கடிதம் வந்து கனகாலம்
எனக்கொரு கடிதத்தை
எவரேனும் எழுதுங்கள்
பீயோன் செல்லத்துரை
கீரோ சைக்கிளில்
பெல்லடித்து தரட்டும்
நின்ற கோலத்துடன்
நிமிசத்தில் வாசல்போய்
செல்லத்துரையருக்கு
சிரிப்பொன்றை
உதிர்ந்துவிட்டு
அந்தக்கடிதத்தை
ஆவலுடன்
நான் பறிப்பேன்
சின்ன என்வலப்பில்
சிறுகுருவி முத்திரையும்
எந்தன் பெயர் சுட்டி
எழுதிவந்த முகவரியும்
கண்ணிலோர் சிரிப்பை
கடதாசி தந்துவிடும்
வன்னிச்சிற்றூரில்
வாழ்கின்ற
என் நினைப்பில்
எண்ணி இதயத்தால்
எழுதுவீர் ஓர்கடிதம்
கண்ணில் முதலாக
சிவமயமோ
சிலுவையோ
மின்னும்படியாக
மேலே தொடங்கியுங்கள்
பாச விசாரிப்பால்
பனிக்கட்டும்
என் கண்ணீர்
நேசமுள்ள நெஞ்சத்தால்
நித்திய தெய்வத்தை
நெடிய நலம்வேண்டி
நீர் வரித்த பிரார்த்தனையில்
ஆயுள் கூடும் அரைவாசி
அப்புவின் சுகநலத்தை
அக்கறையாய் எழுதி
ஆச்சியின் திதிக்கு
காய்ச்சிப்படைப்பதற்கு
கதலியும் தேங்காயும்
கைக்குத்தரியும்
கையோடு கொண்டுவர
அன்புடன்
அழைப்புவிடும்
ஐயோ சொல்ல
மறந்துவிட்டேன்
மாமாவின் மேளுக்கு
சம்மந்தம் ஒன்று
சரிப்பட்டு வந்திட்டு
வெளிநாடாம் மாப்பிள்ளை
வெளிக்கிட போறாளாம்
கடையால போகைக்கை
கதைச்சிட்டுப்போனாள்
எழுதாத இன்னும்
ஏராளம் கதையை
உங்கள்
கடிதத்தின் வரிகள்
காட்டிடத்துடிக்கும்
கைதீன் ஆடு
கிடாய் இரண்டீன்று
கறக்கிறன் பால்
கடப்பு படலை
கால் உக்கிப்போச்சு
மடக்கி நிமித்தித்தான்
இறுக்கி சாத்தவேணும்
மறக்காமல் பெடியளுக்கு
எண்ணெய் வை சனியில
மனுசிக்கு இப்ப
சரியில்ல மாற்றம்
வியாழன்ல அவளை
விரதம் பிடிக்கவை
முன் வீட்டுஅவ
மோசம் போனதா
சுண்ணாகம் சந்தையில்
சோதியை கண்டபோது
உங்கால வரயுக்க
ஊர்பெடியன் சொன்னவனாம்
உண்மையோ சேதி
ஊருக்க முந்தி அவ
ஒரு மிடுக்கான பொம்பிளை
சந்தி சபையள
நிண்டு நடத்துவா
கண்டியோ கொழும்பிருந்துதான்
கலவரத்தில் வந்தவா
எண்டு வியளம்
கடதாசி வரி நிரம்பி
இடையால தெரியும்
வெளியிலும்
விடாமல் எழுதி முடிக்கும்
வெளிறாத கடிதத்தை
எவரேனும் எழுதும்
ஹேய்
ஹவ் ஆர் யூ
ரேக் கேர்
சீயூ
ஸ்ரிக்கர் சரசங்கள்
சத்தியமாய் ஒருபோதும்
பத்தியப்படாது பாரும்
No comments:
Post a Comment