அது எனது ஊருக்கான கடைசிப் பேரூந்து
அதை தவற விடக்கூடாத பயணி நான்
ஆசனங்களும் நிரம்பி
பிதுங்கிவழியும் பயணிகளில்
நானும் ஒருத்தனாய் இருக்க எனக்கு சம்மதமானேன்
ஏதாவது ஒரு ஆசனத்தில்
ஒரு நுனியாவது கிடைக்க
எவர் முகத்தை பார்க்கவும்
எவருக்கு சிரிக்கவும் நான் சித்தமாயிருக்கின்றேன்
எனது ஆடைகள் கசங்குவது பற்றியோ
எனது சுவாசத்துள் நுழையும்
வியர்வை நாற்றத்தையோ
மதுவாசனையையோ கண்டுகொள்ளாது இருக்க
ஆசீர்வதிக்கப்பட்டிருக்கின்றேன்
எனது கடுப்பான முகத்தை கழற்றி எறிந்து
ஒரு பயணியின் விம்;பத்தை
அணிந்து கொண்டிருக்கின்றேன்
நான் போய்ச்சேர்ந்தால் போதுமென்பதற்கான
கடந்த நிலையில் ஆகிவிட்டேன்
நான் எனக்குள் இருக்கின்ற ஒருவனுடன்
பயணிக்ககிடைத்த இப்பயணம்
ஒருவகையில் சுகமானதுதான்
அவன் இனி
சாலை நெரிசலின் போதும்
வெளிநோயாளர் பிரிவில் காத்திருக்கின்றபோதும்
கீழ்மட்ட பணியாளர்களோடு அனுகும்போதும்
தொடர்ந்து வரும்
தொலைபேசி அழைப்புக்களின்போதும்
இன்னும் சில சந்தர்ப்பங்களில்
கூடவே வருவான் என்பதில் மகிழ்ச்சிதான் எனக்கு!
இறங்கும்போது
என்னில் ஏறிபயணிக்க
ஏராளம் பயணிகள் புன்னகையுடன்
காத்திருப்பதுபோல ஒரு பிரமை
No comments:
Post a Comment