இதயம் வெடிக்க பசியில் ஒருவன்
முன்னே துடிக்க
பார்த்திருந்து கசிகின்றது
நல்லூர் வீதியில் நம் சனம்
வந்தவனுக்கு எல்லாம் வாசல் திறந்து
விருந்தோம்பிய தமிழ்மனம்
தன் பிள்ளைக்கு சோறுட்ட முடியாத
துர்;ப்பாக்கிய காலம்
திலீபன் ஈழத்தின் பிள்ளை
அவனுக்கு தாயில்லை எ;ன்ற குறையே இல்லை
இன்று கோடிக்கணக்கான அன்னை
எப்பொழுதும் கேசம் கலைந்து கிடக்கும் அந்த அழகனுக்கு
வாழ வழியிருந்த அந்த வல்லவன்
தமிழினத்துக்காய் வீழக்கிடந்தான் வெறும் வயிற்றில்
இன்று சின்னத்திரை தொடர்களை விட்டு
எழும்பு முடியாத ஊனங்களாகிவிட்ட
ஒரு மூத்த இனத்தின் முகவரியை எழுதிய
பார்த்தீபனின் பன்னிரண்டு நாள் தொடர்
என் இதயத்தின் பாவங்களை களையட்டும்
ஜிமிக்கி கம்மலுக்கும் பீப் சோங்குக்கும்
பிக்பொஸ்சுக்கும்
ஓவியாவுக்கும் ஆராத்தி காட்டுகின்ற
அடிமைத்தமிழர்களுக்கு
ஒரு விளக்கீடு போல வெளிக்கின்றது
திலீபனின் தியாகம்
செல்ல பிள்ளையாய் வாழ்ந்திருக்கவேண்டிய
இராசையா வாத்தியாரின் வாரிசு
கஞ்சா மயக்கத்தில்
அம்மாவையும் தங்கையையும்
அடையாளம் தெரியாமல் தடுமாறி
இன்று இடம்மாறிக்கதவு தட்டும்
நடு ராத்திரி கழுசறைகளுக்காகவுமா செத்தேபோனான்
இரண்டாம் நாள் அந்த இளவலுக்கு
கண் இடிந்திருந்ததாம்
பசியல்லவா தாகமல்லவா
மண்ணுக்காக ஓயாதுழைத்த அந்த தேகத்தில்
இளைப்பிருக்குமல்லவா
எழுந்திருக்க முடியாதல்லவா
கண் செருகுமல்லவா கைசோருமல்லவா
எல்லாம் பொறுத்தான் அந்த புண்ணியன்
பூர்வீக மண்ணில் தமிழன் புன்னகை சிந்த
நாடி பிடித்துப்பார்த்தார்கள் அருகிருந்த நண்பர்கள்
அதிகாலை எழுந்த அந்த இளைய சூரியன்
இரவாக பகலாக தனக்காக காத்திருக்கும்
உயிர்மக்கள் முன்
நாவறண்ட போதும் நாலுவரி பேசவிரும்பினான்
நான் வானிலுள்ள
என் ஆருயிர் நண்பர்கள் அறுநூற்றைம்பது வீரருடன்
விழி மூடிப்போய்விடக்கூடும்
ஆயினும் மக்களே
தாயினும் மேலான தகவுகள் கொண்ட
தலைவோடிணைந்த
இந்த மாநிலச் சுதந்திரத்தை அடையுங்கள்
நானிருந்து பார்ப்பேன்
வானிருந்து என் நண்பரோடு
மில்லர் வெடிக்க போய்விடும்போது
விடைபெறும் வேளையில் நான் அருகிருந்தேன்
அந்த வீரியனின் புன்னகை முகம்
முன்னே வருகின்றது
நான் உங்களை விட்டு போய்விடக்கூடும்
ஆயினும் நீங்கள் சோர்ந்திடல் வேண்டாம்
வீறுடன் தொடரட்டும் விடுதலை வேட்கை
அவன்
விம்மி வெடிக்கின்ற நெஞ்சுகள் மத்தியில்
இந்த வரலாற்று வார்த்தைகளை உதிர்ந்தான்
இது சூரியன் உதிர்ந்த மகரந்தம்
இனி வாயினில் வார்த்தைகள் வரமறுக்கலாம்
என் ஊன்உடல் ஒடுங்கலாம்
உதடுகள் காயலாம் என்பதை உணர்ந்தே
தன் இதயவேட்கையை எழுந்துரைத்தான் பிள்ளை
முப்பது ஆண்டுகள் முன்
தமிழர் வீடுகள் இந்நாளில்
நித்திரையின்றி தவித்தன
இப்படி ஒரு உயிர்கரையும் யாகத்தை
நெற்றிக்கு நேரே தமிழினம் பார்த்ததே இல்லை
எப்படி இருந்திருக்கும் இதயங்கள்
விடிவுக்காய் செத்துக்கொண்டிருக்கின்றவன் முன்
அழுதுகொண்டிருந்தன கவிதைகள்
வரலாற்றில் இப்படி கவிதைகள் அழுதது இங்கேதான்
பரணிபாடிய பெரும்பாவலர்கள்
கருகும் மலரை கண்ணெதிரே வைத்து
வார்த்தை தேடிதேடி
கடைசியில் உடைந்தழுதது இங்கேதான்
கஸ்தூரிகள் வானதிகள்
மண்ணிலொரு மாதவன் மடியக்கண்டு
பெண்புலிகளாய் பிறப்பெடுத்ததும் இந்நாட்கள்தான்
நெடுந்தூரம் வந்துவிட்டோம்
நிறையவே மாறிவிட்டோம்
நிறையவே மறந்தும் விட்டோம்
ஓவியாவை தெரிந்த அளவுக்கு
அங்கயற்கண்ணியின் ஆழம் தெரியவில்லை
ஜல்லிக்கட்டில் கொதிப்போம்
கொள்ளியை அணையவிட்டு
பன்னீரா எட்பாடியா என விவாதம் வைப்போம்
அல்லது ஆளுனரிடம் அடகுபிடிக்க போவோம்
அனித்தாவில் மீண்டும் மீசையை முறுக்குவோம்
பிறகு வேறொன்றுக்காய் வாலை ஆட்டுவோம்
நவம்பர் இருபத்தேழில் முண்டியடிப்போம்
அடுத்தநாள்
யம்பருக்கு மேல் சண்டியக்கட்டி
குத்தாட்டம் போட்டு குதூகலிப்போம்
எதற்காக என் அப்பனே திலீபா
நீ இத்தனை வலி சுமந்தாய் என எழுத்தோன்றுகின்றது
உன்னை நினைத்து என் பாவத்தை களைவதை தவிர
எனக்கு வேறு வழி தெரியவில்லை!!
இப்பொழுது எலும்பை வைத்துத்தான் கடிபாடு அதிகம்
இருபதாவது திருத்தம் வருத்தமா வருத்தமில்லையா
இழுபாடுகள் இப்படித்தான்
வானத்தில் இருந்து இதையும் பார் மகனே!!
No comments:
Post a Comment