரத்தால்
அனுங்காமல் கண்வைத்து
ஆங்குள்ளே பார்த்தால்
கட்டையில்போகும்
கணக்கை தாண்டிவிட்ட
பட்டையுரிந்த பழசுகளும்
உடன் இளசுகளும்
சட்டையணியாத
சில சிறுசுகளும்
மொத்தமாய் முழுசும்
சின்னத்திரையிலே
சிக்கிச் சீரழிந்து
சிரித்து வாய்பிளந்து
ஐயோ! மணியம்
இதுகளைத்தான் ஈன்றாயோ!!
No comments:
Post a Comment